மேடையில் ஒலித்த ஒற்றைக் குரல்
தலைமுறை இடைவெளியைக் கடந்து, இரண்டு உள்ளங்களுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்திய இந்தி திரைப்படம் ‘வெயிட்டிங்’. இதில் நடித்திருக்கும் கல்கி கேக்கிலான் கடந்த வாரம் சென்னை மியூசிக் அகாடமியில் Soul of a Woman என்னும் தலைப்பில் தனி நபர் நாடகத்தை (Mono Drama) மேடையில் நிகழ்த்தினார்.
பெண்ணியச் செயல்பாட்டாளர், கவிஞர், பாடகர் என கல்கியின் பல பரிமாணங்கள் அந்த நாடகத்தில் வெளிப்பட்டன. மகள், சகோதரி, மனைவி என ஒவ்வொரு படிநிலையிலும் பெண்ணைச் சக மனுஷியாக நினைக்காமல், இரண்டாந்தரமாக நடத்தும் அவலத்தை உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தினார் கல்கி.
“நீ பெண்ணாக பிறந்துவிட்டாய். இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். இந்த உடையைத்தான் உடுத்திக்கொள்ள வேண்டும். உனக்கென்று தனி உரிமைகள் எதுவும் கிடையாது. இப்படி பெண்ணை சாதி, மதம், இனத்தின் பேரால் இன்னும் எத்தனை காலத்துக்கு கட்டிப்போட்டே வைத்திருப்பீர்கள்?
ஏவாள் ஆப்பிளைச் சாப்பிட்டதுதான் உலகின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று இன்றைக்கும் எங்களை குற்றம் சாட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். போதும்.. எங்களைப் புனிதத்தின் அடையாளங்களாகச் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். சக மனுஷியாய் மதியுங்கள்…” - கல்கியின் பேச்சில் இரக்கம், கோபம், ஆதங்கம் எனப் பல உணர்ச்சிகளும் நொடிக்கு நொடிக்கு மாறின.
புதிய நாடக முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் க்ரியா-சக்தி அமைப்பின் சார்பாக நடந்த இந்த நிகழ்வில், புகழ்பெற்ற நாடக இயக்குநரான மகேஷ் தட்டானி, வெயிட்டிங் படத்தின் இயக்குநர் அனு மேனன் ஆகியோருடன் கல்கியின் கலந்துரையாடலும் நடந்தது. இந்தியத் திரைப்படங்களில் கோலோச்சும் கதாநாயகக் கலாச்சாரம், ஆண்-பெண் நடிகர்களுக்குத் தரப்படும் ஊதியத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சொல்ல நினைக்கும் கருத்தை சினிமாவில் சொல்வதற்கும் நாடகத்தில் சொல்வதற்கும் இருக்கும் வேறுபாடுகள், பல துறைகளில் பெண்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அரங்கிலிருந்த ஒரு பெண், “ஆண்களுக்கு எதிராகப் போராடுவதுதான் ஃபெமினிசமா?”என்று கேட்க,
“ஆண், பெண் சம உரிமைக்காகப் போராடுவதுதான் ஃபெமினிசம்” என்றார் கல்கி.
படம்: ஆர். ரவீந்திரன்
