

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ‘சிறந்த திருநங்கை’ விருது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி. ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராமிய நடனக் கலைஞர், நாடகக் கலைஞர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்ட ஐஸ்வர்யா, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகக் கடந்த 22 வருடங்களாகச் செயல்பட்டுவருகிறார். தற்போது பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கிவிட்டனர் என நம்பிக்கை தெரிவிக்கும் ஐஸ்வர்யா அவர்களை முன்னேற்றப் பாதையில் ஒருங்கிணைக்கும் பணியை அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார்.
திருநங்கையாக ஆவதற்கு முன்பு பெற்றோர்கள் அவருக்கு இட்டிருந்த பெயர் அசோக். அம்மா, அப்பா, இரு அக்காக்கள் எனக் குடும்பத்தின் கடைக்குட்டியாகப் பிறந்த அசோக், ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தார். விஷயம் கேள்விப்பட்டதும் அவருடைய அம்மா, “பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி எப்போதும் நீ என்னுடைய குழந்தைதான்” என்று அவரை அரவணைத்துக்கொண்டார். அம்மாவின் அரவணைப்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் 19 வயதில் திருநங்கையாக மாறினார் அசோக்.
கலை தந்த வாழ்வு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவருக்குக் கலை தந்த வாழ்வு அளப்பரியது. “குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. சிறு வயது முதலே மாறுவேடமணிவது, நாடகங்களில் நடிப்பது போன்ற வற்றில் ஆர்வமிருந்ததால் கலைத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். நாடகக் குழுக்கள் திருநங்கைகளைச் சேர்த்துக்கொள்ளாத காலம் அது. சொந்த முயற்சியில் தவலை கரகம், அடுக்குக் கரகம், சாகச கரகம் போன்ற நடனங்களை கற்றுக்கொண்டேன். திருநங்கையாக மாறிய என்னைத் தன் மகளாகத் தத்தெடுத்துக் கொண்ட வேலூர் கங்கம்மாளின் வழிகாட்டுதல்படி ஆரணி சிவா அமுது நாடக மன்றத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். ஒரு நிலையான வருமானம் கிடைக்கப்பெற்ற பின் இன்னும் பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தேன். லயோலா கல்லூரிப் பேராசிரியர் காளீஸ்வரன் சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் எனக்கு வாய்ப்பளிக்க, எனது கலைப் பயணம் விரிவடைந்தது. கலை எனது வாழ்க்கையை, எனது அடையாளத்தை மாற்றியது” என்கிறார் ஐஸ்வர்யா.
கலைக்கு அப்பால்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று கிராமிய நடனங்களை அரங்கேற்றி வந்த ஐஸ்வர்யாவின் அடுக்குக் கரக ஆட்டத்துக்கென தனி ரசிகர் கூட்டம் அமைந்தது. வாழ்க்கை மாறத் தொடங்கிய நேரத்தில் எதிர்பாராதவிதமாகப் புற்றுநோய் பாதிப்பால் அவருடைய அம்மாவின் உயிர் பிரிந்தது. உடைந்து போகாத அவர் தனது கலைப்பயணத்தின் ஆரம்பம் முதல் ஆதரவு அளித்து வந்த அம்மாவின் இழப்பையும் கடந்து, கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றத் தொடங்கினார். “நான் பல்வேறு தடைகளைக் கண்டிருப்பதால் இந்தத் திருநங்கைச் சமூகத்திற்கென ஏதாவது செய்ய வேண்டுமென்ற யோசனை எப்போதும் இருந்தது. கலைத் துறையில் ஓரளவு நல்ல நிலையை எட்டத் தொடங்கிய பிறகு குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் திருநங்கைகளுக்கான கல்வி, உணவு, இருப்பிட உதவிகளைச் செய்யத் தொடங்கினேன். இதில் பயனடைந்தவர்கள் இன்று நல்ல நிலையை எட்டியிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கரோனா காலத்தில் கலைத் துறையைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அப்போது நான் சேமித்து வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வைத்து கலைஞர்களுக்கு உதவினேன். திருநங்கைச் சமூகத்திற்கும் கலைத் துறைக்கும் நான் செலுத்த வேண்டிய நன்றிக்கடனாகவே இதைப் பார்க்கிறேன். இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும்” என்கிறார் ஐஸ்வர்யா.
எல்லாரும் சாதிக்கலாம்
கல்வியில் நல்ல நிலையை எட்டும் திருநங்கைச் சமூகத்தினர் இன்னும் பல உயரங்களை அடைவார்கள் என ஐஸ்வர்யா நம்பிக்கை தெரிவிக்கிறார். “திருநங்கைச் சமூகத்தினரை கலைக் குழுக்களில் இப்போது சேர்த்துக்கொண்டாலும் நானே பயிற்சி அளித்து நிகழ்ச்சிகள் நடத்தும் 20 திருநங்கைகளை இணைத்து ‘அசோக் திருநங்கைகள் நாடக சபா’வை தொடங்கியிருக்கிறேன். கலைத்துறை மட்டுமின்றி கல்வியறிவும் திறமையும் இருந்தால் எந்தத் துறையானாலும் திருநங்கையினர் சாதிக்கலாம். மாற்றம் தொடங்கியிருக்கிறது” எனச் சொல்லி முடிக்கிறார் ஐஸ்வர்யா.