Published : 10 Nov 2019 09:46 AM
Last Updated : 10 Nov 2019 09:46 AM

வாசிப்பை நேசிப்போம்: அறிவின் திறவுகோல்

அறிவின் திறவுகோல்

வாசிப்பு எப்போது தொடங்கியது என்பது சரியாய் நினைவில்லை. எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்த நாளாக இருக்கலாம். மளிகைச் சாமான்கள் கட்டி வரும் காகிதங்களை என் அம்மா பட்டு சேர்த்துவைத்துப் படிக்கத் தந்தது இன்னும் மறக்கவில்லை. ‘சண்டைக் காட்சிகள் நிறைந்த குடும்பப் படம்’ என்ற சினிமா போஸ்டரைப் படித்த சந்தோஷம் இன்றும் நினைவில் உள்ளது.

கூண்டு போட்ட உப்பு வண்டியும், பழைய சாமானுக்குக் கோலப் பொடி என்கிற சைக்கிள் சத்தமும் தவிர கிராமத்தின் அந்த ஒற்றை வீட்டைக் கடக்கும் மனிதர் தபால்காரர் கலியமூர்த்தி. அன்று அவர்தான் எங்கள் இறைத்தூதர். சைக்கிள் மணிச் சத்தம் கேட்டதும் அக்காவும் நானும் அவர் மேல் விழாத குறையாய் ஓடி புத்தகத்தை வாங்குவோம். வார இதழில் வெளியான சிவசங்கரியின் ‘ஒரு மனிதனின் கதை’, ‘பாலங்கள்’, ‘சோழ நிலா’, ம.செ., ஜெயராஜ் ஆகியோரின் ஓவியங்களுடன் இடம்பெறும் கதைகள் என வாசிப்பின் பொற்காலம் அது. மணியனின் பயணக் கட்டுரைகள், சுஜாதா, வாஸந்தி, லஷ்மி ஸ்டெல்லா புரூஸ், கீதா பென்னட், பாலகுமாரன், அனுராதா ரமணன் என நிறையப் படித்தோம். எந்தக் கூச்சமும் இன்றிப்பிறரிடம் இரவல் வாங்கிப் படித்தவைதான் அதிகம். சில புத்தகங்கள் நூலகத்திலும் கிடைக்கும்.

வாசிப்பது என்பது பொழுதுபோக்கல்ல; அது ஓர் அனுபவம். புத்தகத்தின் வரிகள் நம்மைக் கைபிடித்து எங்கெங்கோ அழைத்துச் செல்லும். சோழர்களின் வீரமும், ஒரு குடும்பத்தின் அழகும், வசந்த காலத்தின் பூக்களும், அலுவலகத்தின் அவசரமும், கல்யாண வீட்டின் கலகலப்பும், காணாமல் போன பூனைக்குட்டியும் நம் முன்னே வந்துபோகும். எங்கோ போதையில் விழுந்து கிடக்கும் ஒருவர் சிவசங்கரியின் தியாகுவையும், பஸ்ஸிலோ ரயிலிலோ கலகலப்பாய் வரும் ஒரு குடும்பப் பெண் பாலகுமாரனின் கதாபாத்திரங்களையும் நினைவூட்டுவார்கள். சுஜாதாவின் ‘ரங்கத்து தேவைதகள்’ படிக்காதவர்கள் இருப்பார்களா எனத் தெரியவில்லை.

நாம் நினைப்பதை நமக்கும் தெரியாமல் திருடிக்கொள்பவர் எஸ். ராமகிருஷ்ணன். படிக்கப் படிக்க அலுக்காத உண்மை அவரது அனுபவங்கள். ஈஷாவின் வெளியீடுகள் யோசிக்கவைப்பவை. சத்குருவின் கருத்துகளும் மரபின் மைந்தனின் மொழியாக்கமும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு விதமாக உணரக் கூடிய அதிசயம்.

