

சமீபத்தில் வெளியான ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ என்கிற மலையாள படத்திற்கு நல்ல வரவேற்பு. 30 கடந்து 31ஆவது வரன் அமைய, அர்ச்சனாவுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எதிர்பாராத ஒரு சம்பவத்தால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்தாக, அந்தச் சூழலை அவர் எப்படிக் கையாண்டார் என்பதே படத்தின் கதை. இதே போன்றதொரு உண்மை சம்பவம் பிரிட்டன் நாட்டில் அரங்கேறியுள்ளது. கடைசி நேரத்தில் திருமணத்திற்கு வராமல் காதலன் பின்வாங்கியதால் 27 வயது ‘கேலி’ என்கிற பெண் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். பல லட்சம் செலவிட்டு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை ரத்து செய்ய மனம் வராமல், நண்பர்கள் உறவினர்கள் அளித்த உற்சாகத்தால் கண்ணீரை மறந்து பிரிவைக் கொண்டாடி இருக்கிறார் ‘கேலி’. பெரும்பாலும் திரையில் காட்டப்படுவது நிஜ வாழ்வுக்குப் பொருந்தாது என்றிருக்கையில், ‘கேலி’யின் இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்!
‘ஓசி பஸ்’ பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்!
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி “கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும் வேறு எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள்” எனப் பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை சலுகைகளாகப் பாவிக்கும் எண்ணம் ஏற்புடையதல்ல எனப் பெண்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
அமைச்சரின் பேச்சுக்குப் பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்திலும் அது பேசு பொருளானது.
அலட்சிய பதிலுக்குக் கடும் எதிர்ப்பு
பிஹார் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுரிடம் பள்ளி மாணவி ஒருவர், “பெண்களுக்குக் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கினை அரசு வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதற்கு “இனி ஜீன்ஸ் வேண்டுமென கேட்பீர்கள், கருத்தடை சாதனங்களைக் கூடக் கேட்பீர்கள்” என ஹர்ஜோத் பதிலளித்தார். இவ்விவகாரத்திற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் பேசியது பெண்களின் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என ஹர்ஜோத் தெரிவித்திருக்கிறார்.