விவாதம் | வரதட்சணை நல்லதா?

விவாதம் | வரதட்சணை நல்லதா?
Updated on
2 min read

வரதட்சணை கொடுப்பதன் மூலம் ‘அழகற்ற’ பெண் களுக்குத் திருமணம் நடக்கும் என்று செவிலியருக்கான பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகள் அரசியல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் விவாதத்தை எழுப்பின.

செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் பாடப் பிரிவில் ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட வரதட்சணையை நியாயப்படுத்தும் விதமாக அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார் மூத்த ஆசிரியர் டி.கே. இந்திராணி. சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய அந்தப் புத்தகத்தை டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மருத்துவ நூல்களை ஐம்பது ஆண்டுகளாக வெளியிட்டுவரும் அந்த நிறுவனத்தின் மீது ‘இந்திய செவிலியர் கவுன்சில்’ நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட பதிப்பகம் தங்களது பெயரைப் புத்தகத்தின் அட்டையில் வெளியிட்டிருப்பது குறித்தும் இந்திய செவிலியர் கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது. செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்தை மட்டுமே தாங்கள் பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்ட ஆசிரியரையோ பதிப்பாளரையோ பரிந்துரைக்கவில்லை என்றும் அது தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பதிப்பகம் குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அரசியலமைப்புக்கு எதிரானது

பெண்கள் மீதான ஒடுக்குதலையும் குடும்ப வன்முறையையும் கட்டுப்படுத்தும்விதமாகத்தான் பல்வேறு சட்டங்கள் பெண்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ளன. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் இடம்பெறும் இப்படியான கருத்துகள் அந்தச் சட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. வரதட்சணை மறைமுகமாகப் பெண்ணின் கல்விக்கு உறுதுணையாக இருக்கிறது என்று அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது வேதனை. பெண்களைப் படிக்கவைத்து வேலைக்கு அனுப்பினால் வரதட்சணையின் அளவு குறையுமாம். மாப்பிள்ளை நல்ல வேலைக்குச் சென்றால் அதற்கேற்ப வரதட்சணையின் அளவு கூடுமாம். மணமகன் தான் வாங்குகிற வரதட்சணையை வைத்துத் தன் சகோதரிகளின் திருமணத்தை நடத்தி முடிப்பதால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கைக்கும் வரதட்சணைதான் கைகொடுக்கிறதாம். பாடப் புத்தகத்தை எழுதும் ஆசிரியரின் சமூகப் பார்வையும், அரசியல் நிலைப்பாடும் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஏதோவொரு வகையில் வெளிப்பட்டுவிடுகிறது என்பதைத்தான் இதுபோன்ற புத்தகங்கள் உணர்த்துகின்றன.

அழகும் அவலட்சணமும்

பி.எஸ்சி., இரண்டாமாண்டு செவிலியர் மாணவர்களின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய பாடப் பிரிவை நீக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சிவசேனா கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி. ‘இதுபோன்ற இழிவான, சர்ச்சைக்குரிய கருத்துகள் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது நம் நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் அவமானம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெறுவது புதிததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்கிற பகுதி இடம்பெற்றிருந்தது. அதேபோல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் எதிர்ச்சொல் பாடப் பிரிவில் கறுப்பான பெண்ணின் படத்தை ‘அவலட்சணம்’ என்றும் சிவப்பான பெண்ணின் படத்தை ‘அழகு’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

எதிர்ச்சொல்லை விளக்கக்கூடப் பெண்ணின் நிறத்தை உதாரணமாகச் சொல்லும் அளவுக்குத்தான் நாம் பிற்போக்குடன் இருக்கிறோம். பொதுச் சமூகத்தின் கவனத்துக்கு வரும் இதுபோன்ற தவறுகள் மட்டுமே திருத்தப்படுகின்றன அல்லது நீக்கப்படுகின்றன. இப்போதுகூட, பாடப் புத்தகத்தை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படும்படி அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் மாநில செவிலியர் பதிவு கவுன்சிலுக்கும் தேசிய செவிலியர் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் பாலினப் பாகுபாடும் பிற்போக்குச் சிந்தனைகளும் வெளிப்படுவதைத் தீவிரமாகக் கண்காணிக்காவிட்டால் இதுபோன்ற விவாதங்கள் தொடர்கதையாகிவிடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in