கருத்தரங்கம்: பெண்கள் அனைவரும் உழைப்பாளிகளே

கருத்தரங்கம்: பெண்கள் அனைவரும் உழைப்பாளிகளே
Updated on
2 min read

ரேணுகா

இந்தியாவில் ஐந்து கோடிப் பெண்கள் வீட்டு வேலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களைத் தொழிலாளர்களாகக் கருதுவதில்லை. வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியம், விடுப்பு, மருத்துவக் காப்பீடு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அமல்படுத்த வலியுறுத்தி ‘பெண் தொழிலாளர்கள் சங்கம்’ சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையைக் கண்ணியமான வேலையாகக் கருத வேண்டும் என்பதுடன் தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கருத்தரங்கின் நோக்கம். சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நேஹா வாதவன், ஐஐடி பேராசிரியர் கல்பனா கருணாகரன், கர்நாடக வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான ஸ்த்ரீஜக்ருதி சமிதி அமைப்பின் இணைச் செயலாளர் கீதா மேனன், சென்னை பெருநகர வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மாணவி தீபா, பெண் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுஜாதா மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

புகார் குழு வேண்டும்

“வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் பணியிடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்ற துறைகளில் உள்ள பெண் தொழிலாளர்களுக்குப் பணியிட பாலியல் புகார் அளிப்பதற்கான குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுபோல் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக உள்ளூர் அளவில் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான நலவாரியம், குறைந்தபட்சக் கூலி ஆகியவற்றைத் தேசிய அளவில் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார் நேஹா. சென்னை ஐஐடி பேராசிரியர் கல்பனா கருணாகரன், “நாட்டில் 26 சதவீதப் பெண்கள் தொழிலாளர்களாக உள்ளனர். பெண்கள் வீட்டிலிருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் அவர்களைத் தொழிலாளியாக கருதாமல் ‘அம்மா, மனைவி, சகோதரி, தோழி’ உள்ளிட்ட மாய அடையாளங்களிலேயே முடக்கிவிடுகிறார்கள்.

‘இல்லத்தரசி’ என்றழைக்கப்படும் பெண்கள் வீட்டில் வேலை செய்யாமலா இருக்கிறார்கள்? ஒருநாள் அவர்கள் பார்க்கும் வேலைகள் எவ்வளவு? அதனால்தான் அவர்களுக்குக் கணவர் ஊதியம் வழங்க வேண்டும் என விவாதிக்கப்படுகிறது. பெண்கள் அனைவரும் தங்களை உழைப்பாளியாகக் கருத வேண்டும். குறிப்பாக, வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்களைத் தொழிலாளியாகக் கருதுவதைவிட வேலைசெய்யும் வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள்.

இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றைக் கொடுப்பதற்குப் பதில் உணவு, உடை போன்றவற்றைக் கொடுத்து தொழிலாளியை ஏமாற்றுகிறார்கள். இதை மாற்ற வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்களைத் தொழிலாளியாகக் கருத வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும்” என்றார்.

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 39 ரூபாயை ஊதியமாகத் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதை இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு 80 ரூபாயாக உயர்த்த வேண்டும். வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு வார விடுப்பு, மருத்துவ விடுப்பு, பண்டிகையையொட்டி ஒரு மாதச் சம்பளத்தை போனஸாக வழங்குவது போன்ற கோரிக்கைகளும் இந்தக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in