

கரோனா பேரிடரால் பெரும் துயரை அனுபவித்தாலும் இணையவழியில் உலகம் உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. அதே இணையத்தையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி கைவினைக் கலைஞர்கள், சுயதொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் போன்றோர் மூலமாகத் தயாரிக்கப்படும் ஊறுகாய் முதல் நெய் வரைக்குமான பொருட்களை விற்பதற்கான டிஜிட்டல் மேடையைத் தொடங்கியிருக்கிறது ‘மாற்றங்கள்’ என்னும் தன்னார்வ அமைப்பு.
இதன் நிறுவனர் சுசித்ரா, குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர். எம்.காம்., பட்டதாரி யான இவர், துபாய் நிறுவனம் ஒன்றில் வணிகத் துறையில் பங்காற்றிய அனுபவம் கொண்டவர். திருமணத்துக்குப் பின் தமிழ்நாட்டு மருமகளனார். புகுந்த வீட்டிற்கு அருகில் இருந்த பெண்களும், தமிழகத்தின் கிராமங்களில் இருந்த பெண் களும் தன்னியல்பில் செய்த பல உணவு வகைகள், கைவினைப் பொருட்களின் சிறப்பு இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.
“இந்தியாவில் சுயதொழில் செய்யும் பெண்கள் 14 சதவீதம். அதிலும் தமிழகப் பெண்களின் பங்களிப்புதான் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். நான் அறிந்த இந்தப் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்துத்தான் தமிழகம் முழு வதும் இருக்கும் எளிய முறையில் சுயதொழில் புரியும் பெண்களின் தயாரிப்புகளுக்கு ஒரு டிஜிட்டல் அங்காடி சேவையை அளிக்க வேண்டும் என்னும் யோசனை தோன்றியது” என்றார் சுசித்ரா.
வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களின் பொருட் களுக்கான விளம்பரங்களைச் சமூக வலைத்தளங்களில் செய்து அவர்களின் பொருட்களை இணையத்தின் வழியாக விற்றுத் தருகிறது இவர்களின் குழு.
“இதற்கான பணிகளைக் கடந்த ஆண்டின் தொடக்கத்தி லிருந்தே ‘மாற்றங்கள்’ மூல மாக ஆரம்பித்தோம். சுய உதவிக் குழுக்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் திருநர் சமூகத்தினருக்கென்றும் மத்திய, மாநில அரசுகள் பலவிதமான கடனுதவியை அளிக் கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு அளித்து அவர்களுக்கு அந்தக் கடனுதவித் தொகை கிடைப்பதற்கு நாங்கள் உதவுகிறோம்.
சலிப்பைப் போக்கும் சந்தை
தற்போதைக்கு தமிழ்நாடு முழுதும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சுயசார்போடு பெண்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான சந்தையை ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிதான் இது. அதேநேரம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வயர் கூடை பின்னுவது, எம்ப்ராய்டரி போடுவது போன்ற தனித்திறன்கள் இருக்கும். ஆனால், அவர்களால் வெளியே சென்று அவர்களின் கலைப் படைப்புகளை விற்க முடியாது. அதற்கான வழி தெரியாது. அப்படியே விற்றாலும் மிகவும் குறைவான விலைக்கே அதை விற்பனைக்குக் கேட்பார்கள். இவற்றால் சலிப்படையும் பெண்கள் நாளடைவில் அந்தப் பொருட்களைச் செய்வதையே விட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட நிலையை மாற்றுவதற்காகவே ‘மாற்றங்கள்’ ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியில் இணையும் பெண் சுயதொழில் முனைவோருக்கென்று ஒரு தனி பக்கத்தை உருவாக்கித் தந்துவிடுவோம். ஒரு மாதத்துக்கு அவர்களிடமிருந்து நுகர்வோர்கள் வாங்க விரும்பும் தகவல்கள் அனைத்தும் அவர்களுக்குச் செயலி வழியாகத் தெரியும்.
சமரசமில்லாத சவால்
பெண் சுயதொழில் முனைவோர் தாங்கள் தயாரித்த பொருட்களை எங்களிடம் தந்துவிட்டால், அவற்றை உரிய முறையில் பேக் செய்து நாங்கள் உரியவரிடம் சேர்ப்பித்துவிடுவோம். இப்போதைக்கு நூற்றுக்கணக்கான பெண் தொழில்முனைவோர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பெண் தொழில் முனைவோர்களின் தயாரிப்புகளை எங்களின் ‘மாற்றங்கள்’ இணையதளத்தில் காணலாம்.
‘பன்னாட்டு நிறுவனங்களின் செயலி களோடு, மாற்றங்கள் செயலியும் போட்டிப் போட முடியுமா?' என்னும் கேள்வி எவருக்கும் இயல்பாக எழும். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு இரண்டு விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்து கிறோம். ஒன்று, பொருளின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது. இன்னொன்று, புதிய புதிய கற்பனையோடு, வித்தியாசமாகச் செய்யப்படும் கைவினைப் பொருட்களை இடம்பெறச் செய்வது.
பொருளாதாரரீதியாகத் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் வித்தியாசமான கைவினைக் கலைகளில் பிரகாசிக்கும் பெண்கள், திருநங்கைகளின் பொருள்களை அவை உணவு சார்ந்த பொருட்களாக இருந்தால் அதற்குரிய தரக்கட்டுப்பாட்டு சான்றிதழைப் பெறுவது போன்ற விஷயங்களுக்கும் ‘மாற்றங்கள்’ அமைப்பு உதவுகிறது. பொருட்கள் தயாரிப்பு குறித்த வீடியோ எடுப்பது, அதைச் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரப்புவது, பொருட்களுக்கான சந்தை மதிப்பை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்வதற்காகச் சிறிய தொகையைச் சேவைக் கட்டணமாகப் பெறு கிறோம். பொருட்களுக்கான தொகையோடு அதற்கான ஜி.எஸ்.டி.யைச் சேர்த்து விற்பனை செய்கிறோம். ஆண்டு முழுவதும் பொருட்களை விற்றுத்தருவதற்கு நாங்கள் கமிஷன் எதுவும் வசூலிப்பதில்லை” என்கிறார் சுசித்ரா.
‘மாற்றங்கள்’ தொடர்புக்கு: www.matrangal.com