குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அரசியல் நாடகமல்ல!

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அரசியல் நாடகமல்ல!
Updated on: 
3 min read

சம்பவம் 1: அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறார் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதோடு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரம் படைத்தவர்கள் எனப் பலருக்காகவும் சிறார் கடத்தலில் ஈடுபட்டவர். பல பத்தாண்டுகளாக இதைச் செய்துவந்தபோதும் தன் அதிகார – பண பலத்தை வைத்து அனைத்தையும் மூடி மறைத்துவிட்டார்.

1996இல் பெண் ஒருவர் இது குறித்துப் புகார் அளித்தபோது 2005இல்தான் விசாரணை தொடங்கியது. சிறாரைப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்துவதற்காகவே தனித் தீவை எப்ஸ்டீன் உருவாக்கியிருந்தார். பிறகு லட்சக்கணக்கான பக்கங்களில் தரவுகள், ஒளிப்படங்கள், காணொளிகள், மின்னஞ்சல்கள் எனப் பலவும் ஆவணப்படுத்தப்பட்டு ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற பிரபலங்களின் பெயர்களைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. நினைத்தும் பார்க்கவும் முடியாத கொடூரத்தில் ஈடுபட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது.

சம்பவம் 2: தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி சிறார் பாலியல் குற்றவழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரும் தன்னுடைய தொழில்துறை நண்பர்கள், பிரபலங்கள் எனப் பலரது சிறார் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். இதற்கென சென்னையில் தனியாக ஒரு வீட்டைப் பராமரித்திருக்கிறார்.

2003 முதலே இவர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இழிசெயலில் வீரமணி ஈடுபட்டுவந்தபோதும் தன்னுடைய பண, அதிகார, அரசியல் செல்வாக்கால் - தொடர்புகளால் எந்தச் சிக்கலும் இன்றிப் பொதுவெளியில் வெற்றியாளராக வலம்வந்துகொண்டு இருந்திருக்கிறார்.

அநாகரிக அரசியல்

பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் உலகத்தின் எங்கோ மூலையில் மட்டுமே நடப்பதாகப் பலர் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டுத் தலைநகரிலேயே இதுபோன்ற குற்றங்கள் பல ஆண்டுகளாக மிகச் சாதாரணமாக நடைபெற்றுவந்திருப்பதைத்தான் வீரமணி வழக்கு உணர்த்துகிறது.

சிறுமி ஒருவரிடம் இவர் பாலியல்ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொள்ளும் காணொளி 2025இல் வெளியான பிறகுகூடப் பெரிய அளவில் எதுவும் நடந்துவிடவில்லை. போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2026 ஜூலை மாதமே காவல்துறையினர் இந்த வழக்கை முடிக்க நினைத்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மாவின் செயல்தான் இந்தக் கொடூரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் பரப்புரைக்கான சதுரங்கக் காயாக இந்தக் கொடூரத்தைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது. அரசியல் ஆதாயத்துக்காக மாறிமாறி வசைமாரி பொழிந்துகொள்ளும் கட்சிகள், இந்தக் குற்றத்தின் தன்மையை நீர்த்துப்போக வைத்து விசாரணையின் மீதான பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

நியாயமாகப் பார்த்தால் வீரமணியின் இருபது ஆண்டு காலக் குற்றமும் பேசப்பட வேண்டும். வீரமணி இதுபோன்ற குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படும் நிலையில் அப்போது சிறுமிகளாக இருந்தவர்கள் இப்போது முப்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கக்கூடும். அவர்களைப் பற்றிய விசாரணையோ அண்மையில் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளின் உடல் – மன ஆரோக்கியம் குறித்த நடவடிக்கைகளோ ஏன் பெரிதும் கருத்தில்கொள்ளப்படவில்லை?

