

நிற்கக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் ஷபானா. ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பைக்கூட மறுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
“கலைஞர் டிவி, இசையருவி என்று தொகுப்பாளினியாக 12 மணி நேரம் சேனல்லயே பொழுது நகர்கிறது. வீட்ல ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேசக்கூட நேரமில்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும்போது அதுல எதுவும் தப்பாகிடக் கூடாது. அதனாலதான் இப்போதைக்குத் தவிர்த்தேன். அடுத்த ஆண்டு கண்டிப்பா நடிகை அவதாரம்தான்!’’ என்கிற ஷபானா, ‘பாகுபலி 2’ குழுவிரைப் பேட்டி எடுத்த அனுபவம் மறக்க முடியாதது என்கிறார்.
‘‘ஆமாம். ராஜமவுலி சார்கிட்ட இந்தப் படம் மக்களுக்கு ஏதாவது கருத்தை உள்ளடக்கியதாக இருக்குமான்னு கேட்டேன். சில வினாடி அமைதியாக இருந்துவிட்டு, நல்ல கேள்வி இதுன்னு பாராட்டினார். “பொழுதுபோக்கை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறேன்’’னு சொன்னார். நான் மதிக்கிற இயக்குநரோட பாராட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!’’ என்று பூரிக்கிறார் ஷபானா.
அரங்கேற்றம்!
பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘அரங்கேற்றம்’ நிகழ்ச்சியை ஸ்ரீதேவி என்பவர் தொகுத்து வழங்கிவருகிறார்.
“நடனத்தில் சிறப்பாக விளங்கிவரும் யாராலும் தங்களோட முதல் அரங்கேற்ற நிகழ்வை மறக்கவே முடியாது. அந்த நினைவுகளைத் திரும்ப அசைபோடும்விதமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. இதில் விருந்தினர்கள் தங்களோட முதல் அரங்கேற்றத்துக்கு முன், தாங்கள் நடனம் கற்ற விதம், அதுக்கான உழைப்பு, மேடையேறிய பிறகு கிடைத்த பாராட்டு உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அடிப்படையில் நானும் ஒரு பரதநாட்டியக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாக வழங்க முடிகிறது. வளர்ந்த, வளர்ந்துவரும் இளம் நடனக் கலைஞர்களது அனுபவங்களின் சுவாரசியம்தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்!’’ என்கிறார் ஸ்ரீதேவி.