

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக சிரியாவை அழித்த உள்நாட்டுப் போர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்றுக் குறைந்திருக்கிறது. அந்த நாட்டின் சில பகுதிகள், வடமேற்கில் உள்ள இட்லிப் பகுதி அகியன அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கின்றன. இனமோதல் என்பதைத் தாண்டி, பல நாடுகள் உள்நுழைந்து மனித வாழ்க்கையை நொறுக்கிப்போட்ட ஒரு ‘பினாமி’ போராகவே மனிதநேயவாதிகளால் இப்போர் பார்க்கப்படுகிறது. சிரியாவில் நடந்ததை, நடப்பதை உள்நாட்டுப் போர் என்பதைவிடப் பிறநாடுகளால் தூண்டப்பட்ட யுத்தமாகவே அது மாறி நிற்கிறது. சிரிய மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றினாலும் மீண்டும் எப்போதுவேண்டுமானாலும் அது தூண்டப்பட்டுத் தீவிரமடையலாம் என்பதையே இன்றைய சூழல் எடுத்துக்காட்டுகிறது.
ஆனால், போர் தொடங்கிய முதல் ஆறு ஆண்டுகளில் கொத்துக் கொத்தாக மாண்ட மக்கள், குறிப்பாக படுகாயமடைந்த குழந்தைகள், நாட்டிலிருந்து தப்பித்துச் செல்லும்போது மாண்டவர்கள் குறித்தும், பெற்றோரையும் உறவுகளையும் இழந்து ‘போர் அனாதை’களாக ’போர் விதவை’களாக ஆனவர்கள் உள்நாட்டிலே அகதிகளாக வாழும் நிலையையும் கண்டு உலகமே கண்ணீர் சிந்தியது.
அப்போது, சிரியா மீதும் அங்கே அகதிகளாக்கப்பட்டிருந்த அம்மண்ணின் மக்கள் மீதும் ஏன் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என, நிஜவாழ்க்கையில் அசல் கதாநாயகியாக வலம் வரும் ஏஞ்சலினா ஜோலி, கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியபோது ஐந்து காரணங்களைக் கூறினார். உலகின் மனசாட்சியை உலுக்கிய அந்தக் காரணங்கள் இந்த கணம் வரை அப்படியேதான் இருக்கின்றன...
“ 1. உலக நாடுகளின் தலைவர்களே.. குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்கை பார்த்தேன்’ என ஒரு தாய் என்னிடம் அழுதபோது, நான் என் கண்களைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது!
2. பதின்மத்தில் நுழையாத சிறுமி அவள். ஓர் அகதிக் கூடாரத்தில் தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11.
3. ‘பல கட்டிடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும்போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயதேயான அவள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்!
4. கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன், 'ஒரே ஒரு உதவி செய்யுங்கள்..! எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது? நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும். முடிந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.' என்றான். கனவான்களே… எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று!
5. உலக நாடுகளே.. நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும் உணவும் வேண்டும் எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது.” என்றார். அவர் பேசி முடித்ததும் அவையில் இருந்த பலரும் மனமுடைந்து அழுதனர்.
அதே ஏஞ்சலினாதான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில் உருக்குழைந்துக்கொண்டிருக்கும் உக்ரைனுக்கு கடந்த ஏப்ரலில் துணிந்து பயணம் செய்தார். அங்கே அவர் லிவ்யூ நகருக்குச் சென்று போரில் பெற்றோரை இழந்த, காயம்பட்ட சிறார்களை முதலில் சந்தித்தார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாகவும் மனநல ஆதரவும் கொடுத்து உதவும் மருத்துவத் தன்னார்வலர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களைப் பாராட்டினார். இன்று தன்னுடைய 47 அகவையில் அடிவைக்கும் ஏஞ்சலீனா ஜோலி, உலகின் அழகான பெண்களில் ஒருவர் என வருணிக்கப்படுகிறார். அது திரையில் மட்டுமல்ல; திரைக்கு வெளியே அவர் மேற்கொண்டுவரும் மனிதநேயப் பணிகளுக்காகவும்தான் என்பதை அவருடைய பொதுவாழ்க்கை நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in