

அண்மையில் எங்கள் ஊரின் மாநகராட்சி உறுப்பினருடன் சேர்ந்து இருபாலரும் படிக்கும் அரசாங்கப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பள்ளியில் பெரும்பாலும் எல்லா வகுப்புகளிலும் மாணவர்களைவிட மாணவியர் அதிகமாக இருந்தனர். ஆண்பிள்ளைகளைவிடப் பெண்பிள்ளைகள் அதிகமாக இருக்கிறார்களே எனப் பெருமிதத்தோடு நினைத்தேன். ஆனால், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது.
அங்கிருந்த பெண்பிள்ளைகளிடம் அவர்களுடைய அண்ணன், தம்பி எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் எனக் கேட்டேன். சொல்லி வைத்ததைப் போலப் பலரும் தங்களது சகோதரர்கள் தனியார் பள்ளியில் ஆங்கிலவழியில் படிப்பதாகச் சொன்னார்கள். என் பெருமிதம் சட்டென்று உடைந்துபோனது. அந்தப் பள்ளியில் மாணவியர் அதிகமாக இருந்ததற்கான காரணமும் புரிந்தது.