

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளைச் சமாளிப்பது எவரெஸ்ட்டைத் தொடுவதைவிடக் கடினம். 13 வயது மூத்தவனாவது பரவாயில்லை, எட்டு வயது இளையவனுக்குக் கை, கால்களைக் கழுவியே நானும் என் அம்மாவும் ஓய்ந்துபோனோம். பிறகு, கரோனா விழிப்புணர்வுக் காணொலியை அவனுக்குக் காண்பித்து அவனாகவே கைகழுவும் அளவுக்கு வந்துவிட்டான். வாட்ஸ் அப் வதந்திகளால் அதைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
நானும் என் கணவரும் புத்தக வாசிப்பில் ஈடுபடலானோம். சமூகநீதி அறக்கட்டளை பதிப்பகத்தாரின் ‘நிர்வாக இயலின் தந்தை ஷெர்ஷா’ என்ற நூலை நான் படித்தேன். சு.வெங்கடேசனின் ‘கதைகளின் கதை’யை என் கணவர் படித்தார். என் குழந்தைகளும் என் தம்பியும் சதுரங்கம், கேரம் போர்டு விளையாடினர். இடையே நாங்கள் அனைவரும் இணைந்து சமையலில் ஈடுபட்டோம். இப்படிப் பொழுதுகள் கரைகின்றன.
என்னைப் போல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த ஊரடங்கு வித்தியாசமான அனுபவம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் நேரம் செலவிட்டது, அவர்களுடன் விளையாடியது, சேர்ந்து படம் பார்த்தது, சண்டைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்து என் மகன்களுக்கு நான் வில்லியாகிப்போனது என எல்லாமே புதிய அனுபவங்களே. சொந்தங்களுடன் வாட்ஸ் அப் காணொலி மூலம் பேசுவதால் உறவு களுக்குள் பிணைப்பு கூடுகிறது. காணாமல்போன குரல்கள் மீண்டும் வீதியில், ‘பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய்...’ என்று ஒலிக்கத் தொடங்கியதில் மகிழ்ச்சி.
கரோனாவுக்கு மதம், தேசம், பொருளாதார நிலை என எதுவுமே தெரியாது. ஆனால், சக மனிதனின் இறப்பைக்கூட மத துவேசத்துக்குப் பயன்படுத்திய மனிதர்களின் கேவலமான செயல் வேதனையின் உச்சம். உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸை நமது சமூக இடைவெளி, தன்சுத்தம் மூலம் அகற்றுவோம். கண்ணுக்குத் தெரியாத வைரஸ், நமக்கு வாழ்க்கையில் நிறையப் பாடங்களைச் சொல்லியிருக்கிறது.
- நா. ஜெஸிமா ஹுசைன், ஆசிரியப் பயிற்றுநர், மேலூர் வட்டார வளமையம், மதுரை.