

அக்டோபர் மாதத்திலும் என்ன வெயில் என்றபடி கமலா பாட்டியும் கனிஷ்காவும் கல்பனா வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
மூன்று ஆரஞ்சு ஜுஸ் தம்ளர்களுடன் வந்து அமர்ந்தார் கல்பனா ஆன்ட்டி.
“என்ன கனிஷ்கா, போனில் தீவிரமா இருக்கே?’’
“ஆன்ட்டி, உங்க ஃபேஸ்புக் புரொபைல் படத்துக்கு லைக் போட்டுட்டு இருந்தேன். பலரும் தங்கள் பெண் குழந்தைகள் மீது பாசத்தைக் கொட்டி, படங்களைப் பகிர்ந்திருக்காங்க. இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எங்க அம்மாகூட புரொபைல் படம் மாத்தியிருக்காங்க” என்றாள் கனிஷ்கா.
“உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்ட, அவங்க திறமைகளை அங்கீகரிக்க சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012 முதல் அக்டோபர் 11-ம் தேதியை சர்வதேசப் பெண் குழந்தைகள் தினமா கொண்டாடுறாங்க. எல்லோரும் அதை அங்கீகரிக்கும் விதத்தில் புரொபைல் படத்தை மாத்தியிருக்காங்க” என்றார் கல்பனா ஆன்ட்டி.
“இந்த வருஷத்துக்கான கருப்பொருள், பெண் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது” என்றார் கமலா பாட்டி.
“எனக்கு சம உரிமை கொடுத்திருக்கும் என் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லணும். அக்டோபர் 15-ஐ சர்வதேச கிராமப்புறப் பெண்கள் தினமாகக் கொண்டாடுறங்க. விவசாயம், உணவுப் பாதுகாப்பில் கிராமப்புறப் பெண்கள், பூர்வகுடிப் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவே இந்த நாள்” என்றாள் கனிஷ்கா.
“நாம எல்லோரும் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடிட்டு இருக்கும்போது, எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்குன்னு தெரியுமா? உலகம் முழுவதும் ஒவ்வொரு ஏழு நொடிகளுக்கும், பதினைந்து வயதுக்குக் கீழ் உள்ள ஒரு சிறுமிக்குத் திருமணம் நடக்குதுன்னு ‘சேவ் தி சில்ட்ரன்’ (Save the Children)தொண்டு நிறுவனம் சொல்லியிருக்கு. கேட்கவே ரொம்ப வேதனையா இருக்கு. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் இன்றும் அதிகம்” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் கல்பனா ஆன்ட்டி.
“அமெரிக்க அதிபர் தேர்தல் கூத்துகளைக் கவனிக்கிறியா கல்பனா? இதுவரை இல்லாத அளவுக்கு டொனால்ட் டிரம்பும் ஹிலாரி கிளின்டனும் மோசமா விவாதம் செய்யறாங்க. டிரம்ப் முடிந்தவரை பெண்களைக் கேவலப்படுத்திப் பேசுறார்” என்று சொன்னார் கமலா பாட்டி.
தீவிரமாகச் சென்றுகொண்டிருந்த அரட்டையைக் கொஞ்சம் கலகலப்பாக்க நினைத்த கனிஷ்கா, “குயின் ஆஃப் கட்வே (Queen of Katwe) தெரியுமா?” என்று கேட்டாள்.
பாட்டியும் ஆன்ட்டியும் தெரியாது என்று தலையாட்டினார்கள்.
“எம்.எஸ்.தோனி, சொல்லப்படாத கதை தெரியும்ல? அது மாதிரி இதுவும் ஒரு விளையாட்டு தொடர்பான திரைப்படம். உகாண்டா நாட்டைச் சேர்ந்த செஸ் சாம்பியன் பியோனா முட்டேசி. அவரது வாழ்க்கையைத் தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வரும் ஒரு திறமைசாலி, சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்களிடம் எத்தகைய சவால்களைச் சந்திக்க நேரும் என்பதையும், பியோனாவுக்குள் இருக்கும் உத்வேகம் அவரது இலக்கை எட்ட எப்படி உதவியது என்பதையும் மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மீரா நாயர். இந்தப் படத்தை ஜோஹனஸ்பர்க் நகரத்துல சிறப்புக் காட்சியாகத் திரையிட்டிருக்கிறாங்க. நல்ல வரவேற்பு. படம் இங்கே ரிலீஸ் ஆனா நாம மூணு பேரும் போறோம். சரியா?” என்றாள் கனிஷ்கா.
கமலாவும் கல்பனாவும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர்.