Last Updated : 05 Oct, 2014 02:01 PM

 

Published : 05 Oct 2014 02:01 PM
Last Updated : 05 Oct 2014 02:01 PM

சாதிக்கத் தூண்டிய கைவினைக் கலை

அழகு கொஞ்சும் கைவினைப் பொருட்களைச் செய்வது பெண்களுக்குக் கைவந்த கலை. அதிலும் வெவ்வேறு துறைகளின் பின்புலத்தோடு வரும் இளம் பெண்கள் தங்கள் அபாரமான கற்பனைத் திறனைக் கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்? அதைத்தான் இந்திய கைவினைப் பொருட்கள் மையம் நடத்திய கண்காட்சியும் நிரூபித்தது. தங்கள் மையத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு சிறப்புப் பொருட்காட்சியை நடத்தினார்கள்.

கலை பழசு, பாணி புதுசு

“இன்றைய இளைஞர்களுக்குப் பாரம்பரிய கைவினைக் கலைகள் மீதான ஈர்ப்பு நீர்த்துப் போய்விட்டது. இதை மனதில் கொண்டு, இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் பாரம்பரிய கைவினைக் கலைகளை சமகால பாணியில் செய்யும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து வருகிறோம்” என்கிறார் இந்திய கைவினைப் பொருட்கள் மையத்தின் செயலாளர் ராஜேஷ்வரி.

வெவ்வேறு துறையைச் சேர்ந்த இளைஞர்கள் பல நூதன முறைகளைக் கைவினைக் கலையில் உட்புகுத்திப் புதிய பரிமாணங்களில் தங்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தனித்துவம். இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்களே. ஒடிஸா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் சுற்றுச்சூழல், கைவினைக் கலை இரண்டையும் ஒரு சேரப் பாதுகாக்கக் கரம் நீட்டுகிறார்கள்.

மனம் கவரும் லம்பினி மாலை

மரம், பாசி, கற்கள், துணி என விதவிதமான இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட கண்கவர் தோடு, வளையல், கழுத்து மாலை, கொலுசு, ஜிமிக்கி, மோதிரம், ஒட்டியாணம் எனச் சுற்றுச்சூழல் நண்பர்களாக மின்னிய ஆபரணங்கள் ஒரு புறம் பார்வையாளர்களைக் கவர்ந்தன. அதிலும் வண்ண வண்ணப் பருத்தித் துணிகளைச் சின்ன சின்ன முண்டுகளாகக் கட்டிக் கோர்க்கப்பட்ட கர்நாடக லம்பினி பழங்குடி மக்களின் கைவண்ணத்தால் செய்யப்பட்ட கழுத்து மாலை அனைவரையும் கவர்ந்தது.

சூரிய மின்சக்தியில் அழகிய ஆடைகள்

ஆடைகளிலும் புதுமையும் பழமையும் கலந்து ஆச்சரியப்படுத்தியவை ஆவனி என்ற அமைப்பின் ஆடைகள். சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு கைராட்டினம் அமைப்பிலிருக்கும் கருவி மூலம் துணி நெய்து, இயற்கை சாயத்தில் தோய்த்து, இவர்கள் அருமையான கைத்தறி ஆடைகளை உருவாக்குகிறார்கள். மத்திய இமயமலையில் இருக்கிறது குமோனில் மலைகிராமம். அங்கு வசி்க்கும் பெண்கள் கடந்த 14 ஆண்டுகளாக இதில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

துணியில் நாற்காலி

ஆடைத் தொழிற்சாலைகளில் மீந்து போகும் துணிகளைத் தேர்ந்தெடுத்து, நிறம் பிரித்து, கிராமப்புற பெண்களைக் கொண்டு அவற்றை விதவிதமாகப் பின்னி நாற்காலி செய்கிறார்கள் சாகில் மற்றும் சார்தக் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். நாற்காலிகள் செய்தது போக வெட்டப்பட்டு விழும் துணிகளைக் கொண்டு கண்ணாடி, மேஜை விளக்கு பொன்றவற்றையும் வண்ண மயமாக அலங்கரிக்கிறார்கள்.

கைவினைக் கலைஞராக மாறிய முனைவர்

இலை, பூ, பழம், மரம், செடி, கொடி என ஒரு குட்டி வனமாக காட்சியளித்தது ப்ரீத்தி பிரசாத்தின் ஆரண்யா எர்த் கிராஃப்ட் தளம். மட்கக்கூடிய பொருட்களான காகிதம், களிமண், மரப் பிசின் ஆகியவற்றைக் கொண்டு இலை, தழை வடிவங்களில் அவர் வடிவமைத்திருக்கும் கம்மல், நெக்லஸ், பென்டெண்ட் போன்றவை வியப்பூட்டுகின்றன.

நேபாளத்தில் பிறந்து வளர்ந்த ப்ரீத்தி, வணிகவியல் பட்டப்படிப்பு முடித்தவர். கணவர் விவேக் பிரசாத், வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பிறகு எப்படி கைவினைப் பொருட்களோடு கைகோத்தீர்கள் என்றால், “என் கணவர் டாக்டரேட் பட்டம் வாங்கியது கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் என்றாலும், அவருக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது கட்டிடக் கலையில்தான். எனக்கும் புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கு இருந்து வந்தது. ஆரம்பத்தில் அவர் நண்பரோடு இணைந்து காகிதக் கூழ் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தார். ஆனால் கம்பெனி நஷ்டம் அடைந்தபோது வெளியேற்றப்பட்டார்” என்று கண்கலங்கியவர்,

“பிறகு நாமே ஏன் காகிதக் கூழில் நம் கலை உணர்வை சேர்க்கக் கூடாது என சிந்தித்தோம். என் கணவர் மிக நேர்த்தியாக களிமண் சிற்பங்கள் செய்யத் தொடங்கினார். அப்படியே நானும் என் கணவரும் இணைந்து வித விதமான காகித, களிமண் நகைகளை வடிவமைக்கத் தொடங்கினோம்” என்றார் பெருமிதத்துடன்.

பேர் தந்த பாப்பா பாட்டு

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த டோஷி ராய், பெங்களூரில் ஒரு ஐடி கம்பனியில் மனித வள மேலாளராக 8 வருடங்கள் பணிபுரிந்து வந்தார். குழந்தை பிறந்த பிறகு வேலையைத் தொடர முடியாமல் நின்றார். அப்போது மனம் சோர்ந்த நிலையில் இருந்தார்.

“முதன் முதலில் என் மகளுடைய ஆடையில் அப்ளிக் வொர்க் என்னும் எம்ப்ராய்டரியைப் போட்டு விட்டபோது பார்த்தவர்கள் அனைவரும் எங்கு வாங்கினாய் என்று கேட்டார்கள். அதன் பிறகுதான் நானே வடிவமைத்து விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தேன். நானும் என் சகோதரியும் இணைந்து எங்கள் பகுதியிலிருக்கும் பெண் களுக்குப் பயிற்சி கொடுத்து பெரிய அளவில் நடத்தினோம். என் மகள் பாடிய முதல் ரைம் இன்சி வின்சி ஸ்பைடர். அதைத்தான் இந்த குழந்தைகள் ஆடைகளின் பிராண்ட் பெயராக வைத்திருக் கிறேன்” என்கிறார் டோஷி சிரித்துக் கொண்டே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x