

வாகனப் பெருக்கம் அதிகரித்துவரும் இந்நாளில் கால மாற்றத்துக்கு ஏற்பச் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மின்சாரம் மூலமும் சி.என்.ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலமும் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. மின் வாகனங்களின் தேவை அதிகரித்துவரும் சூழலில் சாதாரண வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றும் பணியைச் செய்துவருகிறார் கோவையைச் சேர்ந்த தொழில்முனை வோர் டி.பி.சிவசங்கரி. கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள செந்தாம்பாளையத்தில் ‘ஏஆர்4 டெக் பிரைவேட் லிமிடெட்’ என்கிற பெயரில் இயங்கிவரும் தொழிற்சாலையில் அவரைச் சந்தித்தோம். பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு போதாது என்கிற பொதுப்புத்தியைத் தன்னுடைய அபாரமான தொழில் திறமையால் பொய்யாக்குகிறார் சிவசங்கரி. அவருடனான உரையாடலில் இருந்து…
இந்தத் துறைக்குள் நுழைந்தது எப்படி?
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங்கில் எம்.டெக் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாக மோட்டார் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தேன். கோவை மாவட்டம் நீலாம்பூரில் இயங்கிவந்த மோட்டார்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஆபரேஷன் பிரிவில் மேலாளராகப் பணியில் சேர்ந்தேன். பின்னர், செயல் இயக்குநர், நிர்வாக இயக்குநர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று, ஒரு கட்டத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக ஆனேன். மோட்டார்கள் தயாரிப்பு, வாகனங்கள் சீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
2021இல் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர், நான் பங்குதாரராக இருந்த நீலாம்பூரில் உள்ள நிறுவனத்துக்கு வந்தனர். வாகனம் சார்ந்த பணிகளை நாங்கள் செய்து தருவதை அறிந்த அவர்கள், சாதாரண இருசக்கர வாகனத்தை மின்சாரம் மூலம் இயங்கும் வாகனமாக மாற்றித் தரும்படிச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து முதல் முறையாக அந்தப் பணியை நாங்கள் செய்தோம். முதல் பணியே வெற்றிகரமாக அமைய, அதே ஆண்டின் இறுதியில் நான் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், எனது சொந்த முதலீட்டில் ‘ஏஆர்4 பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தைத் தொடங்கினேன்.
வாகனங்களைப் பழுது நீக்குவது, சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்றுவது, ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்ட வாகனத்தை வேறொரு பணிக்காக உருமாற்றுவது, வாகனங்களின் உதிரிபாகங்களை மறுபயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றுவது எனப் பலவற்றையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.
வாகனங்களை இப்படி வகை மாற்ற எவ்வளவு செலவாகும்?
சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்றுவது முக்கியமானது. நான் படித்தது வேறு துறையாக இருந்தாலும், மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியபோது மேற்கண்ட தொழில் உத்திகளைக் கற்றுக்கொண்டேன். பின்னர், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அதை மேம்படுத்திக்கொண்டேன். சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்ற மோட்டார், கன்ட்ரோலர், பேட்டரி, சார்ஜர் ஆகிய நான்கும் முக்கியமானவை. இதற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதுவே நான்கு சக்கர வாகனங்களாக இருந்தால் ஒரு வாகனத்துக்கு 6 லட்சம் ரூபாய் செலவாகும். நாங்கள் ஹோண்டா ஆக்டிவா, சுஸுக்கி ஆக்சஸ், டிவிஎஸ் எக்ஸ்.எல். உள்ளிட்ட வாகனங்களை மாற்றம் செய்கிறோம்.
எடுத்ததுமே ஒரு வாகனத்தை மின் வாகனமாக மாற்றிவிட மாட்டோம். மாற்றத்துக்காக ஒரு வாகனம் வந்தால் அதன் தரம், உதிரிபாகங்களின் தரம், மின்சார வாகனமாக மாற்றினால் குறிப்பிட்ட வருடங்களுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பதை எல்லாம் ஆய்வு செய்கிறோம். அதில் ஒத்து வந்தால் அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்கிறோம். வாகனத்தில் உள்ள இன்ஜினை அகற்றிவிட்டு அதற்குப் பதில் மோட்டார் பொருத்தி, அது இயங்கத் தேவையான கன்ட்ரோலரைப் பொருத்தி, பேட்டரி, சார்ஜர் கருவிகளைப் பொருத்துகிறோம். அவற்றை வயர்கள் மூலம் இணைக்கிறோம். சில வாகனங்களுக்கு ஒரே நாளில் வேலை முடிந்து விடும். சில நேரம் சில நாள்கள் ஆகும். சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்றும் உதிரிபாக ‘கிட்’களையும் விற்பனை செய்கிறோம்.
மின் வாகனமாக மாற்றுவதால் என்ன பலன்?
பெட்ரோல் செலவு குறையும். ஒரு முறை சார்ஜ் போட இரண்டு யூனிட் மின்சாரம் போதும். 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல லாம். 80 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். வேகத்தின் அளவை மேலும் அதிகரிக்கலாம். தமிழகத்தில் நிலவும் வெப்பத்தையும் வாகனத்தில் இருந்து வரும் வெப்பத்தையும் தாங்கும் வகையிலான பேட்டரிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். சோடியம் அயன் பேட்டரி, லித்தியம் பாஸ்பேட் பேட்டரிகளைப் பயன்படுத்துவதால் வாகனங்களுக்கும் பாதுகாப்பு. எங்களது சோடியம் பேட்டரியைப் பயன்படுத்துவதால் எட்டு வருடங்களுக்கு எந்தப் பழுதும் ஆகாது. 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தையும் அந்த பேட்டரி தாங்கும். விரைவாக சார்ஜ் ஏறும். விபத்தில் சிக்கினாலும் வெள்ளத்தில் மூழ்கினாலும் பேட்டரிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பொதுமக்களிடம் இதற்கு வரவேற்பு உள்ளதா?
சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்றப் பொதுமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். கடந்த மூன்று வருடங்களில் 850க்கும் மேற்பட்ட உதிரிபாக ‘கிட்’கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வாகனங்களும் மாற்றித் தரப்பட்டுள்ளன. சாதாரண வாகனத்தை மின் வாகனமாக மாற்றியவுடன் ‘ஆட்டோமோட்டார் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பின் அனுமதிக் கடிதத்தைப் பெற்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து ஆவணத்தில் மாற்றம் செய்கிறோம். மின் வாகனமாக வகை மாற்றம் செய்யப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும், வகை மாற்றம் செய்யும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நிதியுதவியைச் செய்ய நிதிநிறுவனங்கள், வங்கிகள் முன்வர வேண்டும். மேலும், மின்சார வாகனமாக வகை மாற்றம் செய்யப்பட்டவுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஆவணங்களை எடுத்து வர வேண்டும், கட்டண விகிதங்கள் உள்ளிட்டவற்றை அரசு தெளிவுபடுத்திட வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் வெவ்வேறு வகையான விதிமுறைகள் இருக்கின்றன. மேலும், வகை மாற்றம் செய்த வாகனங்களின் ஆவணத்தில், அதற்கான ‘கிட்’ எண்ணையும் குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் இருபாலரும் பணியாற்றினாலும் மின் வாகனமாக மாற்றிடும் பணியைப் பெண்கள் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குத் தனிப் பயிற்சி அளித்திருக்கிறோம்.
படங்கள்: ஜெ.மனோகரன்