முகங்கள்: நேற்று ஆசிரியர் இன்று போராளி

முகங்கள்: நேற்று ஆசிரியர் இன்று போராளி
Updated on
2 min read

சமூகத்தில் பிரச்சினைகளுக்குப் பஞ்சமே இல்லை. எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் சென்றுகொண்டிருப்பவர்கள் மத்தியில், தான் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் தொழிலைத் தூக்கியெறிந்துவிட்டு, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனியாளாகப் புறப்பட்டிருக்கிறார் நர்மதா நந்தகுமார்.

சென்னையில் ரயில்வே தொழிலாளியான தன் தந்தை மதுவுக்கு அடிமையானதால், நர்மதாவின் குடும்பம் பெரும் சிரமத்தை அனுபவித்தது. எம்.ஏ., எம்.ஃபில். படித்தார். திருமணம் முடிந்ததும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவந்தார். இதற்கிடையில் தமிழகத்தில் அரசே டாஸ்மாக் கடையை நடத்தியது. பொதுமக்களுக்கு இலவசப் பொருட்களை வழங்குவதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளை நடத்துவதாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இதனால் நர்மதாவின் உள்ளத்தில் நெருப்பு சுழன்றுகொண்டேயிருந்தது. அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. அரசாங்கம் கொடுத்த இலவச மிக்ஸி, கிரைண்டரைத் திருப்பிக் கொடுத்தார் நர்மதா.

ஆசிரியப் பணியை விட்டுவிட்டு மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் புயலாகப் புறப்பட்டார். அந்த நேரத்தில்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. உடனடியாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். தொகுதி முழுவதும் சைக்கிளில் தனியாகப் பிரசாரத்தை மேற்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தத் தேர்தலில் 300 வாக்குகளைப் பெற்றார்.

அம்பத்தூர் ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை தனியாளாக ஒரே வாரத்தில் அகற்றினார். அதேநேரத்தில் தஞ்சாவூரில் காவிரி நீருக்காக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். விவசாயிகளிடம் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வூட்ட தஞ்சைக்கு விரைந்தார். தஞ்சை பெரிய கோவில் அகழியைப் பார்த்து அதிர்ந்தே போனார். அகழி முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை ஒரு நாள் முழுவதும் சுத்தம் செய்து, தஞ்சாவூர் மக்களைக் கவர்ந்தார்.

மெரினா போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மதுரை பாலமேட்டுக்குச் சென்று ஒரு மாட்டு வண்டியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக வாடிப்பட்டி காவல்துறையினர் இவரைக் கைதுசெய்து வழக்கும் பதிந்தனர். எதைக் கண்டும் பயமில்லாமல் தன் பணியைத் தொடர்ந்தார். வைகை அணையைத் தூர்வாரச் சென்றபோது, தற்கொலை செய்துகொள்ள வந்ததாகத் தவறாகப் புரிந்துகொண்டு காவலர்கள் கைதுசெய்தனர்.

மணல் மாபியாக்களைத் தடுத்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கரூருக்குச் சென்றார். அங்கேயும் காவலர்கள் கைதுசெய்தனர். இப்படி ஓய்வின்றிப் போராடும் நர்மதாவுக்குச் சொந்த ஊரான ராஜபாளையத்தில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

“அப்பா மதுவுக்கு அடிமையானதால், அதை முற்றிலும் ஒழிப்பதில்தான் என் போராட்டத்தின் வெற்றியே அடங்கியுள்ளது. நான் போராடும் இடங்களில் எனக்குப் பத்திரிகையாளர்கள் மட்டுமே துணை நிற்கிறார்கள். குடும்பத்தைவிட நாட்டை அதிகமாக நேசிக்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களைக் கணவரும் அம்மாவும் கவனித்துகொள்கின்றனர்.

அதனால்தான் நான் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கிறேன். இந்தப் போராட்டங்களை எல்லாம் நான் விளம்பரத்துக்குச் செய்வதில்லை. தொடர்ச்சியாக அரசுக்குப் புகார்களையும் அனுப்பிவருகிறேன். அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்” என்கிறார் நர்மதா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in