

என் அப்பா, அம்மா இருவருமே ஆசிரி யர்கள். என் சிறுவயதில் காமிக்ஸை அறிமுகப்படுத்தினார் அப்பா. பின்னர் வார இதழ்கள், நெடுங்கதைகளை அறிமுகப்படுத்தி ஆழ்ந்த வாசிப்பை உருவாக்கியவர் என் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் அருணாசலம். ராஜாஜியின் ‘சக்ரவர்த்தித் திருமகன்’, ‘வியாசர் விருந்து’ போன்றவற்றை அவர் அறிமுகப்படுத்த, இன்றுவரை வாசிப்பு தொடர்கிறது.
நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’ நாவலின் கதாநாயகன் பாவெல் கர்ச்சாகின் இன்றும் என் ஆதர்ச நாயகன். பனி படர்ந்த ரஷ்யாவின் அடர்ந்த வனம் நம் கண் முன்னே நிற்கும். பின்னர் லக் ஷ்மியின் ‘மிதிலா விலாஸ்’, வாஸந்தியின் ‘மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்’ போன்ற நூல்களோடு சிவசங்கரி, அனுராதா ரமணன், சாண்டில்யன், கல்கி என வரிசைகட்டி நின்றார்கள்.