

தமிழ்த் திரைப்படங்களில் மாமியார் - மருமகள் உறவு என்பது பெரும்பாலும் செயற்கையாகவும் எதிர்மறையாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அண்மையில் வெளி யான ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku-அடிநீரோட்ம்) மலையாளப் படம் விதிவிலக்கு. திருமண அமைப்பு, ஏமாற்றம், துரோகம், ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரம், கடமை என அனைத்தையும் இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்களின் உணர்வுகளையும் கேரளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தையும் மையமாக வைத்து நுணுக்கமாகப் படத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டோமி.
தன் மகன் இறந்துபோக, குடும்ப வாரிசைச் சுமக்கும் மருமகள் மீது அளவு கடந்த வாஞ்சை பொங்குகிறது லீலாம்மாவுக்கு (ஊர்வசி). ஆனால், அஞ்சுவுக்கு (பார்வதி) வரும் ஒரு போன், அஞ்சுவின் ரகசிய வாழ்க்கையை லீலாம்மாவுக்குத் தெரியப்படுத்துகிறது. மகனின் பிணம் வீட்டில் கிடத்தப்பட்டிருக்க, சடங்கு முடிந்தவுடன் வீட்டில் இருந்து வெளியேறத் துடிக்கிறாள் அஞ்சு. அவள் மனதை மாற்றித் தங்க வைத்துவிடலாம் என நினைக்கும் லீலாம்மா, வடியாத வெள்ளத்தைச் சாதகமாக்கிக்கொள்ள முனைகிறார். அந்த இறப்பு வீட்டில் லீலாம்மாவுக்கும் அஞ்சுவுக்குமிடையே நடக்கும் உணர்வுப் போராட்டம், இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடும் வெவ்வேறு எண்ண ஓட்டமுள்ள மனங்கள், அதற்கு அடிநாதமாக இருக்கும் இருவருக்குமான பிணைப்பும் அதற்கு இணையான வலியும் எனப் படம் மனித உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாகத் தொட்டுச் செல்கிறது.
உணர்வுப் போராட்டம்
நம் சமூகத்தில் பலருக்கும் விதிக்கப்பட்ட மண வாழ்க்கைதான் வாய்க்கிறது. அந்த விதிக்கப்பட்ட வாழ்க்கை யில் குறைந்தபட்ச அன்பும் அரவணைப்பும் அமைவதே பெரிய விஷயம்தான். மருமகளை மகளாக நினைப்பதாகக் கூறும் லீலாம்மா, மாமியாராக அதிகாரம் செலுத்த வில்லையே தவிர, தன் சுயநலத்துக்கு வேறொரு பெண்ணின் சந்தோஷத்தை அவர் அறியாமல் பலி கொடுக்கிறார். யதார்த்த வாழ்க்கையில் பல பெண்கள் இதை உணர்வதில்லை. ஆனால், லீலாம்மா தன் தவறை உணர்கிறார். அஞ்சுவும் லீலாம்மாவை விரோதி யாகப் பார்க்கவில்லை என்றாலும், தனக்கான வாழ்வை நோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இரு பெண்களுக்கான இந்த உணர்வுப் போராட்டத்துக்கு மையமாக இருப்பது என்னவோ ஓர் ஆண்தான்.
மாமியார் - மருமகள் உறவு என்பது ஒருவர் மீது மற்றொருவர் அதிகாரம் செலுத்துவதாக, போட்டியாகக் கட்டமைக்கப்படும் படங்களுக்கு மத்தியில் ‘உள்ளொழுக்கு’ மிகப் பெரும் ஆறுதல். பெண்தான் பெண்ணுக்குப் போட்டி, பெண்தான் பெண்ணுக்கு எதிரி என்று இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. ஆனால், யதார்த்தம் வேறு என்பதைத் தான் படம் அழுத்தமாகச் சொல்கிறது. தன் மகன் இறந்துவிட்டான், மருமகள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று லீலாம்மா நகரும் இடம் சிறப்பு. அஞ்சு மீதான பாசத்தால் தன்னோடு இருந்து விடும்படி மன்றாடினாலும் இறுதியில் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று முடிவெடுக்கிறார்.
எது அன்பு?
யதார்த்தம் இத்தகைய பெண்களால் நிறைந்தது தான். தன் காதல் மீது நம்பிக்கை வைத்து சமூகம், உறவுகள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வாழ்க்கையை நோக்கி உறுதியாக அஞ்சு நகர்ந்தாலும், காயப்படும்போது தன் மீது உண்மை யான அக்கறை செலுத்தும் மாமியாரிடம்தானே தஞ்சமடைகிறார். அஞ்சு எந்தக் காதலை உலகம் என நினைத்து வெளியேறத் துடிக்கிறாளோ, அந்தக் காதலிடம் அடிவாங்கும் போது காதலனின் சுயநலம் புரிகிறது. காதலனின் சுய நலத்தின் முன் மாமியாரின் சுயநலம் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. மனம் பெண்டுலமாக அங்கு மிங்கும் நிலைகொள்ளாமல் ஊசலாடிக்கொண்டிருக்க, அதை ஒரு பக்கமாக நிற்க வைக்க மிகக் கனமான ஒன்று அவளுக்குத் தேவைப்படுகிறது. என்னதான் சுயநலமாக இருந்தாலும், அந்தச் சுயநலத்தைப் பலமிழக்கச் செய்கிற கனமான அன்புதான் வாழ்வை இட்டுச் செல்லும் என்பதை அஞ்சு உணர்வதும் அப்படித்தான்.
நிறைய இடங்களில் மாமியா ருக்கும் மருமகளுக்குமான உணர்வுச் சிக்கலில் யார் பக்கமும் நிற்க முடியாதவாறு பார்ப்பவர் களைத் தடுமாறச் செய்திருக்கிறார் இயக்குநர். சரியோ தவறோ அவரவர் செயல்களுக்கு அவரவருக்கு நியாயமான ஒரு காரணம் இருக்கத்தானே செய்கிறது. லீலாம்மாவின் மகனின் சடலம் கிடத்தப்பட்டிருக்கும் கண்ணாடிப் பெட்டிக்கு அருகில் அமர்ந்து மாமியாரும் மருமகளும் பேசும் காட்சியில் அஞ்சு லீலாம்மாவிடம், “சாகும்போது உங்க புருஷன் உங்க மகனுக்குக் கொடுத்த வாட்ச்தான் அன்புன்னு நினைக்கிறீங்கல்ல. உங்களுக்கு அன்பு, காதல்னா என்னன்னு தெரியாது. ஏன்னா நீங்க அதை அனுபவிச்சதில்லை. நான் உங்க பையன்கூட சந்தோஷமா இல்லை” என்று கூறும்போது லீலாம்மா வெளிப் படுத்தும் நிச்சலனமான முகபாவம் பல ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கிறது.
பாடல்கள் இல்லை. நடனம் இல்லை. பஞ்ச் டயலாக்குகள் இல்லை. ஹீரோயிசத்தை முன்னிறுத்தும் சண்டைக் காட்சிகள் இல்லை. இவை எதுவும் இல்லாமல் இரண்டு பெண்களின் பார்வையாலும் உணர்வாலும் பார்ப்பவர்களைக் கட்டிப்போடுவதோடு யோசிக்கவும் தூண்டுகிறது ‘உள்ளொழுக்கு’.
- கமலி பன்னீர்செல்வம்