

என் மகன் சஞ்சய் எட்டாம் வகுப்பும் மகள் நேஹா யாழினி ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். பொதுவாக அமெரிக்காவில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் பள்ளி விடுமுறை. செப்டம்பரில்தான் பள்ளி திறக்கும். கரோனா தொற்றுப் பரவலால் ஏப்ரல் மாதமே பள்ளிகளை மூடிவிட்டதால் குழந்தைகள் வீட்டுடன் உள்ளனர். நானும் என் கணவரும் வீட்டில் இருந்தபடியே வேலைசெய்கிறோம்.
தமிழ்ப் பள்ளி, நீச்சல் வகுப்பு, கால்பந்தாட்டம் என வார இறுதி நாட்களிலும் இங்கே குழந்தைகள் பிஸியாக இருப்பார்கள். இப்போது பள்ளியும் இல்லாமல், வெளியே எங்கும் செல்லவும் முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதே பெரிய சவாலாக இருந்தது. காலையில் ஏழு மணிக்குள் தயாராகி, பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் வழக்கமாகச் சீக்கிரமே விழித்துவிடுவார்கள். இப்போது நன்றாகத் தூங்கி எழுந்து, பொறுமையாகச் சாப்பிட்டு, பள்ளிப் பாடங்களைப் படிக்கின்றனர். சிறிது நேரம் இருவரும் விளையாடுவார்கள்.
விவரம் அறிந்த குழந்தைகள் என்பதால் எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. அவர்களுடைய விளையாட்டு அறையைச் சுத்தம் செய்வது, புத்தகங்களை அடுக்குவது என்று அவர்களுக்கெனச் சில வேலைகளை ஒதுக்கியிருக்கிறேன். அவற்றைச் செய்வதுடன் சஞ்சய் தனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடும்போது, நேஹா ஓவியம் வரைவாள். சில நேரம் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.
மதியம் சாப்பிட்டுவிட்டு, குழந்தை களுக்கான படங்களைப் பார்ப்பார்கள். தனி வீடு என்பதால் வெளியே சிறிது நேரம் விளையாடச் சொன்னால்கூடச் சீக்கிரம் வந்து விடுகின்றனர். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு அஞ்சல் கொண்டு வருபவரைப் பார்த்ததும் உள்ளே ஓடிவந்து விட்டனர். குழந்தைகள் இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருப்பதைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாகிவிட்டது.
இரவில் அனைவரும் கதை பேசிக்கொண்டும், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் பேசிக்கொண்டும் இருப்பதால் பொழுதுபோய்விடுகிறது. அடுத்த வாரம் அவர்களுடைய குழந்தைப் பருவத்து வீடியோக்களைப் போட்டு எல்லோரும் பார்க்கலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். ஓடித்திரியும் இந்த வயதில் இப்படியொரு சூழ்நிலையா என்ற கவலை சூழ்ந்துள்ளபோதும், ‘இதுவும் கடந்து போகும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
- ஜெயலட்சுமி ரஞ்சித், வர்ஜீனியா, அமெரிக்கா.