

புத்தகத் திருவிழாவில் எனக்குக் கிடைத்த பொக்கிஷம், பெரியவர்கள் படிக்க வேண்டிய சிறார் நாவலான ‘குட்டி இளவரசன்’. பிரெஞ்சு எழுத்தாளரான அந்த்வான் து செந்த் – எக்சுபெரி எழுதிய நாவல் இதுவரை 150 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம். சிறிய நாவல்தானே என்று பையில் வைத்திருந்தேன். சேலம் சென்று வரும் பேருந்துப் பயணத்துக்குள் படித்து முடித்துவிட்டேன். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைக் கடக்கும் முன் கண்ணீர் என் கண்களைக் கடந்துவிட்டது. முடித்த பின்னும் வெகு நேரம் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
நாம் தொலைத்துவிட்ட குழந்தைமையைக் குட்டி இளவரசன் நமக்கு நினைவூட்டுகிறான். அவன் ஆசைகள் எளியவை. ஆனாலும், அவை அவனுக்கு முக்கியமானவை. அவனது ஒவ்வொரு சொல்லின் வழியாகவும் செயலின் வழியாகவும் நம் இதயத்தில் யாரும் தொடாத மெல்லிய பக்கங்களைத் தொட்டு அன்பு ஊற்றைச் சுரக்கவைக்கிறான்.
உதாரணமாக, அவன் தன் நண்பரான விமான ஓட்டியிடம் ஓர் ஆட்டின் படத்தை வரைந்து தரக் கேட்கிறான். அவர் வரைந்த ஆடுகள் அவனுக்குத் திருப்தி அளிக்காததால், அவர் அவனுக்கு ஒரு பெட்டியை வரைந்து கொடுத்து அதனுள்தான் ஆடு இருக்கிறது என்கிறார். அவன் அது உண்மையா என்று சந்தேகிக்கவில்லை. மாறாக அந்தப் பெட்டியில் ஆட்டுக்குப் போதுமான வெளிச்சம் கிடைக்குமா, அதற்கு அங்கே தேவையான உணவு இருக்கிறதா என்று கேட்கிறான்.
மேலும், அவன் வேற்று கிரகங்களுக்குப் பயணப்படும் வேளையில் அவனது சின்னஞ்சிறிய கிரகத்தில் அவன் மிக நேசிக்கும் செடியில் உள்ள ஒற்றை ரோஜா மலரைத் தனியே விட்டு வர, அவன் படும் துயரமும் அதைப் பாதுகாக்க ஒரு கண்ணாடி மூடியைச் செய்து அதை மூடி வைத்துவிட்டு வருவதும் பிற்பாடு அப்படி மூடி வைத்து விட்டு வருவது அந்த ரோஜாவின் சுதந்திரத்துக்குச் செய்யும் அநீதி என்று உணர்வதும்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த இடத்தில் ரோஜா என்பது பெண்களின் குறியீடாகவே எனக்குத் தோன்றியது.
இடையில் அவனுக்கு நரியின் நட்பு கிடைக்கிறது. அவனுக்கும் அந்த நரிக்கும் இடையில் நடக்கும் உரையாடலைப் படிக்கும்போதே நம் நண்பர்களின் நினைவுகள் இதயத்தில் தேன் போலப் பரவுவதை உணர முடியும். இந்தக் கதையை படித்துவிட்டால் இரவில் உங்கள் வீட்டின் ஜன்னலை மூடிவைக்க மாட்டீர்கள். வானில் தெரியும் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில், தங்க நிறச் சுருள் முடியைக் கொண்ட அந்தக் குட்டி இளவரசனின் புன்னகை முகமும் அவனின் ஆசை ரோஜாவும் உங்களுக்குக் காணக் கிடைக்கலாம்.
- கே. சந்திரா, தர்மபுரி.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |