

நான் 2003இல் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது பேச்சுப் போட்டிக்கு என் தோழி ஆனந்தி என் பெயரை நான் மறுத்தபோதும் பரிந்துரைத்தாள். தாமதமாகப் பெயரைப்பதிவு செய்ததால் பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் மற்றவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்கள். செய்வதறியாமல் எங்கள் சிறிய கிராமத்தில் இருந்த நூலகத்தில் காமராசரைப் பற்றிய புத்தகத்தை வாசித்து, ‘நான் பிரதமரானால்’ என்கிற தலைப்பில் நானே எழுதியும் பேசியும் முதல் பரிசு பெற்றேன். அதைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் உள்ள குட்டி குட்டி புத்தகங்கள் மொத்தத்தையும் வாசித்தேன். இன்று வரை தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்துவிடுகிறேன்.
வாசிப்பு, அறிவைக் கூர்மை யாக்குகிறது. தனித்துவத்தை உருவாக்கித் தருகிறது. நான் வாசித்துக்கொண்டிருக்கையில் என் பிள்ளைகளும் உடன் வந்துவிடுவார்கள். கைபேசி, தொலைக்காட்சி இவற்றிலிருந்து விலகி இருக்க வாசிப்பு கைகொடுக்கிறது. வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தியதில் அளவற்ற மகிழ்ச்சி. நான் வாசிக்கக் காரணமாக இருந்த தோழி ஆனந்திக்கும் எனக்கு எந்த நேரத்தில் புத்தகம் வேண்டுமென்றாலும் நூலகத்தைத் திறந்து புத்தகத்தை எடுத்துக்கொடுத்த ஜானகி அக்காவுக்கும் நன்றி - பிரியா நாராயணன், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.