கடமை தவறும் அதிகாரிகள்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் நீதி வழங்கும் அமைப்புகளும் விசாரணை அமைப்புகளும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்தாலே குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால், காவல் துறை, நீதித்துறை, அரசு நிர்வாகம் என ஒவ்வொரு அமைப்பும் அதிகார வர்க்கத்தால் தங்கள் மீது திணிக்கப்படும் நிர்பந்தத்தைக் காரணம் காட்டித் தங்கள் கடமையில் இருந்து விலகுவதையும் பொறுப்பேற்காமல் தப்பித்துவிடுவதில் முனைப்புடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

2020இல் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை - மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் கொடூரச் செயலை அம்பலப்படுத்தி உண்மையை உரக்கச் சொன்னவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ரேவதி. ஒரு தலைமைக் காவலரால் அவர் நிலையில் இருந்து உண்மையின் பக்கம் நிற்க முடிகிறபோது, உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஏன் அதிகார மட்டத்துக்குத் துணைபோக வேண்டும் என்கிற சாமானிய மக்களின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகாரைப் பதிவுசெய்யாமல், விசாரணை மேற்கொள்ளாமல் குற்றவாளிக்கு ஆதரவாகவோ குற்றத்தை மறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிற அதிகாரிகள் மீது அப்போதைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் எல்லாமே கண்துடைப்பு நாடகங்களே. குற்றத்தை மறைப்பது என்பது குற்றத்துக்கு நிகரான குற்றம்தானே. 2025 செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் இளம்பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரத்தைத் தொடர்ந்து இரண்டே நாள்களில் அந்தக் காவலர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், வீரமணியின் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுக் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கை முதலில் விசாரித்த காவல் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இன்னும் சில நாள்களில் பரபரப்புகள் அடங்கிய பிறகு, இவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பக்கூடும். இவர்களைப் போலவே பலர் இன்னும் பல குற்றங்களுக்குத் துணைபோகக்கூடும். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பிவிடுமா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்துவிடுமா?

தண்டனைக்கு உட்பட மறுக்கும் குற்றங்கள்

ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் எளிய பின்புலம் கொண்டவர்களையும் பணபலம் படைத்தவர்களையும் நாம் ஒரே தராசில் நிறுத்துவதில்லை. எளியவர்களிடம் தன் அவ்வளவு வலுவையும் காட்டும் அதிகார வர்க்கம், வலியோரிடம் அடங்கிப்போய்விடுகிறது. வீரமணியின் வழக்கிலும் அதுதான் நடந்திருக்கிறது. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக வீரமணி செயல்படுத்திவந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒருவருக்குக் கூடவா தெரியாது? அவர்களில் ஒருவர்கூட நீதியின் பக்கம் நிற்கத் தயாராக இல்லை என்பதைத்தான் இந்தத் தாமதம் உணர்த்துகிறது. இப்போதுகூட, பெண் நீதிபதி ஒருவரின் கேள்விதான் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக்கி இருக்கிறது.

அவரும் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்திருந்தால் எல்லா உண்மைகளும் வெளியே வராமலே போயிருக்கும். நம்மைச் சுற்றி எத்தனை வீரமணிகள் இருக்கிறார்களோ, எத்தனை குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறர்களோ என்கிற பதற்றம் எழாமல் இல்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் இந்தக் குற்றங்களின் முக்கிய சாட்சிகள். அவர்களைக் கண்டறிவதிலும் பாதுகாப்பு அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டியவர்கள் குற்றவாளிக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்.

விசாரணை அமைப்புகளின் எதேச்சதிகாரப் போக்குக்கும் வன்முறைக்கும் பயந்துதான் பாதிக்கப்படும் பலர் காவல் துறையினரை அணுகுவதே இல்லை. விசாரணை என்கிற பெயரால் அலைக்கழிக்கப்பட்டு நீதிமன்றங்களின் வாயிலில் நீதிக்காகக் காத்திருக்க வேண்டிய துயரநிலை, அவர்களைக் குற்றங்களையும் அநீதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளுகிறது.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப் படுவார்கள் என்கிற நம்பிக்கையை எளியோருக்கு அளிக்காதது ஆள்வோரின் தோல்வி. அவர்கள் தோற்க, தோற்க நம் பெண்களும் குழந்தைகளும்தான் பலியாகிக்கொண்டிருப்பார்கள். உலகம் முழுவதும் பத்தில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறது என்கிறது யுனிசெஃப். குற்றவாளிகள் நமக்குத் தெரிந்தவர்களாகவோ வீரமணியைப் போல் நிறுவனமயமாக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுகிறவர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்கிற நிலையை நோக்கி அரசையும் அதிகார வர்க்கத்தையும் நகர்த்துவதுதான் பெண்கள் - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும். அதைத் தவிர மற்ற எல்லாமே அரசியல் நாடகங்கள்தான்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in