படிப்போம் பகிர்வோம்: அளவற்ற ஆனந்தம்!

படிப்போம் பகிர்வோம்: அளவற்ற ஆனந்தம்!
Updated on
1 min read

கதை கேட்கும் ஆர்வமே என் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளமானது.  என் பாட்டி வீட்டில் நிறையப் பெண்கள். பாட்டி, சின்ன பாட்டி, பெரிய பாட்டி, அம்மணி, அப்பத்தா, சித்தி என்று வீடு முழுக்கப் பெண்களாக நிரம்பியிருப்பார்கள். நான் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்லுவார்கள். இப்படிக் கதை கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு கட்டத்தில் எல்லாக் கதையும் சொல்லியாச்சு, எங்களிடம் கதை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதுதான் நாம் ஏன் கதைப் புத்தகம் படிக்கக் கூடாது எனத் தோன்றியது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். என் வீடுதான் அதற்குத் தளமாக இருந்தது. வீட்டுக்கு வரும் நாளிதழ்களை, வாரப் பத்திரிகைகளை மற்றவர்கள் படிப்பதைப் பார்த்து நானும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் நான் படிக்க உதவியாக இருந்தது, ‘அம்புலிமாமா’ புத்தகம்.  ஒரு பக்கக் கதையில் அரைப் பக்கம் படமும் அரைப் பக்கம் கதையும் இருக்கும். அந்தக் கதைகூட மூன்றே பத்தியில் முடிந்துவிடும்.

ஐந்தாவது படித்தபோதுதான் முழுமை யாகப் புத்தகம் படிக்கக் கற்றுக்கொண்டேன். அப்போது வார இதழ் ஒன்றில் வெளியான ‘தங்கப் புறா’ தான் நானே வாசிக்கத் தொடங்கிய முதல் தொடர். அப்போதிருந்து வாசிப்பே என் துணை, என் தோழி என்றானது. “எப்ப பார்த்தாலும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கே” என அம்மாவிடம் பேச்சுவாங்கும் அளவுக்கு என் வாசிப்பு இருந்தது.

ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், கி.ராஜநாராயணன், சிவசங்கரி, ரமணி சந்திரன் ஆகியோர் என் விருப்ப எழுத்தாளர்கள். எம்.பெர்னாட்ஷா எழுதிய  ‘சங்கர மங்கை’தான் நான் முதலில் வாசித்த நாவல். அதன் பிறகு பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், வெற்றித் திருநகர், தென்பாண்டி சிங்கம் என நாவல்களின் பின்னால் பயணப்பட்டேன்.  என் வாசிப்புதான் நான் கல்லூரி செல்லக் காரணமாக அமைந்தது.

அறிவொளி இயக்க வகுப்புகள், என் வாசிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றன. அங்குதான் ரஷ்ய இலக்கியங்களும், மார்க்ஸ், லெனின், சே, பெரியார் போன்றவர்களின் எழுத்துகளும் அறிமுகமாயின. திருமணத்துக்குப் பிறகு வாசிப்பில் தொய்வு ஏற்பட்டாலும் இடைவெளிவிட்டு மு.வரதராசனாரின் ‘அகல் விளக்கு’ எனக்குப் புதுவிளக்கானது.

குடும்பம், வேலை, குழந்தைகள் என நாட்கள் நகர்ந்தாலும் வாசிப்பைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். புத்தகங்களைப் பரிசளிப்பது, புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்வது, நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது எனப் புத்தக வாசனையைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவருகிறேன். எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல் என் பிள்ளைகள், அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து வாசிக்கும்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் அளவில்லாதது.

- புகழ் இன்பா, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in