

“இந்தக் கலையை பெருமையா நினைச்சதால பணம் சம்பாதிக்க நினைக்கலை. ஆனா, நாங்க உயிரா நினைக்கிற கலையுலகம், இப்ப சாக்கடையா போச்சு. அதுக்குள்ளதான் நாங்களும் நீந்திக்கிட்டு இருக்கோம்’’ - ஆற்றாமையை அனலாகக் கக்குகிறார் கலைமாமணி விருது பெற்ற கரகம் கல்யாணி.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த கல்யாணியும் அவருடைய மகள் விசித்திராவும் கரகாட்டத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்கள். கல்யாணியின் இளைய மகள் ஜெகதாம்பாளும் கரகக் கலைஞர். முப்பது வருடங்களுக்கு முன்பே கலைமாமணி விருதைப் பெற்றுவிட்ட கல்யாணி, துளிக்கூட முகச்சுளிப்புக்கு இடம்தராமல் ஆடிப் பெயர் வாங்கியவர். தன்னைப் போலவே தன் பிள்ளைகளையும் கரகக் கலையில் ஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
“அம்மாவும் அப்பாவும் நாடகக் கலைஞர்கள். அதனால எனக்குள்ளயும் இயல்பாவே கலை இருந்துச்சு. ஏழு வயசிருக்கும் போதே கரகத்தைத் தூக்கி தலையில வைச்சவ நான். நாட்டரசன்கோட்டை வீரசங்கு கோனார்தான் எனக்கு குரு. அவங்க வீட்டுல வேலை செஞ்சுக்கிட்டே கரகத்தைப் படிச்சேன். நாட்டரசன்கோட்டை குருநாதர் கோயிலில்தான் எனது அரங்கேற்றம். காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திடலில் முதன் முதலில் சம்பளம் வாங்கி ஆடினேன். அன்னைக்கி மாதிரிங்களாய்யா இப்ப கரகம் ஆடுறாங்க? கரகம்ங்கிற பேருல கண்றாவி ஆட்டம் ஆடிட்டு இருக்காங்க’’ தலையிலடித்துக் கொள்கிறார் கல்யாணி.
பெரும்பாலும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தழும்புகள் நிறைந்தாகவே இருக்கும். இதற்குக் கல்யாணியும் விதிவிலக்கில்லை. பட்டுக்கோட்டை பக்கம் கரகாட்டம் ஆடப்போன இடத்தில் ஊர் அம்பலக்காரரான ராமசாமிக்குக் கல்யாணி மீது காதல் பிறந்தது. அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் சராசரிப் பெண்களைப் போல கல்யாணிக்கு பகிரங்கமாக கணவருடன் குடும்பம் நடத்த முடியவில்லை.
“ஊருக்கு மிராசுதாரா இருக்கவுக. ஏற்கெனவே மனைவி, மக்கன்னு இருக்கவுக திடீர்னு ஒன்னைய எனக்குப் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்னப்ப, ஊரு உலகம் தூத்தும்னுட்டு அவுகளோட காதலை நிராகரிச்சுட்டேன். அதுக்கப்புறம் நான் நினைக்காத ஒண்ணும் நடந்துச்சு. அவுகளோட சம்சாரமும் மகளும் எங்க வீட்டுக்கே வந்து என்கிட்டே பேசினாங்க. ரங்கம் கோயில்ல முறைப்படி கல்யாணம் நடந்துச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் அவுக என்னைய கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்கிட்டாக. ஆனா, என்னதான் இருந்தாலும் ரெண்டாந்தாரம் தானேய்யா.. அவுக இறந்த பின்னாடி இத நாங்க நல்லாவே உணர்ந்தோம்’’ என்று தன் வாழ்க்கையின் ரணங்களை நினைவுகூர்ந்தார் கல்யாணி.
தனது தலையில் கரகம் இருந்த காலத்திலேயே கரகாட்டத்தின் போக்கு மாறிப்போனதால் தனக்குப் பிறகு தன் பிள்ளைகளின் தலையில் இந்தக் கரகம் இறங்கக் கூடாது என நினைத்தார் கல்யாணி. ஆனால், காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. பள்ளி ஆண்டு விழாவில் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் போட்டி நடனப் பாடலுக்கு ஆடுவதற்கு மூத்த மகள் விசித்திராவை தயார்படுத்தினார் கல்யாணி. விசித்திராவின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள், ‘இவ ரொம்பப் பெரிய ஆளா வருவா’ என்று கல்யாணியின் கையைப் பிடித்துப் பாராட்டினார்கள். அந்தப் புகழ்ச்சியில் மயங்கிப்போன கல்யாணி, மகளின் தலையிலும் கரகத்தை தூக்கி வைத்தார். அக்கா ஆடுவதைப் பார்த்ததும் தங்கை ஜெகதாம்பாளுக்கும் கால்கள் நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் மூவருமே கரகத்தில் மேடைகளைக் கலக்கினார்கள்.
