குழந்தைத் திருமணம்: பெண்களைப் பாதுகாக்கும் அகழி

குழந்தைத் திருமணம்: பெண்களைப் பாதுகாக்கும் அகழி
Updated on
2 min read

அந்தக் காலத்தில்தான் படிப்பறிவின்மை, வறுமை, அறியாமை என்று நிறைய சிக்கல்களால் குழந்தைத் திருமணங்கள் நடந்தன. ஆனால், இன்றைக்குக் கல்வி, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை பெரிதாக வளர்ச்சியடைந்த பிறகு இன்னமும் குழந்தைத் திருமணங்கள் தொடர்கின்றன. அப்படியென்றால், பிரச்சினை எங்கே இருக்கிறது?

பெண்கள் சுதந்திரமாக எல்லாத் துறையிலும் வாகைசூடுகிறார்கள் என்று வெளியே சொல்லிக்கொண்டாலும் பெண்களின் மீதான ஒடுக்குமுறை வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்கள் படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்துச் சொந்தக்காலில் நின்று கொஞ்சம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் குறைந்தபட்ச வாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன. ஆனால், பெரும்பாலான பெண்கள் பள்ளி, கல்லூரி முடித்தவுடன் திருமணம் செய்துகொடுக்கப்படும் நிலையில், மேற்கண்ட எதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.

இதற்கும் மேலாகப் பெண்களுக்குச் சின்ன வயதிலேயே திருமணம் செய்துவைப்பது, முழுக்க முழுக்க ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது. தமிழ்நாட்டி பின்தங்கிய மாவட்டங்களில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

கடந்த இரண்டு வருடங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்க இருந்த 243 குழந்தைத் திருமணங்கள், மாவட்டச் சமூக நலத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. “24 வயசுல ஆறாவது பிரசவத்துல குழந்தையைப் பிரசவிக்க முடியாமல் ஒரு பெண் இறந்துபோனாள். அப்போதான் புரிஞ்சது இந்த மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தின் தீவிரம். இதில் நிறைய திருமணங்கள் பெண்களுடைய விருப்பமில்லாமல்தான் நடக்கின்றன. ஆனால், சில திருமணங்கள் பால்ய காதல் திருமணங்களாக இருக்கும்போது, அவர்க ளுக்குப் பேசிப் புரியவைக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

ஆண், பெண்ணுக்கு இடையே இயல்பூக்கமாக வருகிற உணர்வை டி.வி., சினிமாக்களில் ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்வதாகவும் காட்டுகின்றன. இது குழந்தை திருமணங்கள் நடக்கத் தூண்டுதலாக இருக்கிறது" என்கிறார் பெரம்பலூர் மாவட்டச் சமூக நல அலுவலர் பேச்சியம்மாள்.

காரணங்கள் ஏராளம்

“சின்ன வயதிலேயே திருமணம் செய்துவைப்பதால் முதலில் பாதிக்கப்படுவது பெண்தான். முதலில் அந்தப் பெண்ணோட படிப்பு நிறுத்தப்படுகிறது. பிறகு சீக்கிரமே கர்ப்பமடைவதால் பிரசவ வலியைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவளது உடல் வளர்ச்சியும் வலிமையும் இல்லாததால் கருச்சிதைவு, பேறுகால இறப்பு, பச்சிளங்குழந்தைகள் இறப்பு, எடைக்குறைவான குழந்தை பிறப்பு என நிறைய பிரச்சினைகள் வருகின்றன.

குழந்தைத் திருமணங்கள் நடக்கச் சொந்தம் விட்டுப்போய் விடக்கூடாது, சொத்து வெளியே போய்விடக்கூடாது, வறுமை இப்படி நிறைய காரணங்களைச் சொல்லலாம். இந்த விஷயத்துலபடிச்சவங்க, படிக்காதவங்க என எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாத் தரப்பு மக்களும் இதில் ஈடுபடுகிறார்கள்.

இப்பவும் எனக்கு நல்லா நினைவு இருக்கிறது. பத்தாவது படிக்கிற பெண்ணுக்கு 35 வயதுள்ள ஒருத்தருக்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நாங்க அந்த ஊருக்குப் போய் அந்தப் பெண்ணை மீட்டு ஜீப்லஅழைச்சுட்டு வரும்போது, அவள் சந்தோஷத்துல கைதட்டி சிரிச்சது இன்னும் நினைவு இருக்குது” என்கிறார் சிறப்புத் துணை ஆட்சியர் ரேவதி.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல் பெரம்பலூர் மாவட்டப் பெண்களின் பாதுகாப்புக்காக ‘அகழி’ என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் தொடர்புகொள்ள ஒரு செல் நம்பரும் உள்ளது.

நிகழ்ந்த மாற்றம்

“குழந்தைத் திருமணம் குறித்துத் தகவல் கிடைச்சு சில குழந்தைத் திருமணங்களைத் தடுக்கப்போகும் போது அந்த ஊர்கள்ல வழி மாற்றி சுத்த விடுவாங்க, அப்படி நிறைய நடந்திருக்கு. அப்படி மீட்கப்பட்ட பெண்கள் இன்னைக்கு காலேஜ்ல படிக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு” என்கிறார் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 குழந்தைத் திருமணங்களைக்கூடத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அப்படி மீட்கப்பட்ட பெண்களில் 98 சதவீதம் பேர் தொடர்ந்து படிக்கிறார்கள். மூவர் இன்ஜினியரிங், மூவர் பாலிடெக்னிக் படிக்கிறார்கள்.

தொடர்ந்து குழந்தைத் திருமணத் தடுப்பைத் தீவிரமாகச் செயல்படுத்தியதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் சராசரி திருமண வயது 17.8ஆக உயர்ந்திருக்கிறது. பேறுகால இறப்பு 50 சதவீதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது. பச்சிளங் குழந்தைகளின் இறப்பும் 50 சதவீதம் குறைந்திருக்கிறது. என்று அகழி அமைப்காளர்கள் தெரிவிக்கிறார்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்...

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத் திருத்தம் 2006இன் படி திருமணம் நடைபெறப் பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால், திருமணத்தைத் தடுத்து நிறுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது. இந்தச் சட்டப்படி திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள், 21 வயது பூர்த்தியான மாப்பிள்ளையாக இருந்தால் அவர் மீதும், கல்யாணத்தை நடத்தி வைப்பவர்கள், கல்யாணத்தில் பார்வையாளர்களாகப் பங்குபெற்றவர்கள் என அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருடங்கள் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in