

கணினி மவுஸ் பிடித்து அசத்தும் நூற்றுக்கணக்கான பெண்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூறு இளம் பெண் படைப்பாளிகளை உருவாக்கும் பெண்ணைப் பார்ப்பது அரிது. கடந்த வாரம் இந்தியக் கணினி சாம்ராஜ்யத்தின் தலைமைப் பீடமான பெங்களூர் நகரில் உள்ள ஐ.பி.எம் நிறுவன வளாகத்தில் தேசிய அளவிலான ஒரு பிரம்மாண்டக் கணினி போட்டி நடைபெற்றது. அலைபேசி மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தைப் (cloud technologies) பயன்படுத்திச் சாமானிய மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் ஆப்ஸ் (Apps) உருவாக்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை.
ஆப்ஸ் கண்டுபிடித்த தமிழ் மாணவிகள்
பூனே, போபால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 105 பங்கேற்பாளர்கள் 35 குழுக்களாகப் பிரிந்து தங்களது மண்ணுக்கு ஏற்ற ஆப்ஸை உருவாக்கி நடுவர்களிடம் சமர்ப்பித்தனர். பரிசு வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது. முதல் மூன்று பரிசுகளையும் வென்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள். முதல் பரிசை வென்ற ஆர்.பத்மப்ரியா மற்றும் என்.பி.வைஷ்ணவி இருவரும் மதுரையில் உள்ள தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள். இரண்டாம் பரிசு வென்ற எஸ்.கற்பகவல்லி மற்றும் பி.காயத்ரி இருவரும் மதுரை கல்லூரி மாணவிகள். இவர்களில் யாரும் பொறியியல் கல்லூரி மாணவிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 12 பேர் இந்தத் தேசியக் கணினிப் போட்டியில் பல நிலைகளைக் கடந்து பங்கேற்றுள்ளார்கள்.
விவசாயத்துக்கு ஆப்ஸ்
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் சராசரி மக்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களையத் துணை புரியும் வகையில் இவர்கள் அனைவரும் பல்வேறு ஆப்ஸை உருவாக்கியுள்ளார்கள். பத்மப்ரியா மற்றும் வைஷ்ணவி இணைந்து ‘புத்திசாலித்தனமான வேளாண்மை’ என்ற பெயரில் வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்பு செட்டின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஆப்ஸை வடிவமைத்துள்ளனர். வயல்வெளியில் இருக்கும் பம்பு செட்டில் பாயும் மின்சாரம் மற்றும் வோல்டேஜின் அளவு, மண்ணின் ஈரப்பதம், மழை நீர் தேக்கம் போன்றவற்றைக் கண்காணிக்கும் ஆப்ஸ் இது. அதாவது, ஸ்மார்ட் போன் திரையில் ஒரே முறை விரலால் வருடியதுமே பம்பை ஆன் அல்லது ஆஃப் செய்யும் விதத்தில் ‘புத்திசாலித்தனமான வேளாண்மை’ ஆப்ஸ் உருவாக்கியுள்ளார்கள்.
இங்க இடம் இருக்கு!
போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் இடம் எங்கே காலியாக உள்ளது என்பதைக் கண்டறிந்து காட்டும் ‘பார்க்கிங் ஏரியா’ ஆப்ஸை உமா, கற்பகவல்லி மற்றும் காயத்ரி உருவாக்கியுள்ளர்கள். வாகன நிறுத்தும் இடத்தை வாடகைக்கு விடத் தயாராக இருக்கும் நில உரிமையாளர்களையும், தங்கள் கார்களை பார்க்கிங் செய்ய உகந்த இடம் தேடும் கார் உரிமையாளர்களையும் இணைக்கவும் இந்த ஆப்ஸ் உதவும். அட! அசத்திவிட்டார்களே நம் தமிழ் யுவதிகள் என்ற பெருமையோடும் ஆச்சரியத்தோடும் அவர்களிடம் பேசியபோது, அவர்கள் சொன்னது ‘எல்லாப் புகழும் மணி மாலா அவர்களையே சேரும்’ என்பதுதான்.
