பெண்ணின் உணர்வைச் சொல்லும் தூரிகை

பெண்ணின் உணர்வைச் சொல்லும் தூரிகை
Updated on
2 min read

ஒரு காலத்தில் ஓவியர்கள் தங்களது ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வது சவாலானதாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. ஒளிப்படம், வீடியோக்களால் நிறைந்திருக்கும் இன்ஸ்டகிராமில் டிஜிட்டல் ஓவியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையவழி விற்பனையும் பிரபலமடைந்துவருகிறது. இந்தச் சூழலில் கணக்கற்று இருக்கும் டிஜிட்டல் ஓவியர்களுக்கு மத்தியில் பாரம்பரிய முறையில் ஓவியங்கள் வரைவதையே தான் விரும்புவதாகச் சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவியர் ஊக்ரா.

வாழ்வு, மரணம், உண்மை, கனவு, இயற்கை என எதுவாயினும் பெண்ணின் பார்வையில் விரியும் உலகுக்குத் தனி அழகுண்டு. தான் பார்க்கும், உணரும் காட்சிகளை ஓவியங்களாக வரைந்துவரும் ஊக்ராவின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பல்லாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். ‘ஆழி தூரிகை’ என்கிற பக்கத்தில் ஓவியங்களைப் பதிவேற்றிவருகிறார்.

“நான் ஓவியக் கலை பற்றிப் பெரிதாகப் பரிச்சயம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள். பள்ளிப் படிப்பின்போது ஓவியம் வரையும் நுட்பங்களைப் பழகிய பிறகு ஆர்வம் இருந்ததால் நாளடைவில் நானே சுயமாகக் கற்றுக்கொண்டேன். நீர் வண்ண ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், அக்ரிலிக் என வெவ்வேறு பொருட்களைக் கொண்டு ஓவியங்கள் வரையலாம். நான் அக்ரிலிக்கைத் தேர்வு செய்து வரைந்துவருகிறேன். ஓவியங்கள் என்றாலே புரியாத புதிராக இருக்க வேண்டும் என்பதில்லை. என்னுடைய ஓவியங்கள் எளிமையாகவும் பார்ப்பவருக்கு ஒத்துப்போகும் வகையிலும் இருக்க வேண்டும் என நினைப்பேன். பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் சார்ந்தும், தமிழ் மொழி சார்ந்தும் வரைந்துவருகிறேன்” என்றார்.

ஓவியர் ஊக்ரா
ஓவியர் ஊக்ரா

பெண் மனதைப் பிரதிபலிக்கும் காதல், காமம், தனிமை, கனவுகளைத் தனது படைப்புகளில் வெளிப்படுத்தும் ஊக்ராவின் ஓவியங்கள் அதிக அளவில் இன்ஸ்டகிராமில் பகிரப்படுகின்றன. கலைப் படைப்புகளில் இருக்கும் அரசியல் பற்றிப் பேசிய அவர், “பொதுவாக ஒரு பெண்ணின் படைப்புக்கு எத்திசையில் இருந்தும் விமர்சனம் எழுவது வழக்கம். தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல், சமத்துவம் ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் ஓவியங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த கலை ஒரு சிறந்த கருவி. கலையால் அனைவரையும் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை மெல்ல உணரத் தொடங்கிய பின்பு இது போன்ற விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நாள்தோறும் கிடைக்கும் புதுப்புது அனுபவங்களால் கலை அரசியல் பற்றிக் கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு படைப்பிலும் ‘அரசியல் தெளிவு’ இருக்க வேண்டும் என்பதில்லை. முடிந்த வரை தவறான கருத்துகளைச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்திவருகிறேன்” என்றவர் டிஜிட்டல் ஓவியங்களின் ஆக்கிரமிப்பி லிருந்து தப்பிக்க முடியாது என்கிறார்.

“கையால் ஓவியங்களை வரையும்போது ஏற்படுகிற உணர்வு டிஜிட்டலில் கிடைக்காது. ஆனால், டிஜிட்டல் ஓவியங்களுக்கே உண்டான நிறைய வசதிகள் கையால் வரையும்போது கிடைப்பதில்லை. மக்கள் டிஜிட்டல் ஓவியங்களையே அதிகம் விரும்பிக் கேட்கின்றனர். டிஜிட்டலில் புதுமைகளைப் புகுத்த முடியும், நிறைய கதாபாத்திரங்களோடு எளிதாகக் கதை சொல்ல முடியும், ஒரு படைப்பைக் கற்பனை வளத்துக்கேற்ப மாற்றி அமைக்க முடியும். இவற்றுக்கெல்லாம் மேல் டிஜிட்டல் ஓவியங்களை எளிதாக விற்பனை செய்ய முடியும். நிறைய இளம் பெண்கள் கிராஃபிக் டிசைனிங் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களது படைப்புகளைச் சமூக வலைத்தளத்தில் பகிர்கிறார்கள். பாடல் வரிகளுக்கேற்ற ஓவியங்கள், அஞ்சல் அட்டை அளவிலான ‘மினிமல்’ ஓவியங்கள், சர்ரியலிச ஓவியங்கள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கலைத்துறையில் இயங்கி வந்தாலும் இதில் வருமானம் ஈட்டுவது வாழ்வாதாரத்துக்கு அவசியம். அது டிஜிட்டல் உலகில் சாத்தியமாகிறது. இதுவரை கையால் நான் வரைந்த ஓவியங்களை ஒளிப்படம் எடுத்து அல்லது ஸ்கேன் செய்து இன்ஸ்டகிராமில் பதிவேற்றி வருகிறேன். பாரம்பரிய முறையில் வரைந்திருந்தாலும் அவற்றுக்கான விளம்பரம் என்னவோ இணையதளத்தில்தான்! இதை உணர்ந்திருந்தாலும் மனம் ஏனோ கையால் மட்டுமே வரையச் சொல்கிறது. காலம் வற்புறுத்துவதால் டிஜிட்டல் ஓவியங்களை வரைய கற்றுக்கொள்கிறேன். இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறேன்” என்றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in