இருபது ரூபாயால் கிடைத்த அடையாளம் | என் பாதையில்

இருபது ரூபாயால் கிடைத்த அடையாளம் | என் பாதையில்
Updated on
1 min read

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, “யாரெல்லாம் ஃபுட்பால் விளையாட வர்றீங்க?” என்று எங்கள் விளையாட்டு ஆசிரியைக் கேட்ட அந்த ஒரு கேள்விதான் என் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்று அன்று எனக்குத் தெரியாது.

விளையாட்டுப் பற்றி ஏதும் தெரியாவிட்டாலும் ஏதோவோர் ஆர்வத்தில் என் பெயரையும் என் தோழிகளின் பெயரையும் கொடுத்துவிட்டுப் பயிற்சி பெற்றோம்.

ஒரு முக்கியமான போட்டி வந்தது. என் ஆட்டத்தைப் பார்க்க என் அம்மாவும் அப்பாவும் ஆசையோடு மைதானத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், அன்று எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘சப்ஸ்டிடியூட்’ ஆக மைதானத்திற்கு வெளியே நின்றிருந்தேன். அன்று வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தேம்பித் தேம்பி அழுதேன். ஆனால், அந்த நாள் அது எனக்குள் ஒரு உத்வேகத்தை உண்டாக்கியது.

ஏழாம் வகுப்பில் விளையாட்டுக்குப் புதிய ஆசிரியை வந்தபோது, என் தீவிரமான பயிற்சியைப் பார்த்து என்னை ‘மெயின் பிளேயர்’ ஆக்கினார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மாவட்ட அளவிலான போட்டிகளில் கோல் அடித்து வெற்றிகளைக் குவித்தேன். அந்த வேகம் எங்களை மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் சென்றது.

சென்னையில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் காலிறுதியில் தோற்றுவிட்டோம். அடுத்து மூன்றாவது இடத்துக்கான முக்கியமான ஆட்டம். முதல் பாதி ஆட்டத்தில் யாருமே ‘கோல்’ போடவில்லை. அனைவரும் சோர்ந்து போயிருந்தனர். அப்போது எங்கள் ஆசிரியையின் பயிற்சியாளர் அங்கே வந்தார். என் அருகில் வந்து, “ஜெபா, இப்போ செகண்ட் ஹாஃப்ல நீ ஒரு கோல் போட்டா, உனக்கு 20 ரூபாய் தருவேன்” என்றார்.

அந்தப் பணம் எனக்குப் பெரிய தொகையாகத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு கௌரவப் பிரச்சினையாகத் தெரிந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. பந்து என் கால்களுக்கு வந்தபோது 20 ரூபாய் சவால் என் மூளையில் மின்னலாக ஓடியது. எதிரணி வீராங்கனைகளைக் கடந்து நான் அடித்த பந்து வலைக்குள் புகுந்தபோது மைதானமே அதிர்ந்தது. அந்த ஒற்றை கோலால் எங்கள் அணி மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

ஆறாம் வகுப்பில் வாய்ப்பு கிடைக்காமல் மைதானத்திற்கு வெளியே நின்று அழுத அதே பெண், எட்டாம் வகுப்பில் மாநிலப் போட்டியில் வெற்றி தேடித்தந்து, அந்த 20 ரூபாயைப் பதக்கம் போலப் பெருமையோடு ஏந்தி நின்றேன். இன்று நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அதே வேகம் குறையாமல் விளையாடி பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, செய்தித் தாள்களிலும் காணொளிகளிலும் என் முகம் இடம்பெறுகிறது. ஆனால், இன்றும் என் வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பது அன்று இருபது ரூபாய் தந்த உந்துதல்தான்!- பு. ஜெபா அனுஷ்யா, தூத்துக்குடி

இருபது ரூபாயால் கிடைத்த அடையாளம் | என் பாதையில்
நானொரு தேநீர் வித்தகன் | ஆண்கள் ஸ்பெஷல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in