

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்பார் ஆபிரகாம் லிங்கன். வீட்டுக்கு ஒரு புத்தகச்சாலை வேண்டும் என்ற லட்சியத்தை நடைமுறைப்படுத்தினால் நமது நாட்டில் நிச்சயமாக அறிவுவளத்தைப் பெற முடியும் என்றார் அறிஞர் அண்ணா.
பாடப் புத்தகத்தைத் தவிர மற்ற புத்தகத்தைப் பார்ப்பதே தவறு என்ற சூழலில் வளர்க்கப்பட்டவள் நான். என் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை என்னை மனமுடைய வைத்தது. அப்போது தற்செயலாக ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. உள்ளுக்குள் புத்துணர்வு ஏற்பட்டது. அதை நம்பிக்கை என்றும் சொல்லலாம். அன்றிலிருந்து ஒவ்வொரு புத்தகமாக வாசிக்கத் தொடங்கினேன். இத்தனை நாட்களை வீணடித்துவிட்டேனோ என்று நினைத்து வருந்தினேன்.
உடல் நலமின்றி இருந்தால் எப்படி மருந்து மாத்திரைகள் நம்மைக் குணப்படுத்துமோ அதுபோல் ஒரு நல்ல புத்தகம் நமது மன நோயைத் தீர்க்கும்.
நேர்மறைச் சிந்தனை நிச்சயம் பலன்கொடுக்கும் என்பதை நார்மன் வின்சென்ட் பீலின் புத்தகம் உணர்த்தியது. நோய் என்பது உடல் மட்டுமல்ல மனமும் சம்பந்தப்பட்டது. நம் மனம் நினைத்தால் நோயை உடலுக்குள் தங்கவிடாமல் வந்த இடம் தெரியாமல் விரட்டிவிடலாம் என்பதை எனக்கு உணர்த்தியது நாகூர் ரூமியின் ‘நலம் நலமறிய ஆவல்’. நேற்று என்பது நடந்த முடிந்த விஷயம்; நாளை என்பது வெறும் கற்பனை; இன்று மட்டுமே நிஜம் என்பதை எனக்கு உணர்த்தியது எகார்ட் டோலின் ‘இப்பொழுது’.
உற்ற நண்பன்
இப்போது பாலகுமாரனின் ‘மண்ணில் தெரியுது வானம்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவர் எழுதிய ‘மனக் கோயில்’ புத்தகத்தை வாசிக்க வாசிக்க வியப்பாக இருந்தது. நான் எங்கே சென்றாலும் என்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வேன். நம்மேல் அக்கறை உள்ளவர்கள் நம்முடன் இருந்தால் எப்படி நம்முள் சந்தோஷமும் நிம்மதியும் நிலவுமோ, அந்த உணர்வை ஒரு நல்ல புத்தகம் நிச்சயம் வழங்கும். எனவே, புத்தக நண்பனை எப்போதும் துணையாக வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய தலைமுறையினர் நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், வருங்காலத்தில் நல்ல சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாடப் புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆனால், எப்படி வாழ வேண்டும், வாழ்வில் கடினமான சூழல் ஏற்பட்டால் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அந்தப் புத்தகங்கள் சொல்லித் தருவதில்லை. இன்றைய தலைமுறையினருக்கு அனைத்தும் மிக எளிதில் கிடைக்கின்றன.
உலகமே தன் கையில் உள்ளது என்று நினைத்துக்கொண்டு அவர்கள் வெறும் கிணற்றுத்தவளைகளாக உள்ளனர். வாசிக்கத் தூண்டும் வகையில் அவர்களது சிந்தனையை மாற்ற வேண்டும். வாசிப்பதை அவர்கள் நேசிக்க வேண்டும். வாசிப்பதால் ஏற்படும் நன்மையை இளமையிலேயே தெரிந்துகொண்டால்தான் நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஏனெனில் மனம் செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லைதானே!
- கிரிஷ் மானசா, ராஜபாளையம்.