Published : 11 Apr 2021 03:15 am

Updated : 11 Apr 2021 11:13 am

 

Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 11:13 AM

அவலம்: தேர்தல் பணியில் அலைக்கழிக்கப்படும் பெண்கள்

election-work

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடித்ததாகக் கட்சிகளும் பொதுமக்களில் பலரும் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு ஏற்புடையதே. காரணம், 234 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது சவாலானது.

மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்ட மாவட்டத் தேர்தல் பணிக்குழுவினர் தங்கள் கடமையைக் கூடுமானவரைக்கும் சிறப்பாகவே செய்தனர். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், குறிப்பாகப் பெண்கள் சிலர் தங்கள் நிலையைச் சொன்னதைக் கேட்டபோது தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பாராட்டு ஒரு மாற்றுக் குறைந்ததுபோல் ஆகிவிட்டது.


தமிழகம் முழுவதும் நான்கு லட்சத் துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் ஊழியர்களும் அடக்கம். பெரும்பாலான இடங்களில் பயிற்சி மையங்கள் அதிக தொலைவில் இருந்ததாக ஆசிரியர்கள் பலர் வருத்தத்துடன் தெரிவித்தனர். பயிற்சி மையங்கள் பலவற்றுக்குப் போதுமான போக்குவரத்து வசதிகளும் இல்லாதது அவர்களின் நெருக்கடியை அதிகரித்தது. “எப்படி அவ்வளவு தொலைவு பயணம் செய்து வர முடியும்னு கூடவா யாரும் யோசிக்க மாட்டாங்க. வேற வழியில்லாம அந்தப் பகுதியில இருக்கற சிலர் வேன் வைத்துக்கொண்டு பயிற்சி மையத் துக்கு வந்தாங்க” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

அடிப்படைத் தேவைக்கும் வழியில்லை

பயிற்சியும் நல்லவிதமாக இல்லை என்றார் மற்றுமொரு ஆசிரியர். “மூணு நாளும் வீடியோவைத்தான் போட்டுக் காட்டினாங்க. செயல்முறைக் கையேடு தந்தாலும் அனைத்து ஊழியர்களுக்கும் அது சரியாகப் புரிந்ததா என்பது சந்தேகமே. இது ஒரு பக்கம் என்றால், எங்களுக்குக் குறைந்தபட்சம் தண்ணீர், டீ போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. சில பயிற்சி மையங்களைச் சுற்றிக் கடைகள் ஏதும் இல்லாத நிலையில் பலர் அவதிப்பட்டார்கள். பயிற்சி முடிந்து நாங்கள் வெளியே வந்தபோது ஐம்பது வயதைக் கடந்த பெண் ஒருவர் ஒவ்வொரு வேனாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.

பிறகு தவிப்புடன் இங்குமங்கும் தேடினார். என்னவென்று விசாரித்தபோது, அவர் சமையல் உதவியாளர் என்பதும் மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து பயிற்சிக்கு வந்த இடத்தில் தான் வந்த வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொல்லிக் கலங்கினார். அவர் சமையல் உதவியாளர் என்பதால் வாகனத்தின் எண்கூட அவருக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவரைத் தேடிக்கொண்டு சிலர் வர, அவர்கள் அணிந்திருந்த உடைகளை வைத்துத்தான் அந்தப் பெண்மணியால் தன்னுடன் வந்தவர்களை அடையாளம் காண முடிந்தது. இவரைப் போன்றவர்களை வைத்து எப்படித் தேர்தல் பணியை நடத்த முடியும் என்று தோன்றியது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதைத் தவிர்த்திருக்கலாம்

பொதுவாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலைமை அலுவலர் ஒருவரும் அவருக்குக் கீழே தேர்தல் அலுவலர்கள் மூவரும் நியமிக்கப் படுவர். “இந்த முறை எனக்குக் கீழே இருவரை மட்டுமே நியமித்தனர். அதில் ஒருவர் அங்கன்வாடி உதவிச் சமையலர். நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை மூவர் செய்ததோடு உதவிச் சமையலரால் பெயர்களை வாசிக்க முடியாது என்பதால் அவருக்குப் பணியை மாற்றிக்கொடுத்து ஒருவாறு சமாளித்தோம்” என்கிறார் சென்னை யைச் சேர்ந்த தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

ஊழியருக்குப் பாதுகாப்பு இல்லையா?

ஊழியர்களுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா என்பதையாவது குறைந்தபட்சம் கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் பணியாளர்களைத் தேர்வு செய்தி ருக்கலாம். வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருப்போர், அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட வர்கள் போன்றோருக்கு இந்த கரோனா காலத்திலாவது விலக்கு அளித்திருக்கலாம். ஆனால், உண்மையிலேயே மருத்துவக் காரணங்களால் வர முடியாத வர்களுக்கு விலக்கு அளித்திருந்ததாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அனை வரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததையும் மறுக்க முடியாது.