நம்ம ஊரு பெண்கள் தயார்!
மதுரையைச் சேர்ந்த மணிமாலா மற்றும் அவர் சகோதரர் செந்தில் குமார் இருவரும் இணைந்து மீடூமெண்டார்.ஓஆர்ஜி (metoomentor.org) எனும் அமைப்பை 2014-ல் தொடங்கியுள்ளார்கள். பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் செந்தில் குமார். அவருக்கு 2014-ன் தொடக்கத்தில் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் நடத்தும் டெக்னோவேஷன் சேலஞ்ச் (Technovation Challenge) எனும் சர்வதேச அளவிலான கணினி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. புதுமையான தொழில்நுட்பத்தைச் சுயமாக வடிவமைக்கும் இளைஞர்களைக் கண்டறிந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பை ஏற்ற நிலையில், மதுரையில் இருக்கும் அவர் தங்கை மணிமாலாவோடு செந்தில் கலந்துரையாடினார். “நாம் கல்லூரி படித்த காலகட்டத்தில் இது போன்ற வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருப்போம்” என செந்தில் கூறினார். ‘பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும், படிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமே சென்றடையும் வாய்ப்பை ஏன் நமது சொந்த ஊரான மதுரை வாழ் இளைஞர்களுக்கு அதுவும் பெண்களுக்கு அளிக்கும்படி செய்யக் கூடாது?’ எனும் சிந்தனை மணிமாலாவுக்கு உதித்தது. முதல் தலைமுறை பட்டதாரியான இவர்களுக்குப் பலமான பொருளாதாரப் பின்னணி இல்லாத சூழலில், தங்கள் எண்ணத்துக்கு எப்படி வடிவம் கொடுப்பது எனக் குழப்பமாக இருந்தது. முதலில் மணிமாலா அவர் படித்த மதுரைக் கல்லூரி மற்றும் தியாகராஜர் கல்லூரியை அணுகினார். தங்கள் முன்னாள் மாணவியின் தொலைநோக்குப் பார்வை கண்டு பூரித்து அனுமதி அளித்தனர்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஃபயர் ஃபாக்ஸ் தொழில்நுட்பங்கள் கணினி உலகில் கோலோச்சும் காலம் இது. ஆனால் பயன்பாட்டிலிருக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் நம் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் அமலாக்கப்படவில்லை. செந்தில்குமார் தங்கள் கருத்தை கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னிலை வகிக்கும் நிறுவனங்களிடம் விளக்க, அவர்களும் மாணவிகளுக்கு இலவசமாகத் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயிற்றுவிக்க முன்வந்தனர்.
கனவு நிஜமானது!
ஒருபுறம் வணிகப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற மணிமாலா இளம் கல்லூரி மாணவிகளுக்கு மென்திறன் பயிற்சி அளிக்க, மறுபுறம் செந்தில் பெரிய நிறுவனங்களின் துணையோடு தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்பிக்க, மீடூமெண்டார் 2014, பிப்ரவரி மாதத்தில் உருவெடுத்தது. நகர்ப்புறப் பெண்களிடம் இருக்கும் அதே அளவு திறமைகள் கிராமப்புற இளம் பெண்களிடமும் மிளிர்கிறது
எனக் கூறும் மணிமாலா அந்தத்திறனை வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பதே அவர்களுடைய பின்னடைவுக்குக் காரணம் என்கிறார்.
கடந்த ஒரு வருடத்தில் இந்த அமைப்பு 280 கல்லூரி மாணவிகளுக்குத் தொழில்நுட்பப் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த, இலவசமாகப் பயிற்சி யளித்துள்ளது. வளர்த்தெடுத்தத் திறனை வெளிக்காட்டவும் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படிப் பயிற்சி பெற்ற இளம் பெண்கள் பல தொழில்நுட்பப் போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஐ.டி நிறுவனங்கள் அவர்களுக்கு வேலை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் மணிமாலா.
தொடர்புக்கு: மணிமாலா 7708979151, metoomentor.org