வானவில் பெண்கள்: நாற்காலியில் சுழலும் டென்னிஸ் புயல்

வானவில் பெண்கள்: நாற்காலியில் சுழலும் டென்னிஸ் புயல்
Updated on
2 min read

நாம் யார் என்பதை உணரும் தருணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வாய்க்கலாம். பிரதிமா ராவுக்கு அது 28 வயதில் வாய்த்தது. இத்தனைக்கும் போராட்டம் என்பது அவருக்குப் புதிதல்ல.

மூன்று வயதிலேயே போலியோவால் வலது கால் செயலிழந்துபோனது. இதனால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை மட்டுமே நம்பி, தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பிரதிமா. அதைவிட அவரை விளிம்புக்குத் தள்ளியது அவருக்கு ஏற்பட்ட மணமுறிவு. அதுவும் ஆறு வயது மகனோடு தனித்து விடப்பட்டார். ஆனால் அந்தத் தருணத்திலும் தன்னை நினைத்துத் துவண்டுபோகவில்லை. வாழ்க்கை விளையாட்டைத் துணிந்து விளையாட முடிவெடுத்தார். கர்நாடகாவின் மங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய மகனோடும் பெற்றோரோடும் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார்.

தோளும் தன்னம்பிக்கையும்

அதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து ரசித்த டென்னிஸ், வில் வித்தை இரண்டையும் தானே ஏன் ஆடக் கூடாது என நினைத்தார். 28 வயதாகும் தன்னால் என்ன விளையாட முடியும் என்றுகூட அவர் அதுவரை அறிந்திருக்கவில்லை. தன்னுடைய தோளின் வலிமை, தன்னம்பிக்கை இரண்டை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேற ஆரம்பித்தார். தடகளம், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றார். லியாண்டர் பயஸையும் சானியா மிர்சாவையும் சிறு வயது முதலே பார்த்து வியந்தவர் தனக்குள் இருக்கும் டென்னிஸ் நாயகியை வெளிக்கொண்டுவர ஆரம்பித்தார்.

கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்தின் அரங்கத்தில் முறையாகப் பயிற்சி மேற்கொண்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான ‘வீல்சேர் டென்னிஸ்’(Wheelchair Tennis) என்ற தனிப் பிரிவில் தயாரானார். ஆனால், ஒரு கையில் டென்னிஸ் மட்டையைப் பிடித்து நொடிக்கு நொடி வீசி விளையாடியபடியே மற்றொரு கையால் சக்கர நாற்காலியையும் சுழற்றுவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. விடாமல் தினந்தோறும் விடியற்காலை இரண்டு மணிநேரம் பயிற்சி மேற்கொண்டார். ஆனால் டென்னிஸ் விளையாடும் இந்த ஃபீனிக்ஸ் பறவை அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளப் பணிக்குச் செல்வது கட்டாயமானது. விடியற்காலையில் பயிற்சி, அதைத் தொடர்ந்து மின்சாரக் கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை என வாழ்க்கை சுழன்றது.

லேசாக இருந்தால் வெற்றி!

நாமெல்லாம் வாரக் கடைசிக்குக் காத்திருப்பது ஓய்வு தரும் விடுமுறை நாளுக்காகத்தான். ஆனால் பிரதிமா காத்திருப்பதோ இடைவிடாத பயிற்சிக்காக! விடுமுறை நாட்களில் பிரதிமாவுக்குப் பயிற்றுவிப்பவர் பயிற்சியாளர் ரமேஷ்.

நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சியின் காரணமாக 2013-ல் தேசிய பாராலிம்பிக்ஸ் வீல்சேர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பிரிவில் அரையிறுதிப் போட்டிவரைக்கும் முன்னேறினார். 2015-ல் தேசிய அளவிலான வீல்சேர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் பதக்கங்கள் வென்றார். அதைத் தொடர்ந்து தாய்லாந்து, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளுக்கு முன்னேறினார். ஆனால் அவரது சக்கர நாற்காலி கனமாக இருந்ததால் அதை, துரிதமாக இயக்கி, வேகமாக நகர்ந்து அவரால் டென்னிஸ் விளையாட முடியவில்லை. இதனால் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கனம் குறைவான சக்கர நாற்காலியின் விலை மூன்று லட்சம் ரூபாய். அதை வாங்கும் சூழலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிமா இல்லை. இருந்தபோதும் மனம் தளராமல் கிரவுட்ஃபண்டிங் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பொதுமக்களின் உதவியால் புதிய எடை குறைவான சக்கர நாற்காலியை வாங்கினார். தற்போது உலகத் தரவரிசைப் பட்டியலில் 182-வது இடத்தில் இருக்கும் இவர் விரைவில் முதல் நூறு இடங்களுக்குள் இடம்பெறும் இலக்கை நோக்கிப் பயிற்சி எடுத்துவருகிறார். பாராலிம்பிக்ஸ் 2020-ல் போட்டியிடும் இலக்கைத் தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டு உற்சாகத்தோடு முயற்சித்துவருகிறார் இந்த டென்னிஸ் புயல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in