

வீட்டு வேலை, அலுவலகப் பணி எனப் பொறுப்புகள் பெண்களைத் துரத்துகின்றன. இப்படி எந்நேரமும் ‘கடமை’யாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை ஒன்றிணைத்து நட்பு, பாலினச் சமத்துவம், பொதுவெளியில் பெண்களுக்கான இடம் எனப் பல தலைப்புகளில் கலந்துரையாடியும் விவாதித்தும் வருகிறது ‘காபி அண்டு கலவரம்’ குழு.
சென்னையைச் சேர்ந்த ஸ்ருதகீர்த்தி, சிந்து ஆகிய இருவரும் இணைந்து ‘காபி அண்டு கலவரம்’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். பெண் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இக்குழுவோடு இணைந்து பயணிக்கலாம். பெரும்பாலும் ஆண்களுக்கானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இவ்வுலகில் இணை யத்திலும் இணையத்துக்கு வெளியிலும் பெண்களுக்கான ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் முனைப்பில் களமிறங்கி யுள்ளதாகச் சொல்கிறார் ஸ்ருதகீர்த்தி.
ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்
“அன்பான, வெற்றிகரமான, தைரியமான, தலைமைப் பண்பு நிறைந்த, கல்வியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் பெண்களைப் பார்த்திருப்போம். இவர்களில், குற்ற உணர்வு இல்லாமல் ஓய்வெடுக்கும் பெண்களைப் பார்த்திருப்போமா? அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்தானே? இது குறித்து என் தோழியோடு பேசிக்கொண்டிருந்தபோது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான பெண்கள் நேரமெடுத்து ஓய்வெடுப்பதோ தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வதோ இல்லை. அதற்கான ஒரு தளத்தைத்தான் இங்கே உருவாக்கியுள்ளோம்.
‘Gossip’ என்கிற ஆங்கில வார்த்தைக்கான விளக்கம் ‘நெருங்கிய தோழி’ என்பதாக இருந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் ‘புறம்பேசுவது’தான் ‘gossip’ என்றாகிவிட்ட நிலையில், ‘gossip’ என்றாலே அது பெண்களுக்கானது என மாற்றி வைத்திருக்கிறார்கள். அதே போல ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணுக்கு உதவவோ ஆதரவாக இருக்கவோ முடியாது என்கிற கட்டுக்கதைகளும் ஏராளம். இப்படிப் பெண்களைப் பற்றி எவ்வளவு அபத்தங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன!
உண்மையில், ஐந்து பெண்கள் சேர்ந்தால் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடவும் ஆரோக்கியமாக விவாதிக்கவும் முடியும். வாட்ஸ்-அப் குழு, இன்ஸ்டகிராம் போன்று சமூக வலைதளத்தில் மட்டும் கலந்துரையாடாமல் மாதம் ஒரு முறை எல்லாரும் சந்தித்துக் கொள்வோம். இதுவரை, நல்ல Gossip, பொது இடங்களில் பெண்கள், பெண்களின் நட்பு, ஆர்ட் தெரபி போன்ற தலைப்புகளில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளோம். வெறும் கலந்துரையாடலோடு நிற்காமல், அறிவுப் பகிர்தல் நிகழ்வுகளும் நடைபெறும். உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினை களின்போதும் ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவாகவும் நிற்கிறோம்” என்கிறார் ஸ்ருதகீர்த்தி.
இச்சந்திப்பில் மருத்துவர், பொறியாளர், கலைத் துறையைச் சேர்ந்தவர், வழக்கறிஞர், ‘ஹோம் மேக்கர்’ எனப் பல பொறுப்புகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ‘ரவுண்டு டேபிள்’ முறையில் அரங்கேறும் இந்நிகழ்வில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முதல் பால் புதுமையர் ஆதரவு வரை பலவற்றைப் பற்றிக் கலந்துரையாடி, தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையைப் பற்றி விவாதிக்கவும் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கவும் இந்தக் கலந்துரையாடல் உதவுகிறது என்கிறார் சிந்து.
ஏன் பெண்கள் மட்டும்?
இன்றைக்கும்கூட நாம் பாலினச் சமத்துவத்தை முழுமையாக எட்டவில்லை என்கிறார்கள் இக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
“பெண்கள் முன்வைக்கும் கருத்துகளில் குறைகாண்பதோடு அவற்றைத் தேவையற்ற தாகப் பாவிக்கும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். மகளாக, அம்மாவாக, மாணவியாக, வேலைக்குச் செல்பவராக என ஒவ்வொரு பொறுப்பிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மட்டுமன்றி நல்ல விஷயங்களையும் வாய்விட்டுப் பகிர்ந்து கொள்வதில்கூடச் சிக்கல் இருக்கிறது. என்றைக்கு முழுமையான பாலினச் சமத்துவத்தை நாம் அடைகிறோமோ அதுவரை பெண்களுக்கான குழுக்கள், அமைப்பு களுக்கான தேவை கட்டாயம் இருக்கும்” என அழுத்தமாகப் பதிவு செய்தார் சிந்து.
இக்குழுவின் இன்ஸ்டகிராமைப் பார்க்க: https://www.instagram.com/koffeeandkalavaram/