விரியும் சிறகு: வந்தியத்தேவன் வழியில் தோழிகளின் வரலாற்றுப் பயணம்!

விரியும் சிறகு: வந்தியத்தேவன் வழியில் தோழிகளின் வரலாற்றுப் பயணம்!
Updated on
2 min read

தமிழில் எத்தனையோ வரலாற்றுப் புதினங்கள் இருந்தாலும் 67 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை விட்டு அகலாமல் இருப்பது கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மது குடித்த வண்டுகளைப் போல அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவந்துவிட முடியாது. நாவல் தொடர்பான விஷயங்களைத் தேடவைக்கும், படிக்கவைக்கும் சக்தி அந்த நாவலுக்கு இருக்கிறது. அப்படியொரு தேடுதல் பயணத்தை மேற்கொண்டு, வித்தியாசமான அனுபவங்களோடு திரும்பியிருக்கிறார்கள் நான்கு தோழிகள்.

ஆசிரியர் ஜெயபிரியா ஆதிமுருகன், பட்டயக் கணக்கர் நித்யா சீதாராமன், யோகக்கலை நிபுணர் பத்மா கணபதி, மனிதவள அதிகாரி தீபா நவீன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழிகள். ஜெயபிரியா திருவண்ணாமலையிலும் மற்றவர்கள் சென்னையிலும் வசிக்கிறார்கள். ஆக்கபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்தத் தோழிகள், ‘பொன்னியின் செல்வன்’குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அப்போதுதான் நால்வரும் பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகைகள் என்ற விஷயம் தெரிந்தது. விவாதம் இன்னும் ஆழமாகச் சென்றது.

ஆடிப் பெருக்கு நாளில் வீராணம் ஏரிக் கரையில் வந்தியத்தேவன் குதிரைமேல் அமர்ந்து வருவதுதான் நாவலின் தொடக்கம். அதை அசைபோடும்போது, “நாம் ஏன் வந்தியத்தேவன் பயணித்த வழியில் ஒரு பயணம் போய், அந்த இடங்களைப் பார்த்துவரக் கூடாது?’’ என்று பத்மா கேட்கவும் மற்றவர்களுக்கும் அது பிரமாதமான யோசனையாகத் தோன்றியது. உடனே பயணத்திட்டம் தயாரானது.

“மூன்று நாள் பயணம் என்று முடிவு செய்து, ‘வந்தியத்தேவன் வழியில்’ என்று பெயரும் வைத்தோம். தொண்டை மண்டலத்திலிருந்து வந்தியத்தேவன் புறப்படுவதாக இருந்தாலும் வீராணம் ஏரியிலிருந்துதான் வந்தியத்தேவனை அறிமுகப்படுத்துவார் கல்கி. அதனால் சென்னையிலிருந்து கார் மூலம் வீராணம் சென்று, அங்கிருந்து ‘வந்தியத்தேவன் வழியில்’ பயணத்தைத் தொடங்கினோம்’’ என்கிறார் ஜெயபிரியா.

வீராணம் ஏரி, வீரநாராயணர் கோயில், கடம்பூர், கங்கைகொண்ட சோழபுரம், ராஜேந்திரச் சோழன் மாளிகை இருந்த மாளிகைமேடு ஆகியவை முதல் நாள் பயணத்துக்கான இடங்கள். இரண்டாவது நாள் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு பழுவூர், பழையாறை போன்றவற்றைப் பார்த்திருக்கிறார்கள். மூன்றாவது நாள் தஞ்சை பெரிய கோயிலிலிருந்து பயணத்தை ஆரம்பித்து, சோழர்கள் போருக்கு முன் வழிபட்டுச் செல்லும் நிசும்பசூதனி கோயிலைப் பார்த்துவிட்டு, மாலையில் கோடியக்கரைக்கு வந்து சேர்ந்தனர். இங்கிருந்த சோழர்களின் துறைமுகம் வழியாகத்தான் வந்தியத்தேவன் ஈழநாட்டுக்குச் செல்வதாகக் கல்கி விவரித்திருப்பார். கோடியக்கரையோடு பயணத்தை முடித்துக் கொண்டு, அனுபவங்களை ஆனந்தமாகப் பகிர்ந்தபடி சென்னை வந்துசேர்ந்தார்கள்.

“நாவலைக் கையில் வைத்துக்கொண்டுதான் பயணத்தைத் தொடர்ந்தோம். அதிலுள்ள இடங்களை நேரில் பார்த்தபோது பரவசமாக இருந்தது. சோழன் மாளிகை ஊரில் இருந்த இரண்டு கோயில்கள் உள்பட நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான இடங்கள் தடயமின்றி அழிந்து போயிருப்பதையும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருப்பதையும் பார்த்து நெஞ்சம் பதைத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பத்தை நம்மவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவர்களின் கட்டிடக் கலை வியக்க வைக்கிறது. கொடிகட்டிப் பறந்த நம் முன்னோர்களைப் பற்றி முழுமையான பதிவுகள் இல்லை என்பதை எங்கள் பயணத்தில் தெரிந்துகொண்டோம். முன்னோர்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வருங்காலச் சந்ததிக்கு நாம் ஆவணப்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் பல்லவ ராஜ்யம் நோக்கி எங்கள் பயணம் செல்லும்’’ என்கிறார்கள் இந்தத் தோழிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in