

மீன்கள் மீந்து போனால்தான் கருவாடு என்று நினைத்துக்கொண்டிருந்த மீனவப் பெண்கள், இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவாடு உற்பத்தி செய்கிறார்கள். அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். தங்களது இந்த வெற்றிக்குக் காரணமாக பூம்புகார் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தைக் கைகாட்டுகிறார்கள் அந்த மீனவப் பெண்கள்.
நாகை மாவட்டம் பூம்புகாரில் 2009-ல் சுனாமி மறு வாழ்வுத் திட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்த மையம் தொடங்கப்பட்டது. சுகாதாரமான முறையில் மீன்களைக் கையாளுதல், மீன் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைப் பெண்களுக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் இந்த மையத்தின் நோக்கம். கடந்த மூன்றாண்டுகளில் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆறு கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் இங்கே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தற்போது மூன்று மகளிர் குழுக்களைச் சேர்ந்த அறுபது பேர் இங்கே கடல் வர்த்தகத்தில் தினமும் சுறுசுறுப்பாய்ச் சுழல்கிறார்கள்.
“அனைவருக்கும் தரமான மீன் உணவை வழங்குதல், மீனவப் பெண்களைத் தற்சார்பு உடையவர்களாக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் இது இரண்டும்தான் எங்களின் இலக்கு” என்கிறார் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்விழி.
இங்குள்ள மீன் பதன நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கிலோ அளவுக்கு மீன்களைப் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைக்க முடியும். இங்கே கருவாடு காயவைப்பதற்குச் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் உலர்த்திகளைப் பயன்படுத்துகிறார்கள்.
“நாங்கள் இங்கு வரும்வரை, மீந்துப் போன மீன்களைத்தான் கருவாடு போட முடியும் என்ற மன நிலையில்தான் மீனவப் பெண்கள் இருந்தார்கள். அவர்களை அந்த மனநிலையிலிருந்து மாற்றி நல்ல மீன்களைத்தான் கருவாடு போட வேண்டும் என்று புரியவைப்பதே எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
கடலிலிருந்து மீன்களைப் பிடிக்கும் போதே சுகாதாரமான முறைகளைக் கையாள வேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்தே பாக்டீரியாக்கள் துரத்த ஆரம்பித்துவிடும். இதைப் புரியவைப்பதற்காக, மீனவர்களோடு கடலுக்குச் செல்லும் எங்கள் குழுவினர் அங்கே சுகாதாரமான முறையில் மீன் பிடிப்பது குறித்து பயிற்சி கொடுப்பார்கள். மீன்களைக் கரையில் கொண்டு வந்து இறக்கும் இடத்தில் எத்தகைய வழிகளில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதை மீனவப் பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். மீன் கழிவுகளை மறுசுழற்சி செய்து வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்துவதும் இப்போது இந்தப் பெண்களுக்கு அத்துபடி.
இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினை சந்தைப்படுத்துதல்தான். இங்கே சுகாதாரமான முறையில் மீன்கள் கையாளப்படுவது குறித்து இன்னும் வெளியில் சரியாகத் தெரியாமல் இருக்கிறது. அதனால் தினமும் ஐநூறிலிருந்து ஆயிரம் கிலோ மீன், கருவாடுகளை மட்டுமே இவர்களால் சந்தைப்படுத்த முடிகிறது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்கனவே இங்கு பயிற்சி முடித்த ஐநூறு பெண்களும் களத்துக்கு வருவார்கள். அவர்களும் கைகோத்தால் வாரத்துக்குப் 10 ஆயிரம் கிலோ வரை மீன், கருவாடு மற்றும் இதர கடல் உணவு வகைகளை இவர்களால் சந்தைப்படுத்த முடியும்.
ஒரு நிறுவனமாக ஏற்படுத்தி மீன்களை விற்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இவர்கள் தயாராக வேண்டும். அதற்கான லைசென்ஸ் பெறுவது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து இப்போது இந்தப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். கூடிய விரைவில் இவர்களும் தொழில் முனைவோர்களாக மிளிர்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் வேல்விழி.