வாசிப்பை நேசிப்போம்: பிள்ளைகளால் கிடைத்த பேறு

வாசிப்பை நேசிப்போம்: பிள்ளைகளால் கிடைத்த பேறு
Updated on
2 min read

புத்தகத்தைக் கையால் தொடும்போதெல்லாம் எந்தக் கவலையுமற்று வானில் பறப்பதைப் போல் உணர்வேன். சிறு வயதில் பாடப் புத்தகங்களைப் படித்ததோடு சரி. மற்ற புத்தகங்கள் எவற்றையும் வாசித்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்கு விவசாயம்தான் உலகம். ஓயாத வேலைக்கு நடுவேதான் எனது இளமைக்காலம் ஓடியது. ஓட்டம் குறைந்து கால்கள் சோர்ந்து அமர்ந்தபோதுதான் கைகள் புத்தகத்தை எடுத்தன.

அப்படித்தான் புத்தகங்கள் என் உலகத்தில் நுழைந்தன. தொடக்கத்தில் ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களைத்தான் விரும்பிப் படித்தேன். வாசிப்பின் ஈர்ப்பு கூடக்கூட, மற்ற புத்தகங்களையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டது. அதற்கான களம் அமைத்துக் கொடுத்துத் தண்ணீர் ஊற்றிவர்கள் என் பிள்ளைகள். மிக இறுக்கமான காலகட்டத்தையெல்லாம் எந்தவிதச் சலனமும் இன்றி என்னைக் கடக்கவைத்தவை புத்தகங்களே. சில புத்தகங்கள் எனக்கே என்னை அடையாளம் காட்டின.எழுதுவதற்கான ஆர்வத்தைக் கொடுத்ததும் வாசிப்புதான். சோர்ந்து அமரும்போதெல்லாம் உற்ற நண்பனாகத் தோள்கொடுப்பவை புத்தகங்களே.

பால் கலாநிதி எழுதி, தமிழாக்கம் செய்யப்பட்ட ‘சுவாசம் காற்றில் கரைந்தபோது’ புத்தகத்தைப் படித்தபோது கண்களில் நீர் நிறைந்தது. வெ.இறையன்பின் ‘உள்ளொளிப் பயணம்’, எஸ்.ரா.வின் ‘இடக்கை’, ‘கடவுளின் நாக்கு’ போன்ற புத்தகங்கள் தற்போதைய வாசிப்பு உலகத்தில் என் வழித்துணையாகப் பயணம் செய்கின்றன.

நான் கேட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய என் பிள்ளைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் சனிக்கிழமைதோறும் வெளியாகும் நூல்வெளி, நூல் அறிமுகம் போன்றவை எனக்குப் பல புத்தகங்களை அறிமுகம் செய்தன. வாசிப்பு மட்டுமே நம் அறிவைச் சுடர்விடச் செய்யும்.

- வசந்தி, சிவகங்கை.

நினைவுகளைச் சுமந்திருக்கும் புத்தகங்கள்

என் வாசிப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என் அம்மா. சமைப்பது அம்மாவுக்குப் பிடிக்கும். அதைவிட அதிகமாகப் புத்தக வாசிப்பு அவருக்குப் பிடிக்கும். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்தபடி இருப்பார். எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். வாசிப்புக்கான வாசல் ஏதும் இல்லாத எங்கள் கிராமத்தில் அம்மாவுக்கு மட்டும் எப்படித்தான் புத்தகங்கள் கிடைக்குமோ தெரியாது. அம்மா படிக்கும் மாதாந்திர நாவலின் நடுவில் இருக்கும் சித்திரக்கதைகளை நான் படிப்பேன். அவர் அதை எப்போதும் தடுத்தது இல்லை. ஆனால், என் கண்ணில் எந்தப் புத்தகம் பட வேண்டும் என்பதில் அம்மா தெளிவாக இருந்தார்.

15 வயதில் ‘பொன்னியின் செல்வனை’ப் படித்தேன். அதற்காக இரண்டு ஆண்டுகள் அம்மா என்னைத் தயார் செய்தார். நாவலின் அத்தனை கதாபாத்திரங்களையும் அழகாக அறிமுகம் செய்தார். ஆழ்வார்க்கடியான் முதல் இடும்பன்காரிவரை அவர்களைப் பற்றி அம்மா சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகான கதை சொல்லி அவர்! ‘பொன்னியின் செல்வன்’ கல்கியில் தொடர்கதையாக வந்தபோது அதில் வரும் படங்களுக்காகவே அவற்றை வெட்டியெடுத்து பைண்டிங் செய்து வைத்திருப்பார்களாம். பலர் வீட்டில் அந்தப் புத்தகம் இருக்குமாம். ஆனால், யாருக்கும் அதை இரவல் கொடுக்க மாட்டார்களாம். எனக்காக எங்கெங்கோ தேடி முதல் பாகத்தை மட்டும் வாங்கி வந்து காட்டினார் அம்மா.

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்ததும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைத் தாத்தா வாங்கிக் கொடுத்தார். வாசிப்பை அம்மா கற்றுத்தர, புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது, வாங்கிய புத்தகங்களை எப்படிப் பாதுகாப்பது என்பதையெல்லாம் தாத்தா கற்றுக்கொடுத்தார். புத்தகம் வாங்கிக் கொடுத்ததுடன் அவர் திருப்தியடையவில்லை. பேத்தி அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே என்று அழகாக பைண்டிங்கும் செய்துகொடுப்பார். அந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம், “பத்திரமா வச்சுக்கணும்மா. ஒரு பாகம் தொலைஞ்சுடுச்சுன்னாகூட மொத்தமும் வீணாயிடும்” என்று நூறு முறையாவது அம்மா சொல்லியிருப்பார். என்னை விட்டுப் போன அம்மாவின் நினைவாகவும் தாத்தாவின் நினைவாகவும் இன்று அந்த ஆறு பாகங்களும் நிலைத்துவிட்டன.

- சித்ரா குப்புராஜ், கோயம்புத்தூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in