

“கடின உழைப்புடன் கொஞ்சம் புத்திசாலித்தனமும் சேர்ந்ததுதான் எங்கள் வெற்றியின் ரகசியம்” என்று சொல்கிறார்கள் ஆன்லைன் மூலம் ஆடை, அணிகலன்களை விற்பனை செய்யும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சகோதரிகள் பிரியா பயாக்கல், பத்மினி பயாக்கல்.
இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபடியே நவீன ஆடைகள், மணப்பெண் அலங்காரப் பொருட்கள், விதவிதமான வெளி மாநில அணிகலன்கள் எனப் பல பொருட்களை ஆன்லைனிலேயே விற்பனை செய்து வருகின்றனர். பிரியா பயாக்கல், பிரபல துணிக்கடையில் பணியாற்றியிருக்கிறார். அப்போது அவர் பல்வேறு துணி ரகங்கள் பற்றியும் அவை எந்தெந்த ஊர்களில் உருவாக்கப்படுகின்றன என்பது போன்ற தகவல்களையும் தெரிந்துகொண்டார். அந்த அனுபவ அறிவுதான் சுயமாகத் தொழில் தொடங்க அடித்தளமாக அமைந்தது என்கிறார்.
ஆரம்பமே அமர்க்களம்
பிரியாவும், பத்மினியும் தத்தம் குடும்பத்தினருடன் ஒரே அபார்ட்மெண்டுக்குக் குடிபெயர்ந்தனர். இதுவே அவர்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நல்லதொரு ஆரம்பமாக அமைந்தது. அகமதாபாத், மும்பை எனப் பல்வேறு ஊர்களில் இருந்து ஆடைகளை வாங்கிவந்து, முதலில் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்துள்ளனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே ஆடைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அலங்கார நகைகளையும் வாங்கி வந்தனர். பொருட்காட்சிகளும் இவர்களுக்குக் கணிசமான அளவு வாடிக்கையாளர்களைக் கொடுத்திருக்கின்றன. அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன்படியே தங்களுக்கென www.vasahindia.com என்ற இணையதளத்தைத் தொடங்கினர். பேஸ்புக் முகவரி www.facebook.com/vasah13.
சீசனுக்கு ஏற்ப வியாபாரம்
“எப்போதும் ஒரே மாதிரியான பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதில்லை. திருமண சீசன் என்றால் மணப்பெண் அலங்கார நகைகள், வேலைப்பாடு மிகுந்த ஆடைகளை விற்பனை செய்கிறோம். பண்டிகை காலத்துக்கு ஏற்ற மாதிரி விற்பனைப் பொருட்களையும் தேர்வு செய்து அவற்றின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுகிறோம். இதனால் பொருட்கள் தேங்குவதும் இல்லை. எப்போதுமே வாடிக்கையாளர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள்” என பத்மினி தங்கள் வியாபார உத்தியைப் பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டார்.
எப்போதும் தள்ளுபடி
“பொதுவாகப் பெரிய கடைகளில் பண்டிகைக் காலங்களில் மட்டும் தள்ளுபடி அறிவிப்பார்கள். ஆனால் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 15% வரை டிஸ்கவுன்ட் வழங்குகிறோம். இதனால் அவர்கள் மூலம் எங்களுக்குப் புதுப்புது வாடிக்கையாளர்களும் அறிமுகமாகின்றனர். ஆர்டர்களைக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூரியர் சேவை மூலம் ஒரு வார காலத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்து விடுகிறோம். அவர்களுக்குப் பொருள் வந்து சேர்ந்துவிட்டதா என்பதையும் உறுதி செய்துகொள்கிறோம்” என்கிறார் பிரியா.
புதுமையைப் புகுத்தலாம்
சகோதரிகள் இருவரும் திருமணத்துக்குப் பிறகே இந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார்கள்.
“பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு பேரின் உதவி இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் எங்கள் தொழிலை வளர்த்திருக்க முடியாது” என சகோதரிகள் இருவரும் சொல்கின்றனர்.
“நமக்குத் தெரிந்ததையே தொழிலாகத் தொடரும்போது அதிக ஈடுபாடு காட்ட முடியும், அதில் புதுமையையும் புகுத்த முடியும். இவற்றைவிட நமக்கென ஒரு தனி இடத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்” என்கிற பிரியாவின் கருத்தை புன்னகையோடு ஏற்கிறார் பத்மினி.