

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன என ட்விட்டரில் அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளம் அமைதியாக இல்லை. திருமணமான நான்கு மாதங்களில் பெற்றோர் ஆகியிருக்கும் இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது. செயற்கைக் கருத்தரித்தல், வாடகைத் தாய் முறை போன்றவை குறித்துப் பலரும் அதிகம் அறிந்திராத நிலையில் பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் போது அவை பேசு பொருளாகின்றன.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் தனிப்பட்ட முடிவில், ‘அவர் நடிகை என்பதால் தான், பணம் இருப்பதால்தான்’ எனப் பொதுச் சமூகத்தின் கருத்து வலிந்து திணிக்கப்படுகிறது. தாங்கள் எப்போது, எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு தம்பதியின் உரிமையே தவிர சமூகக் கட்டாயத்திற்காக இப்படித் தான் செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் தேவையில்லை.
சரி செய்யக்கூடிய பிரச்சினைகள்
குழந்தை பெற்றுக்கொள்வதில் சில பிரச்சினைகள் ஏற்படும்போது பெண்களைத் தான் முதலில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கிறது இச்சமூகம். குழந்தை பெறுவதில் ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு இருப்பதால், இருவரும் சேர்ந்தே மருத்துவ உதவியை அணுக வேண்டும். மருத்துவத் துறையின் வளர்ச்சியால் இருவருக்கும் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைப்பேறை அளிக்கும் பல நவீன மருத்துவ முறைகளில் வாடகைத்தாய் முறையும் ஒன்று.
இந்தியாவில் வணிக நோக்கிற்காக வாடகைத்தாய் முறை செயல்படுவதைத் தடுக்க 2022 ஜூன் மாதத்தில் வாடகைத்தாய் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தம்பதி, வாடகைத் தாய் ஆகியோரின் உடல், மன நலன்களை உறுதிசெய்ய சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். வாடகைத்தாயாகும் பெண், தம்பதியின் நெருங்கிய உறவினராக மட்டுமே இருக்க முடியும் எனச் சில முக்கிய நெறிமுறைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பலன் தரும் சிகிச்சைகள்
இது குறித்து விரிவாகப் பேசிய சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அமுதா ஹரி, “வாடகைத்தாய் சட்டம் வரவேற்கத்தக்கது. விதிமுறைகளைப் பின்பற்று வது சட்டபூர்வமானது, பாதுகாப்பானது. குறிப்பாக வாடகைத்தாயாகும் பெண்ணுக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கும். வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்படும் தம்பதியர் ஏராளம். பிரச்சினைகளைச் சரிசெய்ய மருத்துவச் சிகிச்சையை நாடுபவர்கள் உடனடி பலனை எதிர்பார்கின்றனர். குழந்தையின்மையைப் பொறுத்தவரை கணவன், மனைவி இருவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்வது அவசியம். குழந்தைப்பேறு உண்டாகுமா என்பதை சில எளிமையான சிகிச்சைகளின் மூலம் முதலில் முயன்று பார்ப்போம். அவை பலன் அளிக்காதபட்சத்தில் அடுத்தகட்ட சிகிச்சை களைப் பரிந்துரைப்போம். இப்போது சட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் உண்மையாகவே பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமே வாடகைத்தாய் முறை அல்லது வேறு செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு உடல், மன ரீதியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டி இருப்பதால் வெறும் அழகு சார்ந்தோ, பணம் சார்ந்தோ இம்முடிவை தம்பதியர் எடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு” எனக் கூறினார்.
எந்தவொரு சட்டமானாலும் சாதகம், பாதகம் இரண்டுமே இருக்கும். அதற்கு வாடகைத் தாய் சட்டமும் விதிவிலக்கல்ல. “விதிமுறைகள் தீவிர மாகும்போது இச்சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள ஒருவித பயம் உண்டாகும். இது சிக்கலானதாக இருக்குமோ, அதிக செலவாகுமோ என்கிற பயத்தால் சாதாரண மக்கள் இச்சிகிச்சைகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டலாம். பெரும்பாலும் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சை வசதிகள் தனியார் மருத்துவமனைகளில் இருப்பதால் இந்நிலை மாற சில காலம் ஆகும். அரசு சார்பில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் செயல்படச் சில வருடங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில், எப்போது எப்படிக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு பெண்களிடம் இருக்கும்பட்சத்தில் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை அவர்கள் நாடும்போது கண்டிப்பாகப் பலன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” எனக் கூறினார் அமுதா ஹரி.
விதிவிலக்கு இருக்கிறதா?