“தேர்தல் நடந்தது ஒரு நாள்தான். ஆனால், அதற்காக நாங்கள் ஐந்து நாள்கள் வேலை செய்ய வேண்டி யிருக்கிறது. மூன்று நாள்கள் பயிற்சி, பிறகு தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் மையத்துக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். முதல் நாள் பதினோரு மணிக்கு அங்கே சென்றுவிட்டால் மறுநாள் தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பிறகுதான் வீடு திரும்ப முடியும். எனக்குத் தெரிந்து பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படைத் தேவைகள்கூடச் சரிவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானவைச் சரியாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த நிலையில் வேறு வழியின்றி இரவு அங்கேயேதான் தங்கினோம். மறுநாள் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்தால்தான் அனைத்தையும் சரிபார்த்து ஆறு மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்ய முடியும். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத ஊழியரை உதவிக்கு வைத்துக்கொண்டு வேலை செய்யும்போது கொஞ்சம் தாமதமானாலும் பொதுமக்கள் கோபப்படுவார்கள். அவர்களுக்கும் பொறுமையாகப் பதிலளித்து, தேர்தல் முகவர்களைச் சமாளித்து வேலை செய்வதும் சவால்தான்.

காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணிவரை இடைவெளி எடுக்காமல் வேலைசெய்ய வேண்டும். இதில் எங்கிருந்து சாப்பிடுவது, இயற்கை உபாதைக்கு எழுந்து செல்வது? தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகளைச் சில நேரம் சீக்கிரமாக வந்து எடுத்துச் செல்வார்கள். சில நேரம் நள்ளிரவை நெருங்கிவிடும். அதுவரை நாம் தனியாகக் காத்திருக்க நேரிடும். வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு மட்டும் வாகன ஏற்பாடு செய்யப்படும்.

வீடு திரும்புவது எங்கள் பொறுப்புதான். அருகில் இருக்கும் பேருந்து நிலையத்துக்குச் செல்லக்கூட வாகனங்கள் இன்றித் தவித்தவர்கள் பலர். உடன் பணியாற்றிய ஆண் ஊழியர்களுடனோ லாரி, வேன் போன்றவற்றிலோ பயணம் செய்து வீடடைகிறவர்கள் அதிகம். பெண் ஊழியர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் முடித்தார் அந்த ஊழியர்.

“ஒரே ஒருநாள் தங்கிவிட்டு வாக்குச்சாவடிகளில் அடிப்படைத் தேவைகள் எதுவும் சரியில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், அதே பள்ளியில்தானே ஆண்டு முழுவதும் மாணவர்கள் இத்தகைய குறைகளோடு படிக்கிறார்கள். அதையெல்லாம் சரிசெய்யச் சொல்லி அரசுக்கு ஏன் அவர்கள் கோரிக்கை வைப்பதில்லை?” என்று ஆங்காங்கே சில விமர்சனங்களும் எழுந்தன.

தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்கள் போடுகிற தபால் ஓட்டுக்களில் சில சரியாக நிரப்பப்படாததால் செல்லாதவையாகிவிடுகின்றன. அதனால், அடுத்த முறை தேர்தல் நடைபெறும்போது தேர்தல் முடிந்த மறுநாள் இவர்களும் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும்படிச் செய்தால் செல்லாத ஓட்டுக்களைத் தவிர்க்கலாம். தபால் ஓட்டின் நடைமுறை காரணமாக சிலர் அதைத் தவிர்ப்பதையும் தடுக்கலாம்.

தமிழகம் இதுவரை எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. ஒரே கட்டமாக நடந்த இந்தத் தேர்தல் பெரும்பாலும் சிக்கல்கள் ஏதுமின்றி நடந்திருக்கிறது. ஆனால், கடந்த தேர்தல்களில் பெண் ஊழியர்கள் சந்தித்த நெருக்கடிகளைப் பலரும் சுட்டிக்காட்டியும் இந்தத் தேர்தலிலும் அவை களையப்படாதது வரவேற்கத்தக்கதல்ல. அடுத்துவரும் தேர்தல்களிலாவது இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.தேர்தல் பணிஅலைக்கழிக்கப்படும் பெண்கள்பெண்கள்கரோனா பொது முடக்கம்பொது முடக்கம்கரோனாElection Work

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

ஒரு கதை கேட்கலாமா? :

இன்றைய செய்தி
x