

பெண்களுக்கு ‘சூப்பர்ஹீரோ’ கதாபாத்திரங்களை அணிவித்து அழகு பார்ப்பது ஹாலிவுட் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ‘சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ்’(Charlie’s Angles), ‘லாரா கிராஃப்ட் டாம்ப் ரைடர்’ (Lara Croft Tomb Rider), ‘கேட்வுமன்’ (Catwoman) எனப் பல படங்களைச் சொல்லலாம். ஆனால், அவை பெண்களைக் கொண்டாடும் படங்களா? உற்றுப் பார்த்தால் அவை பெண் உருவங்களுக்கு ஆண் சிந்தனையைப் போர்த்திய படங்களே. பலம் வாய்ந்தவர்களாகவும் துணிச்சல்மிக்கவர்களாகவும் பெண்களைச் சித்தரிக்கும் அதேவேளையில் அவர்களை ஈவிரக்கமற்றவர்களாவும், சுயபுத்தி இல்லாமல் ஆணால் இயக்கப்படுபவர்களாகவும், கவர்ச்சிப் பண்டங்களாகவும்தான் அவை உருவகப்படுத்தியுள்ளன.
நிச்சயமாக அவர்களிலிருந்து மாறுபட்டுத் தனித்து நிற்கிறார் ‘வொண்டர் வுமன்’ (Wonder Woman). பெண் இயக்குநரான பேட்டி ஜெக்கின்ஸ் (Patty Jenkins) இயக்கத்தில் கால் கேடட் (Gal Gadot) ‘வொண்டர் வுமன்’- ஆகத் திரையில் தோன்றியிருக்கும் இப்படம் கடந்த வாரம் வெளியானது.
அழுத்தமாகவும் ஆழமாகவும்
வன்மமும் பலவீனமும் பிடித்தாட்டும் விதமாக ஆண்களைப் படைக்கிறார் போர்க் கடவுளான ஏரிஸ் (Ares). ஏரிஸிடமிருந்து உலகை மீட்க ஆண் இனமற்ற தெமிஸ்ரா தீவை உருவாக்குகிறார் ஜீயஸ் (Zeus). உலக வரைபடத்தில் இடம்பெறாத இந்தத் தன்னந்தனி தீவில் ‘அமேசான்’ என்ற இனத்தைச் சேர்ந்த போர் வீராங்கனைகள் மட்டுமே பிறக்கிறார்கள்; வசிக்கிறார்கள். அமேசான்களின் இளவரசி டயானா.
மறுபுறம், உலகை ஆக்கிரமிக்க அபாயகரமான ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது ஜெர்மனி. அதன் சதித் திட்டங்களை முறியடிக்க பிரிட்டிஷ் படைத் தளபதியான ஸ்டீவ் முயல்கிறார். போரைத் தடுக்க யத்தனிக்கும் ஸ்டீவுடன் கைகோத்துப் போர்க் கடவுளையே அழிக்க ‘வொண்டர் வுமன்’- ஆக அவதாரம் எடுக்கிறார் டயானா. இப்படி, கிரேக்கப் புராணத்தையும், உலகப் போர் சரித்திரத்தையும் இழையோடவிட்டுப் பெண்ணியத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் திரையில் விரிக்கிறது படம்.
பெண்களை ஏற்றத்தாழ்வுடன் நடத்தும் ஆணாதிக்கச் சிந்தனையைக் கேலியாகவும் தீவிரமாகவும் சாடுகிறது படம். குறிப்பாக “ஆண்களின் உலகில் எச்சரிக்கையோடு இரு. உன்னை அடையும் தகுதி அவர்களுக்குக் கிடையாது” என்பது போன்று டயானாவுக்கும் அவருடைய தாய்க்கும் இடையிலான உரையாடல் முக்கியத்துவம்வாய்ந்தது. ஸ்டீவுடன் லண்டன் செல்லும் டயானா முதன்முறையாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்கூடாகப் பார்க்கிறார்.
போரைத் தடுத்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் டயானா நிற்பதைக் கண்டு, “அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பெண்ணுக்கு என்ன வேலை?” என்று ஸ்டீவைத் திட்டுகிறார் ராணுவத் தலைவர். ஆயிரக்கணக்கான மொழிகள் அறிந்த அமேசான் இனப் பெண்ணான டயானாவின் அறிவைக் கண்டு, “ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு புத்திக்கூர்மை?” என்று பல ஆண்கள் ஆச்சரியப்படும் காட்சியும் இடம்பெறுகிறது. உடை, நடை என ஒவ்வொன்றிலும் பெண் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறாள் என்பது கிண்டலான தொனியில் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகிறது.
கம்பீரமும் கருணையும்
‘நீ அற்புதமானவளாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஈடாக முடியாது’ என்று ஜெர்மனி படைத்தலைவர் ஆணவமாகப் பேசியதை அடுத்துக் கொல்லப்படும் காட்சியில் ஆணாதிக்கம் நொறுங்கிவிழுகிறது. குறிப்பாக, போர்க் கடவுளான ‘ஏரிஸ்’ உடன் டயானா சண்டையிடும் காட்சி பெண்ணியத்தைப் பறைசாற்றுகிறது. தன் வாள் மட்டுமே ஏரிஸை அழிக்க முடியும் என அதுவரை நம்பியிருந்த டயானாவின் வாளை ஏரிஸ் உடைத்துச் சுக்குநூறாக்குகிறான். அதன் பிறகுதான் தன்னுடைய முழுமையான பலத்தை டயானா உணர்ந்து அவனை அழிக்கிறாள். நிதர்சன வாழ்விலும் பெண்ணின் இயல்பான ஆற்றல் காலங்காலமாக மட்டுப்படுத்தப்பட்டு, அவள் தன் பேராற்றலை அறியாமல் கிடக்கிறாள். ஆனால், வாழ்வின் சில தருணங்கள் அவளுக்கே அவளை அடையாளம் காட்டிவிடுன்றன.
வழக்கமான சூப்பர்ஹீரோ படங்கள் தூக்கி நிறுத்தும் ஆண்மைப் பிம்பத்தைத் தகர்க்கும் அற்புதப் பெண்ணாக ‘வொண்டர் வுமன்’ இருக்கிறாள். ஏனென்றால், அவள் எதிரியை அழித்துத்தொழிக்க மட்டும் புறப்படவில்லை. ‘உலகில் ஆண்களுக்கிடையில் புரிந்துணர்வை உருவாக்கும் பாலமாகத் திகழ்பவர்கள் நாம்தான்’ என்கிறாள் அவள். இப்படிப் பராக்கிரமம் பொருந்தியவளாக இருக்கும் அதேநேரம் மகாகருணையும் அவளிடம் ததும்புகிறது.
ஆக்ரோஷமாகப் போரிடும்போதே உயிர்களை அழிக்க அவள் மறுக்கிறாள். அவளுடைய தாய் உள்ளம் குழந்தையைக் கண்டால் அன்பில் நிரம்பி வழிகிறது, காயமடைந்த போர் வீரர்களையும் அப்பாவி மக்களையும் கண்டு நெகிழ்கிறது. இவ்வுலகை அன்பால் காக்கவும் இயக்கவும் பிறந்தவள் பெண் என்பதை அசாத்தியமாக நிரூபிக்கிறாள் கம்பீரமும் கருணையும் கொண்ட இந்த அற்புதப் பெண்.