

சென்னை தரமணி பகுதி முத்துமாரி அம்மன் கோயில் சந்திப்பைக் கடப்பவர்கள் ஒரு நொடி இவரைக் கவனிக்காமல் இருக்க முடியாது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காலை, மாலை நேரங்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதோடு சாலையைக் கடப்பவர்களுக்கு உதவிவருகிறார் போக்குவரத்து ஒழுங்கு தன்னார்வலர் சகுரு பானு.
பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது வாகனம் ஓட்டும் ஒவ்வொரு வரின் கடமை. எதிர்பாராத சில நேரம் அவசர மாகவும் கவனக்குறைவாகவும் இருப்பவர்களால் விபத்துகளைத் தவிர்க்க முடிவதில்லை. எந்தச் சாலையில் தனக்கு விபத்து நடந்ததோ அதே சாலையில் இன்று மக்களோடு மக்களாக நின்று போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் சகுரு பானு. தரமணிப் பகுதி மக்களாலும் போக்குவரத்துக் காவலர்களாலும் ‘பாயம்மா’ என அன்பாக அழைக்கப்படும் அவரிடம் பேசினோம்.
“கல்யாணம் முடிச்சி தரமணிக்கு வந்தோம். இதே பகுதியில சின்னச்சின்ன வேலை செஞ்சிட்டு வந்தேன். ஒரு நாள் முத்துமாரி அம்மன் சாலையைக் கடக்க நினைச்சப்போ கார்க்காரன் ஒருவன் இடிச்சிட்டுப் போயிட்டான். ஒருத்தரும் நிக்கல. ஓடிக்கிட்டே இருக்காங்க. எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. நிக்க முடியாத நிலைமையிலும் வண்டிகளை ஒழுங்குபடுத்தினேன். இப்ப யாரு கடந்து போவாங்க பாக்கலாம்னு போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நின்னுட்டேன். தொடர்ந்து ஒரு வாரம் அதே மாதிரி போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கப்ப நின்னு சீர்ப்படுத்திட்டு இருந்தேன். போக்குவரத்துக் காவல் துறை என்னை அழைச்சு, ‘யார் இந்த வேலையை செய்யச் சொன்னாங்க?’ன்னு கேட்டாங்க. ‘நானேதான்’னு பதில் சொன்னேன். ‘சரி தொடர்ந்து செய்யுங்க’ன்னு சொல்லி இந்த ஆரஞ்சு கலர் சட்டையைக் கொடுத்தாங்க. பத்து வருஷமா இந்த வேலையைச் செஞ்சிட்டு இருக்கேன்” என இடைவெளி விடாமல் உற்சாகமாகப் பேசினார்.
தரமணி பிரதான சாலைக்கு அருகே இரண்டு தெருக்கள் தள்ளி சகுரு பானுவின் வீடு இருக்கிறது. அந்தப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் அவரது வீடும் அடையாளமும் பரிச்சயம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே “பாயம்மா.. பாயம்மா” என்கிற குரல் கேட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் “ஜங்ஷன்ல ஒரே டிராஃபிக் பாயம்மா.. குழந்தைங்க ஸ்கூல் விட்டு வர நேரம். கொஞ்சம் என்னனு பாரேன்” என்றார். நம்மிடம் பேசியபடி ஆரஞ்சு சட்டையை எடுத்து மாட்டிய சகுரு பானு “வாங்க போயிட்டு வந்துடலாம்” என அழைத்துச் சென்றார். வழக்கமாகக் காலை எட்டு மணி முதல் 11 மணி வரையும், மாலை நாலு மணி முதல் ஏழு மணி வரையும் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபடு கிறார். முக்கியமான நேரத்தி லும் விபத்துகளின்போதும் களத்துக்கு ஓடி வேலையைச் செய்கிறார்.
தன் மகன், மகளுக்குத் திருமணம் முடித்துவிட்ட சகுரு பானு அண்மையில் கணவரை இழந்தவர். தரமணி வீட்டில் தனியாக வாழ்ந்துவரும் அவர், “இந்த வேலையைச் செய்ய ஆரம்பிச்சப்ப யாரு இவ கிறுக்கச்சின்னு கிண்டல் செஞ்சவங்க இருக்காங்க. இவ பேச்ச ஏன் கேக்கணும்னு சொன்னவங்க இருக்காங்க. ஆனா, நான் உறுதியா இருந்தேன். நமக்குக் கொடுத்த வேலைய சரியா செய்யணும்னு இருந்தேன். இந்தப் பகுதியில் எப்பப் பிரச்சினை நடக்குதோ அப்போ போக்குவரத்துத் துறைக்கு உடனே தகவல் சொல்லிடுவேன். அனுபவத்துல இருந்து சிக்னல் விதிமுறைகளைக் கத்துக்கிட்டேன். இந்த வேலைய ரசிச்சு செய்யுறேன். இந்த வேலைக்காக உனக்கு சம்பளம் தராங்களே? உனக்கு என்ன பிரச்சினைன்னு நிறைய பேரு கேட்டிருக்காங்க. எனக்கு சம்பளம் எல்லாம் எதுவும் வரதில்ல. சமூக அக்கறையில இந்த வேலைய செய்திட்டு வர்றதுன்னால உயர் அதிகாரிகள் பாராட்டிருக்காங்க. வேறு சில நல்ல உள்ளங்கள் விருதுகள் தந்திருக்காங்க, உதவி கள் செஞ்சிருக்காங்க. அவ்வளவுதான். இதுவே எனக்கு மன நிறைவா இருக்கு” என்கிறார்.
ரும்பாலும் வேகமாக வண்டியை இயக்கும் இளைய தலைமுறையால்தான் தனக்கு நெருக்கடி எனச் சொல்லும் அவர், “வேகமா வண்டிய ஓட்டிட்டு வந்து சிக்னல்ல நிக்காம முறுக்கிட்டே இருப்பாங்க. சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அதே மாதிரி கனரக வண்டி களும் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி மெயின் ரோட்டுல வருவாங்க. இவங்களுக்குச் சொல்லி புரியவைக்க முடியலைன்னா செல்போன்ல நம்பர் ப்ளேட்டைப் படம் பிடிச்சு போலீசுகிட்ட புகார் செஞ்சிடுவேன். மிரட்டிருக் காங்க, திட்டியிருக்காங்க. அதுக்காகப் பயந்திட மாட்டேன். பொறுமையா சொல்லி கேக்கலைன்னா படம் பிடிச்சு வச்சுப்பேன். ஒரு காலத்துல வெளிய வரவே பயந்த பொண்ணு தான் நான். ஒரு கட்டத்துல தைரியமா இருக்க வேண்டிய அவசியத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். எல்லாப் பெண்களும் அவங்க வாழ்க்கையில இதை உணர்ந்து வெளிய வரணும். யாரையும் சார்ந்திருக்காம தைரியமா வாழணும்” என சின்னதாக ஒரு அறிவுரையுடன் முடித்தார்.
- karthiga.rajendran@hindutamil.co.in