

திருமணம், குழந்தைப் பேறு, வறுமை, உடல் குறைபாடு என எதுவுமே வெற்றிக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் வாசுதேவகி. வாழ்க்கை தன்னைப் பல திசைகளிலும் அலைக்கழித்தபோதும் குலையாத உறுதியோடு அனைத் தையும் எதிர்கொண்டு வென்றிருக்கிறார். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வாகை சூடி, சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் சார்பில் இடம்பெற்று, தங்கப் பதக்கம் பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர் இவர்.
எட்டு வயதில் நடந்த விபத்தில் இடது காலைப் பறிகொடுத்தார். பின்பு, செயற்கைக்கால் துணையுடன் விளையாட்டுக் களம் மட்டுமன்றி வாழ்க்கைக் களத்திலும் வெற்றிப் பயணத்தைத் தொடர் கிறார் இந்தச் சாதனைப் பெண்மணி.பள்ளிப் படிப்பு தொடங்கி, பணி புரியும் இடம், விளையாட்டுக் களம் எனக் கடந்த 43 ஆண்டுகளில் தான் சந்தித்த தொடர் சவால்களையும் அதை எதிர்கொண்ட விதத் தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார் வாசுதேவகி.
“மூன்றாம் வகுப்பு படித்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் முழங்காலுக்குக் கீழ் என் இடது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விபத்தால் இரண்டு ஆண்டுகள் என் பள்ளிப்படிப்பு முடங்கியது. அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணிபுரிந்த என் தந்தை சுப்பிரமணியம் பெரும் சிரமத்திற்கு இடையே எனக்கு செயற்கைக்கால் பொருத்தி நம்பிக்கை ஊட்டினார். முடங்கிய பள்ளிப்படிப்பு மீண்டும் தொடங்கியது.
செயற்கைக்கால் பொருத்தப்பட்டாலும் தினமும் பள்ளிக்குச் சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இந்த நேரத்தில் என் தோழி ஒருவர் கொடுத்த ஊக்கத்தால் நான் சைக்கிள் ஓட்டப் பழகினேன். நான் மாற்றுத்திறனாளி என்கிற எண்ணம் என்னை விட்டு அகல சைக்கிள் பயிற்சி உதவியது. அதைக் கவனித்த என் தந்தை எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். இன்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, இந்த சைக்கிள் பயிற்சி எனக்கு ஏணிப்படியாக இருந்தது” என்கிறார் வாசுதேவகி.
மீண்டும் விளையாட்டுப் பயிற்சி: பள்ளிப்படிப்பின் போதே வாசுதேவகிக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. பூப்பந்து, குண்டு ஏறிதல், வட்டு எறிதல் என எந்தப் போட்டியாக இருந்தாலும் அதில் பங்கெடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்தப் போட்டிகளில் வெற்றி இவர் வசமாகவில்லை என்றாலும், நம்பிக்கை வசமானது.
அவரது விளையாட்டுப் பயணத்தில் திடீர் தடைக்கல்லாகப் பள்ளிப்படிப்பு முடிந்ததும் திருமணம் நடந்தது. மணமான ஓராண்டில் குழந்தை பிறந்த நிலையில் விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்ட முடியாத நிலை. அப்போது வாசுதேவகியின் கவனம் படிப்பின் பக்கம் திரும்பியது.
“பள்ளி நாள்களுக்குப் பின் விளையாட முடியவில்லை என்றாலும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பிபிஏ பட்டப்படிப்பை முடித்தேன். 2007ஆம் ஆண்டு எனக்கு அங்கன்வாடி பணியாளர் பணி கிடைத்தது. பணி கிடைத்தும் படிப்பை விட மனமில்லை. பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்பு, ‘டிப்ளமோ இன் சைல்டு கேர்’ பட்டயப் படிப்பை முடித்தேன்” என்கிற வாசுதேவகி, “படிப்பு ஒருபுறம் இருந்தாலும் திருமணத்தால் தடைபட்ட என் விளையாட்டுப் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்” என்கிறார்.
ஈரோடு மாவட்ட அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் வாசுதேவகி பெரும் போராட்டத்திற்குப் பிறகு பங்கேற்றுள்ளார். இவரது விளையாட்டுத் திறனைக் கண்ட பயிற்சியாளர் இர்பான், கட்டணமின்றி பேட்மிண்டன் பயிற்சி அளித்தார். அதன் விளைவாக மதுரை, நாகர்கோவில், திருச்சி எனப் பல இடங்களில் நடந்த பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பொருளாதார நிலை கைகொடுக்கவில்லை.
எறிபந்து (த்ரோபால்) பயிற்சியாளர் ஆல்பர்ட் பிரேம்குமார், வாசுதேவகிக்குப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சியில் அவர் காட்டிய தீவிர முயற்சியால், தேசிய அளவிலான எறிபந்து அணியில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இருவரில் ஒருவராக வாசுதேவகி இடம்பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த எறிபந்துப் போட்டி யில், தங்கப்பதக்கம் வென்ற அணியில் வாசுதேவகியின் பங்கும் இருந்தது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம், திறமை மட்டும் போதாது. பொருளாதார உதவியும் தேவை என்பதே நிதர்சனம். இந்தச் சிக்கலால் வெளிநாடு களில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையும் இவருக்கு ஏற்பட்டது. வாசுதேவகியின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையிலும், எடை குறைவான செயற்கைக்கால் பொருத்த பல்வேறு தரப்பினரும் உதவினர்.
பாரா ஒலிம்பிக்கே இலக்கு: கடந்த ஆண்டு மே மாதம் மலேசியாவில் நடந்த எறிபந்துப் போட்டியில், பொருளா தாரச் சிக்கல் காரணமாகப் பங்கேற்க முடியாத நிலை வாசுதேவகிக்கு ஏற்பட்டது. தொழிலதிபர் ராஜராஜன் மூலமாக, ‘ஒளிரும் ஈரோடு’ அமைப்பின் கவனத்திற்கு இந்த விஷயம் எடுத்துச் செல்லப்பட, மலேசியா சென்று விளையாடத் தேவையான பொருளாதார உதவியை அந்த அமைப்பு வழங்கியது. இதற்கான பலனாக வாசுதேவகி இடம்பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது. இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூடானில் நடந்த சர்வதேசப் போட்டியில் இவர் பங்கேற்க ‘ஒளிரும் ஈரோடு’ அமைப்பு உதவியது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றது.
இடைப்பட்ட காலத்தில் வாசுதேவகியின் கணவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்ல, குடும்பச் சுமையையும் முழுமை யாகத் தன் தோளில் சுமந்துகொண்டு இந்தச் சாதனையை அவர் படைத் துள்ளார்.
“வரும் மார்ச் மாதம் சென்னையில் எட்டு நாடுகள் பங்கேற்கும் ஆசிய அளவிலான எறிபந்து விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இதற்கான தகுதிப் போட்டி தாய்லாந்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்று தகுதி பெற்றால் தான், ஆசிய அளவி லான போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
காலையில் உடற்பயிற்சி, அதைத் தொடர்ந்து அங்கன்வாடி பணி, மாலையில் மீண்டும் எறிபந்துப் பயிற்சி என ஒவ்வொரு நாளும் ஓடுகிறது. என் மகனுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்” என்று உறுதியோடு முடிக்கிறார் வாசுதேவகி.
ஆசையும் லட்சியமும் மெய்ப் படட்டும்!