

இந்தப் பூமிகூடச் சுற்றுவதை ஒருநாள் நிறுத்திவிடும். ஆனால், இந்த மாமியார் - மருமகள் சண்டை மட்டும் ஒருநாளும் நிற்காது என்று சொல்கிறார்களே... உண்மையிலேயே இரண்டு பெண்களால் ஒரு வீட்டில் இருக்க முடியாது என்றால் அந்த உறவு முறை எப்படி இப்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கும்? மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருக்க முடிகிறது என்றால் ஏதோ ஒருகட்டத்தில் அந்தப் பெண்கள் தங்களுக்குள் ஒத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்புறம் ஏன் இப்படி ஒரு வீண்பழி அவர்கள் மீது? இரண்டு பெண்களுக்கு நடுவே இப்படிச் சிண்டு முடிந்துவிட்டால் தங்கள் பாடு நிம்மதியாக இருக்கும் என்று இந்த ஆண்கள் இப்படியொரு குறுக்குவழியை யோசித்து வைத்திருக்கிறார்களோ என்று தோன்றியது.
பெரும்பாலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும் புள்ளி அந்த வீட்டு ஆணாகத்தான் இருப்பான். எங்கே மகன் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவானோ என்று அம்மாவுக்கு இருக்கும் பயமும் எங்கே தன் கணவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்று மனைவிக்கு இருக்கும் பயமும்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணி வேராக இருக்கிறது. மொத்தத்தில் அந்த வீட்டு ‘ஆண்சிங்க’த்தின் மீது வளர்த்த அந்த அம்மாவுக்கும் நம்பிக்கை இல்லை, வந்த மருமகளுக்கும் நம்பிக்கை இல்லை. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறான் ஆண். அப்படி இருக்கும் ஆணைத்தான் ‘குடும்பத் தலைவன்’ என்று சொல்லி அதை இந்தச் சமூகமும் நம்ப வைத்திருக்கிறது.