அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி

அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி
Updated on
2 min read

பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர் கற்ற கலையை மறக்கும் நிலையே இன்றும் இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு நல்லதொரு புகுந்த வீடு அமையும்போது அவள் கற்ற கலைகள் செம்மைப்படுகின்றன. அடுத்த கட்டத்துக்கு அவளை நகர்த்திச் செல்கின்றன.

அப்படித்தான், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வித்யா மூலாவுக்கும் நல்லதொரு குடும்பம் அமைந்தது. அந்த ஆதரவோடும் ஒத்துழைப்போடும் அமெரிக்காவில் ஒரு கலைப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் வித்யா மூலா.

ஓவியம், ஃபேஷன் ஸ்கெட்சிங், எம்ப்ராய்டரி, நாகரிக நகைகள் வடிவமைத்தல், மெட்டல் எம்பாஸிங், பேப்பர் ஜுவல்லரி, இசை, பரதநாட்டியம் எனப் பல கலைகளும் வித்யாவுக்கு அத்துப்படி. மதுரையில் பிறந்து, படித்து, வளர்ந்தவர், திருமணத்துக்குப் பின் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தார். புதிய இடம், புதிய மக்கள் என வெளிநாட்டில் குடியேறுகிறவர்களுக்கே உரிய மனநிலைதான் வித்யாவுக்கும் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் வித்தியாசமாக அணுகினார்.

“தனியாக வீட்டில் இருக்கும்போதெல்லாம் நான் கற்ற கலைதான் எனக்கு நல்ல நட்பாக இருந்தது. முதல் குழந்தை பிறப்பதற்கு முன் நிறைய நேரம் கைவசம் இருந்தது. அதனால், பல்வேறு கலைப் பொருட்களை உருவாக்குவதையும், ஓவியம் தீட்டுவதையும் நிதானமாக செய்ய முடிந்தது. இப்போது எனக்கு 2 குழந்தைகள். ஆனால், இன்றும் என்னால் முன்புபோல் செயல்பட முடிகிறது. காரணம் நேர மேலாண்மை. தொலைத்த நேரத்தைத் திரும்பப் பெறவும் முடியாது, கூடுதல் நேரத்தைக் கடனாகவும் பெற முடியாது.

இருக்கும் நேரத்தைத் திறன்பட பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் பலவகையிலும் எனக்கு உதவியாக இருந்தது” என்று சொல்லும் வித்யாவுக்கு வெட்டித்தனமாகப் பொழுதைப் போக்குவது பிடிக்காது. முதலில் இதைச் செய்வது அவருக்குக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், தன் லட்சியத்தை நேசித்து அதில் உறுதியாக இருந்தவருக்கு இந்த நேர மேலாண்மை மலையைப் புரட்டும் வேலையாக இல்லை. மிக எளிதாக கைகூடியது.

கைவினைப் பொருட்களுக்கான கலைக்கூடம் ஒன்றை அமெரிக்காவில் சொந்தமாக அமைக்க வேண்டும், கலைப் பள்ளி துவங்க வேண்டும். இவையே வித்யாவின் அடுத்தக்கட்டத் திட்டங்கள்.

இதற்கு வித்திடும் வகையில், முதல் கட்டமாகத் தன் வீட்டருகே இருக்கும் வெளிநாட்டவர் பலருக்கு ஓவியம், பேப்பர் ஜூவல்லரி, ஓவியம் தீட்டுதல் போன்ற கலைகளைப் பயிற்றுவித்து வருகிறார். பல்வேறு வயதினரும் இவரிடம் பயின்று வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.

“குழந்தைகளுக்கு நுண்கலைகளைக் கற்றுத்தருவதன் மூலம் அவர்களை கம்ப்யூட்டர் சார்பில் இருந்து விடுவிக்கலாம். கலைகளை கற்பது, குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும், தசை இயக்கும் திறனை மேம்படுத்தவும் உதவும்” என்கிறார் வித்யா. வெளிநாட்டுக் குழந்தைகள் பலரும் இந்திய நுண்கலைகளை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கின்றனர்.

நம் கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே நம் கலாசாரத்தை பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ளும் முனைப்பில் இருக்கிறார் வித்யா.

“வெளிநாட்டில் தொழில் தொடங்குவதில் சில சவால்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியப் பாரம்பரிய கைவினைப் பொருட்களை ஒரு அந்நிய நாட்டில் சந்தைப்படுத்துவதற்கு நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது. முதலில், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். பின்னர் சரியான திட்டமிடுதல், அளவான முதலீடு அவசியம். முதல் அடியாக, >www.stayartistic.com என்ற இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதற்கு என் கணவர் ஜெகன் பக்கபலமாக இருக்கிறார். இதன் மூலம் என் பொருட்களைச் சந்தைப்படுத்துகிறேன்.

வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் அளவுக்கு படைப்புகள் தரமாக இருப்பதைக் கவனமாக பார்த்துக் கொள்கிறேன். தரம், நம்பிக்கை இதுவே எந்த ஒரு தொழிலுக்கும் மிகப்பெரிய ஆதாரம்” என்று சொல்லும் வித்யாவின் எதிர்காலத் திட்டம், இந்திய அடையாளங்களைத் தெளிவாகப் பறைசாற்றும் கலைப் பொருட்களை தான் வாழும் பகுதியில் பிரபலப்படுத்துவது. ஆர்வமும் குடும்ப ஆதரவும் இருக்கும்போது வானம் வசப்படும்தானே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in