முகங்கள்: வண்டி ஓட்டினால் சிறகு முளைக்கும்!

முகங்கள்: வண்டி ஓட்டினால் சிறகு முளைக்கும்!
Updated on
1 min read

பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய மான விஷயங்களில் ஒன்று வாகனம் ஓட்டுவது. வாகனம் ஓட்டத் தெரிந்தால் அவசரத்துக்கு யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. நினைத்த வுடன் ஒரு வேலையைச் செய்துவிட முடியும். நேரம் மிச்சமாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும்விட வாகனம் ஓட்டுவது சுதந்திரத்தின் அடை யாளம்!

15 ஆண்டுகளில் 15 ஆயிரம் பெண் ஓட்டுநர்களை உருவாக்கியிருக்கிறார் ஈரோடு பிரதிபா டிரைவிங் ஸ்கூல் மையத்தின் உரிமையாளர் பிரதிபா. கோவையில் பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்தவர், குடும்பச் சூழல் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். குடும்பப் பணிகளுக்குப் பாதிப்பு இல்லாத ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தது, அவரது வாகனம் ஓட்டும் உரிமம்.

“வாகன ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் பெண்கள், பெண் பயிற்சியாளர் இல்லாததால் பயிற்சி பெற முடியாமல் ஏங்குவதைக் கண்டேன். நானே அவர்களுக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பயிற்சியளித்து, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் சார்பில் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரத் தொடங்கினேன். அனுபவம் வந்தவுடன் வாகனம் ஓட்டும் பயிற்சி பள்ளியை நாமே ஏன் தொடங்கக் கூடாது என்று கணவரிடம் கேட்டேன். உடனே சம்மதித்தார். ‘பிரதிபா டிரைவிங் ஸ்கூல்’உதயமானது. ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுநர் பயிற்சியளித்து, உரிமம் பெற்றுத் தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியில் ஏழாயிரம் பேர், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியில் எட்டாயிரம் பெண்கள் என இதுவரை 15 ஆயிரம் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தந்துள்ளேன்” என்ற பிரதிபா, ஓட்டுநர் பயிற்சியளிப்பதன் மூலம், ஆசிரியர் பணிக்கு இணையான மன நிறைவு ஏற்படுகிறது என்கிறார்.

எங்கு செல்ல வேண்டுமானலும் கணவ ரையோ, அப்பாவையோ, சகோதரனையோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆட்டோ, கால் டாக்ஸியில் அடிக்கடி பயணிக்கப் பொருளாதாரம் இடம் கொடுக்காது. வாகனம் ஓட்டிப் பழகிவிட்டால், நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் செல்ல முடிகிறது. குழந்தைகளைப் பாதுகாப்பாக பள்ளியில் விட முடிகிறது. இவை எல்லாவற்றையும்விடத் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்கிறார்கள் இவரிடம் பயிற்சி பெற்ற பெண்கள்.

“லைசன்ஸ் வாங்குவதில் ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. 18 வயசு நிறை வடைஞ்சிருக்கணும். பார்வைத் திறன், உடல் தகுதி உள்ள எந்த வயதிலும் டிரைவிங் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். 60 வயதைத் தாண்டிய பலருக்கு நான் பயிற்சியளித்து, லைசன்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கேன். ‘எப்பொழுதும் இடது பக்கமாகவே செல்லுங்கள், எப்பொழுதும் மெதுவாகவே செல்லுங்கள்’ என்பதுதான் நான் பயிற்சியளிக்கும் பெண்களுக்குச் சொல்லும் ஒரே அறிவுரை. இப்படிச் சென்றால் விபத்தில்லா வாகனப் பயணம் எப்போதும் சாத்தியம்” என்கிறார் பிரதிபா.

படங்கள்: ஆர்.ரவிச்சந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in