வியக்க வைத்த அதிகாரி | ஆயிரத்தில் ஒருவர்

வியக்க வைத்த அதிகாரி | ஆயிரத்தில் ஒருவர்
Updated on: 
1 min read

நான் அரசுத் துறையில் பணிபுரிகிறேன். நான் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது உடல்நிலை காரணமாகச் சில வாரங்கள் விடுப்பு தேவைப்பட்டது. விடுப்புக்கு அனுமதி வேண்டி என்னுடைய மேலதிகாரியைச் சந்தித்தேன். அரசுத் துறையில் உடனே விடுப்பு கிடைப்பது அரிது. சரியான விளக்கத்தை அளித்தால் மட்டுமே விடுப்பு சாத்தியம். ஆனால், என் மேலதிகாரியோ என்னிடம் எந்தக் காரணத்தையும் கேட்கவில்லை. மறுநொடியே அனுமதி அளித்துவிட்டார். எனக்கோ ஆச்சரியம். அவரை வியந்து பார்த்தேன்.

என் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டு அவர் கூறிய பதில் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. “ஒரு பெண்ணாக உன் நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனக்கு அந்த நேரத்தில் அலுவலகத்தில் யாரும் உறுதுணையாக இல்லாததால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. கர்ப்பக் காலத்தில் பெண்கள் மனநிலை நன்றாக இருப்பது மிக முக்கியம். இன்று நான் விடுப்பு கொடுக்கும் அதிகாரத்தில் உள்ளேன். அதனால்தான் உடனே சம்மதித்தேன்” என்றார்.

வீடோ அலுவலகமோ நம் சமூகத்தில் பல பெண்கள் கர்ப்பக் காலத்தைக் கடக்கும்போது பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலர் தான் அனுபவித்த இன்னல்களைப் பிறர் அனுபவிக்கும்போது, ‘நாங்களும் இந்தக் கஷ்டத்தை எல்லாம் கடந்துதான் வந்தோம். நீயும் அதைக் கடந்து வா’ என்றுதான் சொல்வார்கள். அந்த மனோபாவம்தான் இன்றும் பெண் அடிமைத்தனத்துக்கும் பலவித அடக்குமுறைகளுக்கும் காரணமாக உள்ளது.

ஒரு பெண் என்றைக்குத் தான் அனுபவித்த துயரங்களைத் தனக்குப் பின்வரும் தலைமுறை அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறாரோ, அங்கிருந்துதான் பெண் விடுதலை தொடங்குகிறது. அன்று என்னை நல்ல முறையில் நடத்திய, என் வாழ்க்கையில் என்றுமே நான் மறக்க முடியாத ஒரு நபராக மஞ்சுளா இருப்பார். வாழ்க்கையில் நாம் படும் இன்னல்களைப் போல யாரேனும் துயரப்பட்டால் அதைக் களைய உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நீயும் அதைக் கடந்து வா எனக் கூறாமல் இருப்பதே சிறந்த மனிதப் பண்பு.

- சு. ஆர்த்தி, சென்னை.

வியக்க வைத்த அதிகாரி | ஆயிரத்தில் ஒருவர்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அரசியல் நாடகமல்ல!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in