

வாழ்வில் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்த நாட்கள் அவை. எத்தனையோ பேர் ஆறுதல் சொல்லியும் அம்மாவை இழந்த துக்கத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. தனிமை என்னை ஏதோ செய்தது.
அம்மாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. பள்ளிகளில் எனக்குப் பரிசுத் தொகை வரும் போதெல்லாம் அந்தப் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிடுவார். அவையெல்லாம் பேச்சுப் போட்டிக்குத் தயாராவதற்கு எனக்கு உதவும். அம்மாவின் நினைவாக நின்றுவிட்ட அந்தப் புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தபடி அழுதுகொண்டிருந்தேன். அலமாரியில் தேட ஆரம்பித்தேன். அம்மா அனுப்பிய புத்தகங்கள் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை எடுத்தேன்.
ஓஷோவின் புத்தகம் அது. மெல்லப் புரட்டினேன். ஒவ்வொரு வரியும் என்னுடன் பேசியது. எனக்காகவே எழுதப்பட்டது போலவே இருந்தது. நான் அழுதபோது அவை என்னை உள்வாங்கிக்கொண்டன. என்னை ஆசுவாசப்படுத்தின. என் கரம்பற்றி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரியவைத்தன.
அடுத்ததாக மற்றொரு புத்தகம் என்னை அழைத்தது. அதில், புத்தர், மகனை இழந்து அழும் தாயிடம், இறப்பே இல்லாத வீட்டில் இருந்து கடுகு வாங்கிக்கொண்டு வரச்சொல்லி இருப்பதைப் படித்தேன். எனக்கே சொன்னதுபோல் இருந்தது. இறப்பு என்கிற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டேன். என்னைப் புத்தகங்கள் சூழ்ந்துகொண்டன.
என்னைச் சிறிது சிறிதாக மீட்டெடுத்தன. நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். எழுதினேன். நான் எழுதிய கருத்துப் பகிர்வு ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியானதும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். நிறைய கட்டுரைகள் பல பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தன. என் அம்மாவும் இப்படித்தான் துயரம் அழுத்தும் நேரத்தில் புத்தகங்களைத் துணைக்கு அழைத்துக்கொள்வார். வாசிப்பு இப்போது என் சுவாசமாகி விட்டது.
- ம.ஜெயமேரி, ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி.
நான் கல்லூரி மாணவி.
2005-ல் இருந்து புத்தகங்கள் எனக்கு அறிமுகம் ஆயின. என் அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்வதால், அம்மா என்னை நூலகத்தில் விட்டுச்செல்வார். அம்மாவின் தோழிதான் அங்கே நூலகர். அவர் எனக்குச் சிறுவர் கதைகளைப் படிக்கக் கொடுப்பார். ஆர்வம் மேலிட, தினமும் நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
அதுதான் என் வாசிப்புப் பழக்கத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது. வீட்டில் நாளிதழ்கள் வாங்க ஆரம்பித்தோம். என் அம்மா, அருகில் இருக்கும் ஊரில் உள்ள நூலகத்தில் நூலகர் ஆனார். அது இன்னும் எனக்கு வசதியாகிவிட்டது. விடுமுறை நாட்களில் நானும் அம்மாவுடன் அங்கே சென்றுவிடுவேன்.
நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோது எங்களது பள்ளியில் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரை அவ்வளவு புத்தகங்களைப் நான் பார்த்ததே இல்லை. பார்த்ததும் மிரண்டுபோனேன். வீட்டில் கொடுத்த பத்து ரூபாய்க்கு, பஞ்சதந்திரக் கதைகள் புத்தகத்தை வாங்கினேன். அதுதான் நான் வாங்கிய முதல் புத்தகம்.
புத்தகங்களே எனக்கு நண்பர்களாக இருந்தன. கதைப் புத்தகங்கள் படிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். அப்பா பேருந்துப் பயணத்தின்போது படிக்க வார இதழ்களை வாங்கி வருவார். ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டேதான் சாப்பிடுவேன். இல்லையென்றால் சாப்பிடவே தோன்றாது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காகவே ஆண்டு முழுவதும் பணத்தைச் சேமிப்பேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’, சாண்டில்யனின் ‘கடல் புறா’ போன்ற நூல்களை நிறைய முறை படித்திருக்கிறேன். ஆங்கில எழுத்தாளர்களான ஜே.கே. ரவுலிங், ராபின் சர்மா இருவரும் எனக்குப் பிடித்தமானவர்கள். தற்போது ராபின் சர்மாவின் ‘The 5AM Club’ என்ற புத்தகத்தை வாசித்துவருகிறேன்.
என் கல்லூரிப் பேராசிரியர் சுகுமாரனும் ஒரு புத்தகப் பிரியர். அவரது வழிகாட்டுதலால் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்குபெற்றேன். தலைப்பு முன்னதாகக் கொடுக்கப்படவில்லை. போட்டி நடத்தும் இடத்தில்தான் தலைப்பை அறிவித்தார்கள்.
கிட்டத்தட்ட 17 கல்லூரிகள் கலந்துகொண்ட போட்டியில் நான் பரிசுடன் ஏழாயிரம் ரூபாய் ரொக்கமும் பெற்றேன். நான் வாசித்த நூல்களின் வழியே கிடைத்த அறிவே இதற்குக் காரணம். நண்பர்களுடன் பேசும்போதுகூட, நான் படித்த நூல்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவேன். எங்கள் கல்லூரியில் தமிழ் மன்றத் தலைவி நான். மனச்சோர்விலிருந்து விடுபட வாசிப்பே வடிகாலாக உள்ளது. வாசிப்பு அனுபவம் என்னை மேலும் பண்படுத்தும் என நம்புகிறேன்.
- ம. கீதாபுவனேஸ்வரி, ஈரோடு.