வாலியின் ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’, ‘பித்தன்’, வைரமுத்துவின் கவிதைகள் இப்படி நிறைய பொக்கிஷங்கள். வாழ்வில் ஆனந்தமாக ஆரம்பித்த பல விஷயங்கள் அபத்தமாய்ப் போனதுண்டு. ஆனால், அம்மா தொடங்கிவைத்த வாசிப்பு மட்டும் எப்போதும் சந்தோஷம்தான். 85 வயதில் என் அம்மா இன்னமும் புத்தகங்களோடு வாழ்கிறார். படித்த புத்தகம், முடித்த பக்கம் இப்படி எதுவுமே தெரியாது. ஆனால், எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். வீண் அரட்டை, வெட்டி வம்பு எல்லாமே வாசிப்பில் அழியும். பயணத்தில் படிக்க, உறங்கும் முன் படிக்க, நிதானமாக ஆழ்ந்து படிக்க எனப் புத்தகங்களை வகைப்படுத்தும் அறிவு நாளடைவில் வரும்.

தனிமையில் புத்தகமே நல்ல தோழி. பேச முடியாத அல்லது பிடிக்காத சூழலில் வாசிப்பு நல்ல முகமூடி. இழப்பிலும் துக்கத்திலும் என்னைத் தேற்றியவை புத்தகங்களே. நம்மை அவதானித்து யாருக்கும் தெரியாமல் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும் தோழி புத்தகங்கள்.

வாசிப்பு, வாழ்க்கையின் அழகிய தருணம். வாசிப்பு என்பது நம் ரசனைக்கேற்ப நாம் சிருஷ்டிக்கும் உலகம். அந்த ஆனந்தப் பெருவெளியில் நாம் சந்திப்போம். புத்தகம் ஓர் ஆனந்தப் பேழை; வாசிப்பு என்பதே அழகிய திறவுபோல்.

- சித்ரா சிவக்குமார், கோவை.

தலைமுறையாய்த் தொடரும் வாசிப்பு

ன்னுடைய பிறந்த வீட்டாரும் புகுந்த வீட்டாரும் பெரும்படிப்பாளிகள். படிப்பாளிகள் என்றால் ஏதோ இரண்டு, மூன்று பட்டம் வாங்கியவர்கள் என நினைத்துவிடாதீர்கள். என்னுடைய அம்மா ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால், அந்தக் காலத்தில் ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டே நூல்களை இடைவிடாது படிப்பார். அப்பா மிக்சர் கடை வைத்திருந்தார். கடையில் அனைவரும் பம்பரமாக வேலைசெய்ய வேண்டும். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’, எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’, ‘பொன் விலங்கு’, ‘சமுதாய வீதி’, அகிலனின் ‘பாவை விளக்கு’, ‘வேங்கை மைந்தன் எங்கே போகிறான்’ ஆகியவற்றைப் படித்து பைண்டிங் செய்துவைத்துள்ளார். என் தங்கையோ பொட்டுக்கடலை மடித்துத் தரும் காகிதத்தைக்கூட விடமாட்டாள்.

பிறந்த வீடு எப்படியோ புகுந்த வீடும் அப்படியே. என் கணவருக்கும் அவருடைய தங்கைக்கும் வீட்டுக்கு வரும் வார இதழை யார் முதலில் படிப்பது என்று சண்டையே நடக்கும். புத்தகத்தை வாங்கிக்கொண்டு, சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வீடுவரை படித்துக்கொண்டுவருவார்.

ஒன்பதாம் வகுப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கினேன். அப்போது அப்பா பைண்டிங் செய்துவைத்த புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து வேறு வேலையில்லை. பாலகுமாரனின் ‘தாயுமானவன்’, ‘இரும்புக் குதிரைகள்’, நீல. பத்மநாபனின் ‘ உறவுகள்’, தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கி. ராவின் ‘கதவு’, லட்சுமியின் நாவல்கள், சிறுகதைகள் என ஏராளமான புத்தகங்கள் என் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தின.
என்னுடைய வாசிப்புப் பழக்கத்தைப் பார்த்து என் மகள்கள் சாப்பாட்டுத் தட்டுடன் உட்காரும்போது கையில் ஏதாவது ஒரு புத்தகம் கண்டிப்பாக இருக்கும். வாழ்க்கையில் மனிதர்களுடன் மட்டுமல்ல; புத்தகங்களோடு சேர்ந்தே பயணம் செய்கிறேன்.

- முத்துலெட்சுமி, திண்டுக்கல்.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். எந்தப் பதிப்பகம் என்பதையும் குறிப்பிடுங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x