

1960களில் எனது குழந்தைப் பருவம் முதல் வாசிப்பு என்னுள் கலந்துவிட்டது. என் வீட்டில் என் அப்பா, அம்மா, அண்ணன் என அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கும் அது இயல்பாகவே வந்துவிட்டது.
எங்களுக்கு அடுத்தடுத்து இருந்த நான்கு வீடுகளில் குமுதம், ஆனந்த விகடன், ராணி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற பல புத்தகங்களை வீட்டுக்கு ஒன்றாக வாங்கி எங்களுக்குள் மாற்றிக்கொள்வோம். நான் நான்காம் வகுப்பு படித்தபோதே, ‘ராணி’யில் பி.டி.சாமியின் திகில் கதைகளைப் படித்து, பள்ளிக்கூடம் போய் நண்பர்களுக்குக் கதை சொல்வேன். என்னிடம் கதை கேட்பதற்காகவே ஆவலுடன் அவர்கள் காத்திருப்பார்கள்.
பின்னாளில் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன் ஆகியவர்களின் அமானுஷ்ய, திகில் கதைகள் படிப்பதற்கு பி.டி.சாமியின் கதைகளே முன்னோடி. தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ இதழை என் அம்மா மிகவும் விரும்பிப் படிப்பார். அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் ஒவ்வொரு வீட்டிலும் சேர்த்து வைத்திருக்கும் பைண்ட் செய்யப்பட்ட கதைப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்வோம். அவற்றில் முக்கியமானது ‘கல்கி’யின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’.
இவற்றை 10 முறையாவது படித்திருப்பேன். பதின்பருவத்தில் வாசித்த சாண்டில்யனின் ‘கடல்புறா’, ‘யவன ராணி’, ‘ராஜமுத்திரை’ போன்றவை மனம் கவர்ந்தவை. குறிப்பாக சாண்டில்யனின் வர்ணனைகள் ரொம்பப் பிடிக்கும். திருமணப் பருவத்தில் இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோரது தீவிர ரசிகையாகிவிட்டேன்.
இவர்களின் நாவல்கள் அப்போது பெரிதும் விரும்பப்பட்டன. சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தின. இவை போக அவ்வப்போது மற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் நேசித்தது உண்டு. சிறுவயது முதல் இந்த வாசிப்பின் மீது கொண்ட நேசம்தான் என்னை மெல்ல எழுதத் தூண்டியது.
துண்டு பேப்பரிலும் டைரியிலும் மனதில் நினைத்ததை எழுதிவந்த நான் பின்னர் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். எனது எழுத்து அங்கீகரிக்கப்பட, ஒரு காலத்தில் பிரபல நாளிதழின் இணைப்பிதழில் மாதம் ஒரு கதை வெளியானது. பிறகு மங்கையர் மலர், அவள் விகடன், குமுதம் சினேகிதி என சிறகு விரிய, என் அறுபதாவது வயதில் முதல் புத்தகம் வெளியானது.
இந்த ஆறு வருடங்களில் பத்துப் புத்தகங்கள் வரை வெளியிட்டுள்ளேன். அதிலும் நூறு அத்தியாயங்களைக் கொண்ட என் பெருநாவல் ‘சுந்தர பவனம்’ மிகப்பெரும் வரவேற்பை வாசகர்களிடையே பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் எழுதும் ஆர்வத்தை ஊக்குவித்த என் பெற்றோர் ஒரு காரணம்.
என் வாழ்க்கையின் இந்தத் திருப்பத்திற்குக் காரணம் சிறு வயதிலேயே தொடங்கிவிட்ட என் வாசிப்பு அனுபவமும் மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து அவற்றால் ஏற்பட்ட தாக்கமுமே. எங்கள் காலத்தில் படிக்கும் பழக்கத்தைப் பள்ளியிலேயே நூலகம் உருவாக்கி, ஊக்குவித்ததைப் போல, சிறாருக்குப் படிக்கும் வழக்கத்தைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும். அது எதிர்காலத்தில் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கும் என்பது உறுதி.
- தி. வள்ளி, திருநெல்வேலி.