உறுதியால் எங்களை உயர்த்தியவர்! | ஆயிரத்தில் ஒருவர்

உறுதியால் எங்களை உயர்த்தியவர்! | ஆயிரத்தில் ஒருவர்
Updated on
1 min read

மூன்றாம் வகுப்புகூடப் படிக்காத என் அம்மா வெள்ளிமலர், தன்னுடைய இரண்டு குழந்தை களைப் படிக்க வைத்து அரசு வேலைவரை எட்ட வைத்தவர். தன்னைவிட16 வயது பெரிய ஆணை என் அம்மாவுக்குத் திருமணம் செய்துவைத்தபோது அவருக்கு 16 வயது. ஏற்கெனவே திருமணமான ஒருவருக்குக் குடும்பத்தின் நிர்பந்தத்தால் இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். குழந்தை மனம் மாறுவதற்குள் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கொடுமை; அதுவும் இரண்டாவது மனைவியாக.

பெண் அடக்குமுறை, வறுமைக்கு இடையில் இரண்டு குழந்தைகள். கணவன் குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத நிலையில் எங்களை அரசுப் பள்ளியில் படிக்கே வைப்பதற்கே அம்மா திண்டாடினார். நோட்டு, பேனா வாங்கக்கூட இயலாத நிலையில் அனைத்தையும் தனியாளாகச் சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்.

களை பறித்தல், வீட்டு வேலைக்குச் செல்லுதல், கரும்பு தூக்குதல், பருத்தி எடுத்தல் எனப் பல வேலைகளைச் செய்துதான் எங்களைப் படிக்கவைத்தார். என் சகோதரன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, நான் அரசுப் பணியில் இருக்கிறேன். என் அரசுப் பணி ஆணை கடிதத்தை என் அம்மாவின் காலடியில் வைத்து நன்றிக்கடன் ஆற்றினேன். என் அம்மா அவர் அடைய முடியாத உயரத்தை அனைத்துச் சாவல்களையும் தாண்டி எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

- விஜயலட்சுமி, அரியலூர்.

உறுதியால் எங்களை உயர்த்தியவர்! | ஆயிரத்தில் ஒருவர்
ஆண்பிள்ளைகள் எங்கே? | என் பாதையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in