

“ஒரு குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசுகள், அந்தக் குடும்பத்தின் பாரம்பரியத்தை விட்டு விலகி, புதிய விஷயங்களுக்குப் போய்விடுவார்கள் என்பார்கள். நான் அதை மாற்றிக் காட்டியிருக்கிறேன். என் தாத்தா, பாட்டி, அப்பாவின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி விட்டேன்; அதுபோதும் எனக்கு” பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மதுவந்தி அருண். நடிகர் ஒய்.ஜி. மகேந்திராவின் மகள். பத்மா சேஷாத்ரி பள்ளிகளை நடத்தும் ஒய்.ஜி.பி. ராஜலட்சுமியின் பேத்தியான மதுவந்தி, பாட்டி வழியில் ‘காலிபர் இன்டர்நேஷனல் பள்ளி’யைத் தொடங்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
பரதநாட்டியக் கலைஞரான மதுவந்தி இப்போது தாத்தா, அப்பா வழியில் நாடக மேடைகளையும் கலக்க ஆரம்பித்துவிட்டார். இவருடைய ‘சிவசம்போ’ நகைச்சுவை நாடகம் அமெரிக்காவில் 12 நகரங்கள் உள்பட, இதுவரை 60 முறை மேடைகளைக் கண்டிருக்கிறது.
நாடகப் பயணம்
சினிமா, தொலைக்காட்சி போன்றவை நாடக மேடைகளை விழுங்கிவிட்டன என்று சொல்லப்படும் நிலையில், மதுவந்தியின் நாடகங்கள் கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்திருக்கின்றன. மதுவந்தி நினைத்திருந்தால் சினிமாவில் எளிதாகக் காலடி எடுத்து வைத்திருக்க முடியும். ஆனால், அதை அவர் விரும்பவில்லை. அவரது சிந்தனையெல்லாம் நாடகங்களையே மையமாகக் கொண்டு சுழல்கிறது.
‘சிவசம்போ’ வெற்றியைத் தொடர்ந்து இப்போது ‘பெருமாளே’என்ற நகைச்சுவை நாடகத்தை மார்ச் 12-ம் தேதி சென்னை வாணி மஹாலில் அரங்கேற்றத் தயாராகிவருகிறது மதுவந்தியின் ‘மகம்’ நாடகக் குழு.
“சினிமா பிரபலங்கள் பலரும் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் பிரகாசித்தவர்கள்தான். அவருடைய வழியில் ஒய்.ஜி.மகேந்திரா நாடகத் துறையில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்’ நாடகக் குழுவின் அறுபதாண்டு நிறைவு விழா நடந்தது. அதில் அவர் முன்பு நடித்த ‘சக்தி’ நாடகத்தை, காலத்துக்கேற்ப மாற்றி நாங்கள் அரங்கேற்றினோம். மதுவந்தியும் அதில் நடித்திருந்தார். நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 31 மேடைகளில் ‘சக்தி’யை அரங்கேற்றினோம்’’ என்கிறார் மகம் நிறுவனத்தின் நாடகங்களை இயக்கும் சுரேஷ்வர்.
புதுமைக் கல்வி
தன்னுடைய ‘காலிபர் இண்டர்நேஷனல் பள்ளி’யில் அறிவுசார் கல்வி முறையைப் பல்வேறு விதங்களில் மதுவந்தி செயல்படுத்திவருகிறார். இவருடைய பள்ளியில் குழந்தைகளை அறைக்குள் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாகப் பாடங்களைத் திணிக்காமல், அவர்களுடைய ஆர்வங்களுக்கு முன்னுரிமை கொடுத்துக் கற்பிக்கிறார்கள்.
என்.ஜி.ஓ-க்களின் உதவியோடு படித்துக்கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதி தருவதுடன், ஒவ்வொரு நாடகத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை அந்தக் குழந்தைகளின் நலனுக்காகக் கொடுத்து உதவுகிறது மதுவந்தியின் நாடகக் குழு. “திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமலிருக்கும் குழந்தைகளுக்கு சென்னையில் விஜயதசமியின்போது மூன்று நாட்களுக்கு ‘அக்டோபர் ஆலாபனை’ என்ற பெயரில் மேடை அமைத்துக் கொடுக்கிறோம். நடிப்பில் ஆர்வம் இருக்கும் குழந்தைகளைத் தொடர்ந்து ‘மகம்’ நாடகக் குழு மூலம் ஊக்கப்படுத்திவருகிறோம்” என்கிறார் மதுவந்தி.
பன்முகத்தன்மை
பரதநாட்டியம், பள்ளி நிர்வாகம், மேடை நாடகங்கள் என இடைவிடாத மாரத்தான் போல ஓடிக்கொண்டிருக்கும் மதுவந்தி, அடுத்த கட்டமாக மீடியாவிலும் தடம்பதிக்கப் போகிறாராம். இத்தனையும் எப்படிச் சாத்தியமாகிறது என்று கேட்டால், “தொண்ணூறு வயதில் என் பாட்டி ஐந்து மணிக்கு எழுந்து கோயிலுக்குப் போகிறார். பள்ளிக்கூடப் பணிகளைக் கவனிக்கிறார். என்னுடைய நாடகங்களை முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்து விமர்சிக்கிறார். எந்த நேரத்தில் அழைத்தாலும் பார்ட்டிக்கு வரத் தயார் என்கிறார். அவரே அப்படி இருக்கும்போது, 38 வயதில் இதைக்கூடச் செய்யாவிட்டால் எப்படி?”என்று திரும்பக் கேட்கிறார் மதுவந்தி.
“கலையும் கல்வியும் எங்கள் குடும்பப் பாரம்பரியத்தில் கலந்த ஒன்று. இயல்பாக எங்களுக்குள் உதிக்கும் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கிறோம். நாடகங்களில் எந்தக் கருத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. என்றாலும் சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டிய செய்தியை, உரிய விதத்தில் சொல்லிவிடுவோம். இதுதான் எங்கள் குழுவின் வெற்றி ரகசியம்’’ என்கிறார் மதுவந்தி.
படங்கள்: ம. பிரபு