

பெண்களின் புற – அக வாழ்க்கையை எவ்வித நகாசுமின்றிப் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்தவர் அநுத்தமா. 1900களின் மத்தியில் எழுதவந்தவர்களில் அநுத்தமாவின் எழுத்து தனித்துவமானது. நூற்றாண்டைக் கடந்த பிறகும் அநுத்தமாவின் எழுத்து அர்த்தமுள்ளதாக இருப்பது அவரது படைப்புத்திறனுக்குச் சான்று. அதே நேரம் தனது படைப்புகளில் அவர் சுட்டிக்காட்டிய குடும்ப அமைப்பின் அழுத்தத்திலிருந்து பெண் சமூகம் இன்றைக்கும் முழுதாக விடுபடவில்லை என்பது வேதனையானது.
இன்றைய ஆந்திரத்தின் நெல்லூரில் 1922 ஏப்ரல் 16 அன்று அநுத்தமா பிறந்தார். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி. பள்ளி வயதில் பத்மநாபனுடன் திருமணம். திருமணத்துக்குப் பிறகு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வானார்.
1947இல் இவர் எழுதிய முதல் கதையான ‘அங்கயற்கண்ணி’ கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. இவருடைய மாமனார்தான் இவருக்கு ‘அநுத்தமா’ என்கிற புனைபெயரைச் சூட்டினார். இவரது ‘மணல்வீடு’ நாவல், கலைமகள் நடத்திய இலக்கியப் போட்டியில் 1949இல் முதல் பரிசு பெற்றது. 1956இல் இவர் எழுதிய ‘பிரேமகீதம்’ நாவல் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது.
நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியில்தான் இவரது பெரும்பாலான படைப்புகள் அமைந்தன. தெலுங்கு, இந்தி, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, ரஷ்யன், ஆங்கில மொழிகளை அறிந்திருந்தார். ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இவர் ஈடுபட்டார். இவர் எழுதிய ‘ஒரே ஒரு வார்த்தை’ தமிழின் முதல் மனோதத்துவ நாவல் என அந்நூலின் முன்னுரையில் தி.ஜ.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். அநுத்தமாவின் ‘கேட்ட வரம்’ நாவல் பிரசித்திபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கேட்டவரம்பாளையம் என்னும் ஊரில் நடைபெறும் ராமநவமி விழாவையும் அதைச் சுற்றிய சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாவலைப் படித்துவிட்டுப் பலர் அந்த ஊருக்குச் சென்றதாகத் தகவல் உண்டு. ‘கேட்ட வரம் அநுத்தமா’ என்று குறிப்பிடப்படும் அளவுக்கு அந்த நாவல் அவருக்குப் பெயரைப் பெற்றுத்தந்தது.
பறவை நோக்குதலில் ஆர்வம் கொண்ட அநுத்தமா பறவைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘கம்பீர கருடன்’, ‘வானம்பாடி’, ‘வண்ணக்கிளி’, ‘சலங்கைக் காக்காய்’ ஆகிய நான்கு சிறார் கதைகளை எழுதியுள்ளார். ஜெர்மானிய எழுத்தாளர் மோனிகா ஃபெல்டன் எழுதிய சகோதரி நிவேதிதா பற்றிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சமூக நாவல் பாணியில் தொடர்ந்து எழுதிய அநுத்தமா, ‘தென்னகத்து ஜேன் ஆஸ்டின்’ எனப் புகழப்பட்டார். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், வானொலி நாடகங்களைப் படைத்த இவர் 2010 டிசம்பர் 3 அன்று மறைந்தார்.