சந்தைப்படுத்தினால் சம்பாதிக்கலாம்

சந்தைப்படுத்தினால் சம்பாதிக்கலாம்
Updated on
2 min read

சுடர் விட்டு எரியும் விளக்குதான் என்றாலும் அதைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய சிறிய தூண்டுகோல் அவசியமாகிறது.

சிறு தொழில்முனைவோருக்கான சந்தைப்படுத்துதலுக்கும் அப்படிப்பட்ட தூண்டுகோல் தேவை. அது சரியாக அமையாவிட்டால், முதலீடு குறைவாக இருந்தாலும்கூட உற்பத்தி பொருட்கள் தேங்கிவிடுமே.

இந்தத் தேக்க நிலையைக் குறைக்கும் மந்திரம் தெரிந்தவர் மதுரையைச் சேர்ந்த ரோஸ்லின் ஆண்டனி. இதற்காக ‘பெர்சிவர்- விமன் ஃபார் கிரீன் எர்த்' (PERSEVERE – Women for Green Earth) என்ற அமைப்பையும் தொடங்கியுள்ளார்.

கடந்த 18 வருடங்களாகத் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் எனப் பல்வேறு திட்டங்களில் இவர் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

கைகொடுக்குமா?

குடும்ப முன்னேற்றத்துக்குக் கைகொடுக்க வேண்டும், சுய சம்பாத்தியம் வேண்டும், கைவசம் ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி பல்வேறு உந்துதல்களின் அடிப்படையில் நிறையப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

அங்கே காகித நகைகள், சுடுமண் நகைகள், சணல் பைகள், காகிதப் பைகள், மெழுகுவத்திகள், கைவினைப் பொருட்கள் என பல கலைகளைக் கற்றுத் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஆனால், அவர்களில் எத்தனைப் பேர் குறிப்பிடும்படி வருமானம் ஈட்டுகின்றனர்? விரல்விட்டு எண்ணும் அளவுக்குதான் அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் திறன் கொண்டவர்களாக இருந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கிடைக்க வழியிருக்கிறது.

ஆனால், அவர்கள் இருப்பது ஒரு அகதி முகாமோ அல்லது குடிசைப் பகுதியாகவோ இருந்தால் என்ன செய்வது? தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பனை செய்தா சம்பாதிக்க முடியும்?

"அதனால்தான், பெண்கள் தங்கள் தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்து பொருளாதார சுதந்திரம் பெற உதவ வேண்டும் என்று தோன்றியது.

அந்த எண்ணமே, 'பெர்சிவர்- விமன் ஃபார் கிரீன் எர்த்' (PERSEVERE – Women for Green Earth) அமைப்பை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

இந்த அமைப்பில் தையற்கலை, அழகுக்கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி, செயற்கை நகைகள் செய்வதற்கான பல்வேறு பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சிகளுக்குக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஏதாவது பணப் பங்களிப்பு இருக்கும்போதுதான் ஒன்றை முழுமையான ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முடியும் என்ற சின்ன உளவியல் அணுகுமுறையே இதற்குக் காரணம். நாங்கள் கேட்கும் 50, 100 ரூபாய்கூட கொடுக்க முடியாதவர்கள் எனத் தெரியும்போது இலவசப் பயிற்சி அளிக்கிறோம்" என்கிறார் ரோஸ்லின்.

சந்தைப்படுத்துதல்

கல்லூரிகள், பள்ளிகள், துணிக்கடைகள், வர்த்தக நிறுவனங்களை நேரடியாகச் சென்று அணுகும் ரோஸ்லின், தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உருவாக்கும் பொருட்களைக் குறித்து எடுத்துரைத்து ஆர்டர்களைப் பெறுகிறார்.

அமைப்பில் இருக்கும் பெண்கள் குழுவாகச் சேர்ந்து தயாரிக்கும் பொருட் களை ஆர்டர் அளிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாகக் கொடுத்துச் சம்பாதிக்கின்றனர். அவர்களது திறமைக் கேற்ப ஆர்டர்கள் வழங்கப் படுகின்றன.

சமூக வலைத்தள உதவி

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்தே தங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் படைப்புகளை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக ஷேர் செய்து விளம்பரப்படுத்துகிறார்கள்.

இதனால், நிறைய ஆர்டர்கள் ஃபேஸ்புக் மூலம் வந்திருக்கின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளை விக்காத பொருட்களை வைத்துத் தயாரிப்பதால், நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து காகிதப் பைகள், சணல் பைகள், கோப்புகள் போன்றவற்றுக்கான ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கின்றன.

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் கோப்புகள் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கலர், கலராக பிளாஸ்டிக் கோப்புகளையே கொண்டு செல்கின்றனர்.

பயன்பாட்டுக்குப் பின் அவை தூக்கி எறியப்படும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதனால், பெர்சிவர் அமைப்புப் பெண்கள் தயாரிக்கும் காகிதக் கோப்புகளைப் பயன்படுத்துமாறு மதுரையில் உள்ள பள்ளிக்கூடங்களை அணுகி ரோஸ்லின் ஆர்டர் கேட்டு வருகிறார்.

எவ்வளவு சிறப்பாக ஒரு பொருளை நாம் தயாரித்திருந்தாலும், அதைப் பளிச்சென்று வெளியே தெரிய வைக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

அப்போதுதான் நாம் நினைத்தது நடக்கும். அதற்கான வாய்ப்புகளை ஒரு குழுவுக்கே உருவாக்கி, பெண் சிறுமுதலாளிகளை உருவாக்கும் ரோஸ்லின், கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கிறார்.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in