வாடகைத் தாய் சட்டம் குறித்து விளக்கிய வழக்கறிஞர் ப.சு. அஜிதா, “வாடகைத்தாய் சட்டம் டிசம்பர் 25, 2021இல் அமலுக்கு வந்துவிட்டாலும், இதற்கான விதிமுறைகள் ஜூன் 21, 2022இல் இருந்துதான் நடைமுறைக்கு வந்தது. அனைத்துக் குற்றவியல் சட்டங்களும் என்றைக்கு நடைமுறைக்கு வருகின்றனவோ அப்போது இருந்துதான் அமலுக்கு வருமே தவிர ஏற்கெனவே முடிந்துவிட்ட காலத்திற்கும் இன்றைக்கு வரக்கூடிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாடகைத்தாய் முறையைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப் படவில்லை. தமிழ்நாட்டிலும் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம். வாடகைத்தாய் முறை சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதற்கான அனுமதி, அனுமதி மறுப்பு போன்ற விஷயங்களிலும் முடிவு எடுக்க இந்தக் கண்காணிப்பு குழுக்களுக்கு அதிகாரம் இருக்கும். இதனால் வாடகைத்தாய் சிகிச்சையை மேற்கொள்வதில் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும்” என்றார்.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தனியார் வசம் உள்ளன. அரசு சார்பில் முதற்கட்டமாக சென்னை, மதுரையில் கருத்தரிப்பு மையங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு வாடகைத்தாய் சிகிச்சை சென்றடையுமா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர் அஜிதா, “25 - 30 வயதுக்குட்பட்ட, ஏற்கெனவே குழந்தையைப் பெற்ற பெண் உறவினர் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அவருக்கான மருத்துவக் காப்பீடு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே போதும். பொருளாதாரத்தில் பின்தங்கிய தம்பதியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண மக்களுக்கும் இந்தச் சிகிச்சைகள் சென்றடை வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் மாநில அரசிடம் ஏற்கெனவே உள்ளன. பணம் இருப்பவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிற நிலை இல்லாமல், எல்லா மாவட்டங்களிலும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள், வாடகைத்தாய் சிகிச்சைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. குழந்தை பெற முடியாத நிலையில் இருக்கும் தம்பதியருக்கு அரசு செய்துதர வேண்டிய அத்தியாவசியத் தேவை என்றுகூட இதைச் சொல்லலாம்” என்றார்.
சட்டத்தில் உள்ள சிக்கலைச் சுட்டிக்காட்டிய சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா, “உடற்தகுதி மட்டும் போதுமானதாக இருக்கும்போது நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருவர்தான் வாடகைத்தாயாக முடியும் என்கிற சட்டம் சாதிய முறையைப் பாதுகாத்துத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதுபோல் இருக்கிறது. ஏழ்மையில் இருக்கும் பெண்களே வாடகைத்தாயாக இருப்பார்கள் என்று கட்டமைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகையானாலும் சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் அவர்களது உடல்நலம், மனநலம், அழகு இதில் எதைச் சார்ந்தும் முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே. எல்லாக் காலத்திலும் மகப்பேறு சார்ந்து ஒரு பெண் தன்னிச்சையாக முடிவெடுத்தால் இச்சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்ணின் உரிமைகளும், அவள் எடுக்கும் முடிவுகளும் ஆண் சமூகத்தைத் தாக்குகிறது” எனக் கூறினார்.
எப்போது, எப்படி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கவும், குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுக்கவும் பெண்ணுக்கு முழு உரிமை இருந்தும் பெரும்பாலான பெண்கள் சமூகத்தின் கட்டாயப் பிடியில் சிக்கி இருக்கின்றனர். தாய்மை மட்டுமே பெண்மையின் முழுமை என்று நம்பும் பொதுச்சமூகம் பெண்ணின் அந்தரங்க விஷயங்களில் கருத்துத் தெரிவிப்பதும் பெண்கள்மீது ஏவப்படும் ஒருவித வன்முறையே. எந்த ஒரு விஷயமானாலும் பெண்களைப் பார்த்துக் கேள்விகளை மட்டும் கேட்டுப் பழக்கப்பட்டுவிட்ட சமூகம், விடைகளுக்கு மதிப்புக் கொடுத்தால் அங்கே புரிதலுக்கான நம்பிக்கை பிறக்கும்!
| கோலிவுட்டுக்கு இது புதுசு என்றாலும் பாலிவுட் நடிகர், நடிகைகள் மத்தியில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது வழக்கமானதுதான். ஆமீர் கான், ஷாரூக்கான், பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், ஷில்பா ஷெட்டி ஆகியோர் வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள். இயக்குநரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கரன் ஜோஹர், திருமணம் செய்துகொள்ளாமல் வாடகைத்தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். |