

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம்வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
“எனது நாட்டில் ஒரு மலை உண்டு. எனது நாட்டில் ஒரு நதி உண்டு. என்னோடு வா!” - பாப்லோ நெருடா. எனது வலப்பக்கம் இமய மலையும் இடப்பக்கம் கங்கையும் நீளும்போது சிலி நாட்டு மகாகவியின் ‘மலையும் நதியும்’ கவிதை வரிகள் மனதுக்குள் ஓடின. கடும் வெயிலில் உத்தரப் பிரதேசத்தைக் கடந்து உத்தராகண்டில் நுழைகையில் சில்லென்ற இளந்தென்றல் முகத்தில் பாய்கிறது.
மலையும் மழையும் சார்ந்த பிரதேசம்!
உத்தராகண்ட் மாநிலம் இந்தியாவில் வடக்கில் இமய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் ஆன்மிகமும் தவழும் இம்மாநிலம் கடந்த 2000-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. வடக்கில் உள்ள நிலம் என பொருள் கொள்ளும் வகையில் உத்தராகண்ட் என பெயரிடப்பட்டது. தொடக்கத்தில் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட இம்மாநிலம் பின்னர் உத்தராகண்ட் என பெயர் மாற்றப்பட்டது.
உத்தராகண்ட் முழுவதும் இமயமலைத் தொடர் நீள்வதால் கோடை வெயிலிலும் மிதமான குளிர் நிலவுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் இங்கிருப்பதால் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். மலை சார்ந்த இடங்களும் மழை சார்ந்த பொழுதுகளும் உத்தராகண்டைச் சூழ்ந்திருப்பதால் ஆபத்துகளும் அபாயங்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கின்றன.
எதிர்பாராத நேரங்களில் அடை மழை கொட்டியதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுவதாகத் தகவல் கிடைத்தது. எனவே டேராடூன், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு எனது பயணத் திட்டத்தை மாற்றினேன்.
அவல நிலையில் பள்ளிகள்
இமய மலையின் அடிவாரத்தின் வழியாக போவாளி நகரம் நோக்கிப் புறப்பட்டேன். ஓங்கி உயர்ந்த மலைகளும், ஆங்காங்கே பெரும் பள்ளத்தாக்குகளும், வனத்தை ஊடுருவிப் பாயும் சிறு நதிகளும் மனதைக் கிறங்கடித்தன. அடுக்கடுக்கான மலைகளின் மத்தியிலும், நதிகளின் கரைகளிலும் வீடுகளும் ஏராளமான ஹோட்டல்களும் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளத்தாக்குகளில் பெரிய அளவிலான ரிசார்ட்டுகள் திறக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு யோகா சொல்லித்தரப்படுவதாக அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தன. கார்ப்பரேட் சாமியர்களால் காடுகள் அழிக்கப்படுவதும், மலைகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நெல், கோதுமை வயல்களால் நிரம்பியுள்ள போவாளி நகரத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். இமயமலைத் தொடரில் இருந்து சற்று உள்வாங்கி இருக்கும் இப்பகுதியில் கடும் வெயில் கொளுத்துகிறது. எனவே வெயிலைச் சமாளிக்க மீண்டும் இமய மலையை நோக்கிப் பறந்தேன். ஏற்ற இறக்கங்களும், வளைவு நெளிவுகளும் நிறைந்த மலைச் சாலையில் மைக்கியை ஓட்டுவது பெரும் சவாலாக இருந்தது. சாலையோரங்களில் உள்ளூர் சிறுமிகள் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை விற்கிறார்கள்.
இங்குள்ள பெரும்பாலான சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குப் பெரும்பாலும் ஆசிரியர்களே இல்லை. கல்வியறிவும், போதிய விழிப்புணர்வும் இல்லாததால் 16 வயதுக்குள் பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். போதிய படிப்பறிவு இல்லாததால் பெரும்பாலானோருக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை. எனவே விவசாய கூலி வேலையும், சுற்றுலாத் துறை சார்ந்த வேலைகளையும் செய்து பிழைப்பதாக உள்ளூர்வாசி கூறினார்.
அழகில் மிதக்கும் நைனிடால்
போவாளியைக் கடந்து ஆன்மிக நகரமான நைனிடாலை நோக்கிப் பயணித்தேன். இமயமலையின் தூய்மையான காற்றையும், வெள்ளிக்கொடியைப் போல பாய்ந்தோடும் சிறு ஓடைகளின் ஓசையையும் கேட்டுக்கொண்டே பயணிப்பது சுகமாக இருந்தது. உத்தராகண்டின் தலைநகரமாக டேராடூன் இருந்தாலும், ஒப்பீட்டளவில் நைனிடால் அதற்கு இணையான நகரமாக வளர்ந்திருக்கிறது. உத்தராகண்டின் உயர்நீதிமன்றமும், முக்கியமான அரசு அலுவலகங்களும் இங்குதான் இருக்கின்றன.
நைனிடாலைச் சுற்றியும் புகழ்வாய்ந்த வழிப்பாட்டுத் தளங்களும், பழமையான பள்ளிகளும், புராதான கட்டிடங்களும் நிறைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தென்படுகின்றனர். ஊரின் நடுவில் சிறிய மானோசரோவர் என அழைக்கப்படும் நைனி ஏரி ரம்மியமாகக் காணப்படுகின்றது.
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
இயற்கை அழகில் பிரமிக்க வைக்கும் உத்தராகண்ட், அழிவிலும் அதிர்ச்சியைத் தருகிறது. மண் அரிப்பும், நிலச்சரிவும் காலங்காலமாக நடந்தேறிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட 19 ஆயிரம் ஹெக்டேர் வனம் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பறவைகளும், காட்டுயிர்களும் கருகிப் போயின.
மலை முகடுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், நதிக்கரைகளிலும் நீளும் ஆக்கிரமிப்பால் நிலச்சரிவு வாடிக்கையாகிவிட்டது. பெரு மழையால் வனங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளும், தியான கூடங்களும் மண்ணோடு மண்ணாக அரித்துச் செல்லப்படுகின்றன. அரசும் தனியாரும் அமைத்துள்ள சுரங்கம், அணை, நீர்மின் நிலையம், பெரும் நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்களால் பேரழிவுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இதைத் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. உள்ளூர் மக்களின் வாழ்வையும், லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் உயிரையும் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வளர்ச்சி என்ற பெயரில் உத்தராகண்ட் மாநிலத்துக்குப் பொருந்தாத திட்டங்களை மேற்கொள்வது எதிர்காலத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இனியாவது அலட்சியத்தை கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உத்தராகண்ட் அரசு மேற்கொள்ள வேண்டும்!
(பயணம் தொடரும்)