“இப்ப கரகம் ஆடுற பெரும்பாலானவங்க நாலு பாட்டுக்கு கரகம் ஆடிட்டு அப்புறமா அரைப் பாவாடையை கட்டிக்கிட்டு வந்து ஆட ஆரம்பிச்சிடுறாங்க. கரகத்துக்கும் அரைப்பாவாடைக்கும் என்னங்க சம்பந்தமிருக்கு? அது மாதிரி ஆடுற இடத்துல நாம ஆடக் கூடாதுன்னு தீர்மானிச்சுக் கிட்டுத்தான் நானும் தங்கச்சியும் கரகத்தைத் தூக்கி தலையில வைச்சோம். எங்களயும் அது மாதிரி ஆடச் சொல்லுவாங்க. ஆனா, நாங்க அதுக்கு இடம் குடுக்குறதில்லை. நாங்க இப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பதால எங்களுக்குத் தொழிலில் நிறைய எதிரிகள், போட்டி பொறாமைகள்.
அப்பா இருந்தவரைக்கும் எல்லாரும் எங்களுக்கு மரியாதை குடுத்தாங்க. அதனால நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களுக்கு அப்பத் தெரியல. அப்பா இறந்த பின்னாடி பலரும் எங்களுக்குப் பல வழிகளில் தொல்லை குடுத்தாங்க. எல்லாத்தையும் கடந்து எதிர் நீச்சல் போட்டுட்டு இருக்கோம்’’ என்கிறார் விசித்திரா.
எம்.ஏ., படித்திருக்கும் ஜெகதாம்பாள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கரகாட்டக் கலைக்கான பகுதிநேர ஆசிரியராக இருந்தார். சில சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக வேலையை உதறினார். கரகாட்டம் என்றாலே கவர்ச்சிதான் என்ற நிலையால் மனம் நொந்த சகோதரிகள் இருவரும் பரதம் படித்துவிட்டு, அதை மற்றக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கரகக் கலையை மதிக்கும் இடங்களில் மட்டும் கரகம் ஆடுகிறார்கள்.
“கஞ்சிக்கு இல்லைன்னாலும் எங்கக் கலையோட கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு 40 பவுன் நகை, கார் எல்லாத்தையும் சாப்பாட்டுக்காக வித்தாச்சு. இருந்தாலும் ஒரு அருமையான கலையை இப்படி அழிக்கிறாங்களேங்கிற ஆதங்கம் எங்களை வதைக்குது. பண்பாட்டையும் கலை நயத்தையும் வெளிப்படுத்தும் கலை கரகம். அதில் கவர்ச்சியைப் புகுத்த வேண்டாம். அப்படி புகுத்த நினைக்கிறவங்க தயவு செஞ்சு அதை ‘கரகாட்டம்’னு சொல்லாதீங்க; வேற ஏதாச்சும் பேரு வைச்சுக்குங்க’’ என்று ஆதங்கப்படுகிறார் ஜெகதாம்பாள்
இந்தச் சகோதரிகளைப் பெண் கேட்டு வருபவர்கள், ‘கரகம் ஆடக் கூடாது’ என்கிறார்களாம். இல்லாவிட்டால், ‘யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல் கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்கிறார்களாம்.
“இது இரண்டுமே எங்களுக்கு இஷ்டமில்லை. எங்களோடு சேர்த்து அம்மாவையும் பரிவோடு பார்த்துக் கொள்ளும் பக்குவம் உள்ள வரன்கள் வரும் வரை காத்திருப்போம். கடைசிவரை அப்படிப்பட்ட நல்லவர்கள் கிடைக்காவிட்டால் எனக்கு இவளும் இவளுக்கு நானும் துணையாக இருந்து விட்டுப் போகிறோம்’’ என்று சகோதரிகள் இருவரும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள்.